விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 01, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழியின் தோற்றம் என்பது, மனிதரின் படிமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தில், அவர்கள் மொழியைப் பயன்படுத்துவதற்கான வல்லமையைப் பெற்றதைக் குறிக்கிறது. இக்கொள்கை ஓமோ சாப்பியன்கள், மொழியைப் பயன்படுத்தும் வல்லமையற்ற, மனிதரல்லாத மூதாதையிலிருந்து தோன்றினர் என்பதை உட்கிடக்கையாகக் கொண்டுள்ளது. மொழி வல்லமை, அவர்களின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியதுடன், பிற உயிரினங்களில் இருந்து அவர்களை வேறுபடுத்தும் முக்கியமான காரணிகளுள் ஒன்றான உயிரியல் இயல்பு ஆகவும் உள்ளது. எழுத்து மொழியைப் போலன்றிப் பேச்சு மொழி அதன் இயல்புகள் குறித்தோ அல்லது அது இருந்ததைக் குறித்தோ எவ்விதமான நேரடி வரலாற்றுத் தடயங்களையும் விட்டுச் செல்லவில்லை. இதனால் மொழியின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது கடினமாக இருப்பதால், இதற்காக அறிவியலாளர்கள் மறைமுகமான முறைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் மனிதனுடைய தோற்றம் பற்றிச் சார்லஸ் டார்வின் தனது கோட்பாட்டை முன்வைத்த காலத்தில் இருந்தே, இத் தலைப்புப் பெருமளவு கவனத்தை ஈர்த்து வந்திருப்பதுடன், சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வந்துள்ளது.


பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bacillus thuringiensis) அல்லது சுருக்கமாக பி.டி. (Bt) என்பது ஒரு மண்வாழ் கிராம்-நேர் நுண்ணுயிர். இது இயற்கையில் பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி போன்றவற்றின் வயிற்றில் உயிர்வாழ்கின்றது. இது உயிர்க்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது (வணிகப் பெயர்கள் டைப்பெல் (Dipel), தூரிசைடு (Thuricide)); இந்த நுண்ணுயிரியை 1901 ஆம் ஆண்டு ஷிகெடானே இசிவாட்டா (Shigetane Ishiwata) என்ற நிப்பானிய உயிரியலாளர் கண்டுபிடித்தார். பின்னர் 1911 -இல் எர்ணசுட்டு பெர்லினர் என்ற செருமானியர் மாவு விட்டில் புழுவில் ஏற்படும் "இழ்ச்லாவ்சூக்ட்" (Schlaffsucht) என்ற நோயை ஆராயும் போது பி.டி.யைப் பிரித்தெடுத்தார். இந்நுண்ணுயிரிகள் உருவாக்கும் ஒரு வகை படிக அகநச்சுகள் (crystal endotoxins) அந்துப்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், ஈக்கள், கொசுக்கள், வண்டுகள், குளவிகள், தேனீக்கள், எறும்புகள் ஆகிய உயிரின வகைகளிலுள்ள குறிப்பிட்ட சிலவற்றுக்கு நச்சாக விளங்குகின்றன. இவ்வகை படிக நச்சுக்களின் இருப்பிடமாக பி.டி. உள்ளதால், இதனைக் கொண்டு மரபணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கப்படுகின்றன.