விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 3, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை என்பது கிபி 2ஆம் நூற்றாண்டில் சங்ககாலச் சேரர்களின் துறைமுகப் பட்டினமான முசிறித் துறைமுக வணிகர்களுக்கும் எகிப்து நாட்டு துறைமுகப் பட்டினமான அலெக்சாந்திரியா வணிகர்களுக்கும் நடந்த வணிக ஒப்பந்தம் ஆகும். தற்போது வியன்னா நகர அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தக் கோப்பு எகிப்திய மற்றும் முசிறி வணிகர்களுக்கிடையே நடந்த கடன் மாற்று விவரங்களை குறிப்பிடுகிறது. இதில் கங்கைச் சமவெளியிலுள்ள இலாமிச்சை, தந்தம், ஆடைகள் போன்றவற்றை 25 சதவீத சுங்க வரியுடன் விற்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய வரலாற்றில் திருப்புமுனையாய் அமைந்த இந்த உடன்படிக்கையிலுள்ள செல்வத்தைக் கொண்டு பண்டைய எகிப்து நாட்டு நைல் நதியை சுற்றியுள்ள 2400 ஏக்கர் பண்ணை நிலங்களை விலைக்கு வாங்கலாம். மேலும்


ஐரோ வலயம் ஐரோ நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட பதினாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளியல், நாணவியல் ஒன்றியமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பு நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே பொருளியல், வணிக நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயன்று வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. 1998இல் பதினோரு உறுப்பு நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சி பெற்றிருந்தன. இவை 1999, சனவரி 1 முதல் ஐரோ பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் ஐரோ வலயம் உருவானது. பின்னர் கிரேக்கம் 2000லும் சுலோவீனியா 2007 இலும் சைப்பிரசு, மால்டா 2008 இலும் சிலோவாக்கியா 2009 இலும் தேர்ச்சி பெற்று ஐரோ வலயத்தில் இணைந்தன. மேலும்...