விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 15, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூச்சி கணுக்காலிகள் (ஆத்திரப்போடா) வகையுள் அடங்கும், முதுகெலும்பிலிகளின் ஒரு வகுப்பைச் சேர்ந்த முதன்மையான உயிரினமாகும். இவற்றின் முதிர்நிலைகள் கைட்டின் எனப்படும் வேதிப்பொருளால் ஆன புறவன்கூட்டைக் கொண்டிருப்பதுடன், தலை, மார்பு, வயிறு என்ற மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட உடலையும், மூன்று சோடிக் கால்களையும், கூட்டுக்கண்களையும், ஒரு சோடி உணர்வுறுப்புக்களையும் கொண்டவையாக இருக்கும். இவை தமது வாழ்க்கை வட்டத்தில் வெவ்வேறு வளர்நிலைகளைக் கொண்டிருப்பதுடன் உருமாற்றத்திற்கு உட்படுவனவாக இருக்கின்றன. பூச்சிகளைப் பற்றிய அறிவியல் அடிப்படையிலான ஆய்வுத்துறை பூச்சியியல் எனப்படும். உலகிலுள்ள விலங்குகளில் பூச்சிகளே மிக அதிக எண்ணிக்கையில் இனங்களையும், மிக அதிக எண்ணிக்கையில் தனியன்களையும் கொண்ட விலங்குகளாக இருக்கின்றன. மேலும்...


புனித பேதுரு கல்லறை என்பது வத்திக்கான் நகரில் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழ் புனித பேதுரு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்டதாக நிர்ணயிக்கப்படும் நினைவுக் கட்டடத்தையும் அதைச் சூழ்ந்துள்ள கல்லறைக் குழிகளையும் உள்ளடக்கிய இடம் ஆகும். கி.பி. 130-300 காலக் கட்டத்தில் உருவாக்கப்பட்ட நினைவுக் கட்டடத் தொகுதியின் மேற்கு ஓரத்தில் பேதுரு கல்லறை உள்ளது. கி.பி. சுமார் 330 இல், காண்ஸ்டண்டைன் மன்னர் ஆட்சியின்போது புனித பேதுரு கல்லறை மீது ஒரு பெருங்கோவில் கட்டப்பட்டது. அக்கோவிலுக்கான அடித்தளம் அமைத்த போது ஏற்கெனவே இருந்த நினைவுக் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு, மண்ணால் நிரப்பப்பட வேண்டியதாயிற்று. இன்றைய புனித பேதுரு பெருங்கோவிலின் கீழே புனித பேதுரு கல்லறைப் பகுதியில் அமைந்த இரண்டாம் நூற்றாண்டு நினைவிடத்தில் இரண்டு முறை அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகளின் போது பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும்...