விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 24, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அதிகாரபூர்வ மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி அல்லாத மாநிலங்களின் கல்வி பாடத்திட்டங்களில் இந்தியை கட்டாய பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால், பெரும்பாலும் சனநாயக, அற வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும். 1937 இல் முதல் முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறை வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சியின் இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு பள்ளிகளில் இந்தி படிப்பதை கட்டாயமாக்கியதை எதிர்த்து நீதிக்கட்சியும், பெரியார் ஈ.வெ.இராமசாமியும் மூன்று ஆண்டுகள் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு 1939ஆம் ஆண்டு பதவிவிலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் எர்சுக்கின் பிரபு பிப்ரவரி 1940 இல் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை இரத்து செய்தார். மேலும்


அ. மாதவையா (1872-1925) தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், புதின ஆசிரியர், பத்திரிக்கையாசிரியர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர். மாதவையா, திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சென்னை கிறித்துவ கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்து, அக்கல்லூரியிலேயே ஆசிரியராக பணிபுரிந்தார். 1892 இல் விவேக சிந்தாமணி என்ற பத்திரிகையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத் தொடங்கினார். தமிழில் பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற புதினத்திற்குப் பின்பு எழுதப்பட்ட இரண்டாம் தமிழ் புதினம் இதுவாகும். ஆனாலும், அத்தொடர் 1903 இலேயே முத்துமீனாட்சி என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. 1898-99 காலப்பகுதியில் "பத்மாவதி சரித்திரம்" என்ற நாவலின் இரண்டு பாகங்களை எழுதினார். 1925 இல் பஞ்சாம்ருதம் என்ற பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை 1924 இல் எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா காலமானார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேலவை உறுப்பினராக மாதவையா 1925 தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். மேலும்..