விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 13, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தங்கம்மா அப்பாக்குட்டி (1925-2008) இலங்கையில் நன்கு அறியப்பட்ட சமூக சேவையாளரும், சமயச் சொற்பொழிவாளரும் ஆவார். ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியவர். ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் தலைவராகச் செயற்பட்டு வந்தார். "சிவத்தமிழ்செல்வி" என்று அழைக்கப்பட்டு வந்தார். பயிற்றப்பட்ட தமிழாசிரியையான இவர் தமிழையும் சைவத்தையும் முறையாகக் கற்று 1952 இல் பாலபண்டிதராகத் தேர்வடைந்து 1958இல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டத்தையும் பெற்றார். யாழ் பகுதியில் இறை வழிபாட்டை மேம்படுத்தும் வழியில் அங்கு ஒரு சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் இவருக்கு முதன்மையான பங்குண்டு. சமயச் சொற்பொழிவுப் பணிமூலம் சமய வளர்ச்சிக்குத் தனது தொண்டு செய்யும் வகையில் தனது சமயப்பணியைத் துவக்கினார். ஆலய வளாகத்தில் ஆதரவற்ற சிறுமிகளுக்கென "துர்க்காபுரம் மகளிர் இல்லம்" என்ற பெயரில் ஆதரவு நிலையம் ஒன்றை நிறுவி சேவையாற்றி வந்தார். ஈழப்போரில் அகதிகளாக்கப்பட்ட பல வயோதிபர்களுக்கு கோயிலில் அடைக்கலம் கொடுத்தார். மேலும்...


சஞ்சிக்கூலிகள் என்பது 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில், தென்னிந்தியாவில் இருந்து மலாயாவுக்கு கூலி வேலைகள் செய்ய கொண்டு வரப்பட்ட இந்தியர்களைக் குறிக்கும் ஒரு வழக்குச்சொல் ஆகும். இது சஞ்சி எனும் மலாய்ச் சொல்லில் இருந்து உருவானது. தமிழில் ஒப்பந்தம் என்று பொருள். மலாயாவில் இருந்த பிரித்தானியத் துரைமார்கள் தென்னிந்தியாவிற்கு கங்காணிகளை அனுப்பி அங்கிருந்து ஆள் பிடித்து வருமாறு பணிக்கப்பட்டனர். கங்காணிகளின் ஆசை வார்த்தைகளை நம்பிய தென்னிந்திய மக்கள், மலாயாவுக்குள் ஆயிரக்கணக்கில் அழைத்து வரப்பட்டனர். இப்படி அழைத்து வரப்படுவற்கு கங்காணி முறை என்று பெயர். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் சஞ்சிக்கூலிகளாய் மலாயாவுக்கு வந்தார்கள். இந்தக் கங்காணிகள், தென்னிந்தியாவில் கொண்டு வரப்பட்ட கூலிகளை அடிமைப்படுத்தினர். முதலாளிமார்களின் கைப்பிள்ளையாகவும் சேவகம் செய்தனர். தன் சொந்த இன மக்களையே காசுக்காக அடித்து துவைத்துக் காயப்படுத்தினர். 1826 இல் ரீயூனியன் தீவுக்கூட்டத்தில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர். ஆகவே, பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டு வருவதற்கு முதல் அத்திவாரத்தைப் போட்டனர். மேலும்...