விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 27, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னன். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்டான். இவனை இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழ வேந்தன், சேர வேந்தன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தனர். அவர்களை எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தோற்கடித்தான். இவன் போருக்குச் சென்ற போது சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியை கழட்டவில்லை என்பது இவன் மிகச் சிறிய வயதிலேயே போருக்குச் சென்றவன் என்பதைக் காட்டுகிறது. இம்மன்னனின் காலத்தை அறிஞர்கள் இரண்டு வகையாக கணிக்கின்றனர். ஒன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தம்பியான வெற்றிவேற் செழியன் மகன் என்பது ஒரு கருத்து. மற்றொன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனுக்கு முன்னோன் என்ற கருத்து. மேலும்...


வளர்ப்பூடகம் என்பது நுண்ணுயிர்கள், உயிரணுக்கள், இழையம் போன்றவை வளர்வதற்கு தேவையான போசாக்கைக் கொண்டிருக்கும், செயற்கையாக தயாரிக்கப்பட்ட ஒரு திரவ, அல்லது கூழ்போன்ற (பகுதி-திண்ம) அல்லது திண்மப் பதார்த்தமாகும். சைகொட்ரலா படென்சு போன்ற சில பாசி வகைத் தாவரங்களும் வளர்ப்பூடகமாகப் பயன்படும். வேற்பட்ட வகையான உயிரணுக்கள் வளர்வதற்கு வேறுபட்ட வளர்ப்பூடகங்கள் தேவைப்படும். வளர்ப்பூடகங்கள் உயிரணு வளர்ப்பு, இழைய வளர்ப்பு செயல்முறைகளில் பயன்படுத்தப்படும். வைரசுக்கள் கட்டாயமான ஒட்டுண்ணி வாழ்வு வாழும் உயிரினங்களாக இருப்பதனால், அவற்றை வளர்ப்பதாயின் அவற்றிற்கான வளர்ப்பூடகத்தில் உயிருள்ள உயிரணுக்கள் இருத்தல் அவசியமாகும். வளர்ப்பூடகங்கள் முக்கியமாக இரு வகைப்படும். ஒன்று நுண்ணுயிர்களை ஆய்வு கூடங்களில் வளர்த்தெடுக்க உதவுபவை. மற்றையது, தாவரம், விலங்குகளிலிருந்து பெறப்படும் சில உயிரணுக்களோ, கலங்களோ வளர்வதற்குத் தேவையான வளர்ப்பூடகங்கள். மேலும்...