விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 31, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைக்களஞ்சியம் (Encyclopedia) என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ குறிப்பிட்ட துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம். கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். தற்காலத்தில் விக்கிப்பீடியா போன்ற இணையக் கலைக்களஞ்சியங்கள் பரந்த பயன்பாட்டுக்கு வருகின்றன.


மேகநாத சாஃகா (1893 - 1956) இந்திய வானியற்பியலாளர். சாஃகா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர் இவரே. சூரிய நிறமாலையில் காணப்படும் (உட்கவர்) கரு வரிகள் பிரான்கோபர் (Fraunhofer) வரிகள் எனப்படும். இவ்வரிகளின் தோற்றத்துக்கான அடிப்படை விளக்கத்தை கிர்ச்சாஃப் (Kirchhoff) அளித்தார். கிர்ச்சாஃபின் விளக்கம் சூரியனிலுள்ள தனிமங்களுக்கும் இவ்வரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற அளவில் இருந்தது. சாஃகா உருவாக்கிய சமன்பாடு, இவ்வரிகளின் மூலத்தை விளக்கியது மட்டுமில்லாது சூரியன், விண்மீன்கள் இவற்றின் வெப்பநிலை, அழுத்தம் போன்ற புறநிலை இயல்புகளை அறியவும் உதவுகிறது.