முதலாம் விமலதர்மசூரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதலாம் விமலதர்மசூரியன்
கண்டியின் அரசன்
SpilbergenVimala.jpg
1602இல் முதலாம் விமலதர்மசூரியனை ஸ்பில் பேர்ஜன் சந்தித்தல்
ஆட்சிக்காலம் 1591–1604
பட்டங்கள் கோணப்பு பண்டாரன்
தொன் ஜூவான்
பிறப்பிடம் இலங்கை
இறப்பு 1604
இறந்த இடம் இலங்கை
புதைக்கப்பட்டது இலங்கை
முன்னிருந்தவர் தொன் பிலிப்
பின்வந்தவர் செனரத்
துணைவர் தொனா கதரீனா
தந்தை வீரசுந்தர பண்டாரன்

முதலாம் விமலதர்மசூரியன் அல்லது கோணப்பு பண்டாரன் அல்லது தொன் ஜூவான் (Vimaladharmasuriya I அல்லது Konappu Bandara அல்லது Don Juan, சிங்களம்: පළමුවන විමලධර්මසූරිය அல்லது කොනප්පු බණ්ඩාර அல்லது දොන් ජුවන්) என்பவர் இலங்கையில் 1591இலிருந்து 1604 வரை ஆட்சி செய்த கண்டி இராச்சிய மன்னராவார்.[1] போர்த்துக்கேயருக்கு எதிராக இவர் புரிந்த தந்துரேப் போர், பலனப் போர் என்பன குறிப்பிடத்தக்கவை.[2]

வரலாறு[தொகு]

கோணப்பு பண்டாரன் வீரசுந்தர பண்டாரனின் மகன் ஆவார்.[3] முதலாம் இராஜசிங்கன் வீரசுந்தர பண்டாரனின் மீது சந்தேகப்பட்டு அவரைக் கொலை செய்தவுடன், கோணப்பு பண்டாரன் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்தார்.[4] கோணப்பு பண்டாரன் தொன் ஜூவான் என்னும் பெயரில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டார்.[5] இதன் பின்னர், போர்த்துக்கேயர் தொன் ஜூவானின் தலைமையிலான படையைக் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற அனுப்பி வைத்தனர்.[6] கண்டி இராச்சியம் கைப்பற்றவுடன், தொன் பிலிப் (யமசிங்க பண்டாரன்) அரசனானார்.[7]

ஆனாலும் யமசிங்க பண்டாரன் இறந்த பின்பு, தொன் ஜூவான் போர்த்துக்கேயருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து 1591ஆம் ஆண்டு முதலாம் விமலதர்மசூரியன் என்ற பெயரில் கண்டிக்கு அரசனானார்.[8]

போர்கள்[தொகு]

1592 போர்[தொகு]

முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்கு அரசனானதும் 1592இல் முதலாம் இராஜசிங்கன் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமித்தார்.[9] ஆனாலும் இவ்வாக்கிரமிப்பு முதலாம் விமலதர்மசூரியனால் முறியடிக்கப்பட்டது.[10] முதலாம் இராஜசிங்கன் போரில் தோல்வியுற்றுத் திரும்பிச் செல்லும் தருணத்தில் 1593ஆம் ஆண்டு பெத்தங்கொடை என்னும் இடத்தில் மூங்கிற் சிராய் குத்தி இறந்தார்.[11]

தந்துரேப் போர்[தொகு]

1594ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் பேரோ லோபேஸ் டிசூசா என்ற தளபதியின் கீழ் ஒரு படையைக் கண்டிக்கு அனுப்பி வைத்தார்கள்.[12] முதலாம் விமலதர்மசூரியன் இப்போரில் போர்த்துக்கேயரைத் தோற்கடித்தார்.[13] தந்துரே எனும் இடத்தில் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பை முறியடித்ததால் இப்போர் தந்துரேப் போர் என அழைக்கப்படுகின்றது.[14]

பலனப் போர்[தொகு]

1602ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்காகத் தொன் ஜெரனிமோ டி அசவேது எனும் படைத் தளபதியின் கீழ் ஒரு படையை அனுப்பி வைத்தனர்.[15] இவ்வாக்கிரமிப்பின்போது போர்த்துக்கேயர் வெற்றிகரமாக முன்னேறிச் சென்றனர். ஆனாலும் போர்த்துக்கேயரின் படையில் சேவை செய்து வந்த இலங்கைப் படை வீரர்கள் (லஸ்கரின் படையினர்) முதலாம் விமலதர்மசூரியனின் படையுடன் இணைந்து கொண்டதால் போர்த்துக்கேயர் தோற்கடிக்கப்பட்டனர். பலன எனும் இடத்தில் போர்த்துக்கேயர் தோற்கடிக்கப்பட்டதால் இப்போர் பலனப் போர் என அழைக்கப்படுகின்றது.

சேவைகள்[தொகு]

முதலாம் விமலதர்மசூரியன் சப்பிரகமுவ மாகாணத்தி்ல் போர்த்துக்கேயரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகத் தெல்கமுவ விகாரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புத்தரின் தந்ததாதுவைக் கொண்டு வந்து கண்டியிலுள்ள தலதா மாளிகையில் வைப்பித்தார்.[16] அத்தோடு, ஒவ்வோர் ஆண்டும் தலதா ஊர்வலத்தை நடத்துவித்தார். மேலும் பர்மாவின் தென் பகுதியிலிருந்து புத்த பிக்குகளை வரவழைத்து உபசம்பத என்னும் சடங்கைச் செய்வித்தார். இலங்காதிலக, கடலாதெனிய விகாரை, ரிதி விகாரை, தெகல்தொருவ முதலிய விகாரைகளைப் புனருத்தாரணம் செய்த முதலாம் விமலதர்மசூரியன் கொத்மலை, ஊவா, ஹரிஸ்பத்து, ஹேவாஹெட்ட, யடிநுவர, உடதும்பர, உடுநுவர, வலப்பன முதலிய இடங்களில் விவசாய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார். அத்தோடு ஊவாவில் இரும்புத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. கண்டி இராச்சியம் (தமிழில்)
  2. கண்டி ராஜ்யம் (ஆங்கிலத்தில்)
  3. சுருக்கமான மகாவம்சம் இலங்கையில் பௌத்தத்தின் வரலாறு (ஆங்கிலத்தில்)
  4. கண்டி ராச்சியம் (சிங்களத்தில்)
  5. கண்டியின் 1ஆம் விமலதர்மசூரியன் (ஆங்கிலத்தில்)
  6. இளவரசன் தொன் பிலிப்-கண்டியின் புதிய அரசன் (ஆங்கிலத்தில்)
  7. 1513-1521 கோட்டை இராச்சியம் & போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு (ஆங்கிலத்தில்)
  8. கண்டி இராச்சியம்-கண்டி (ஆங்கிலத்தில்)
  9. இலங்கையின் ஒரு சிறிய வரலாறு (ஆங்கிலத்தில்)
  10. சீதாவக்கையினதும் போர்த்துக்கல்லினதும் எழுச்சி (ஆங்கிலத்தில்)
  11. சீதாவாக்கையின் இராஜசிங்க மன்னனின் இறப்பு (ஆங்கிலத்தில்)
  12. தந்துரேயின் வரலாற்றுப் போர் (ஆங்கிலத்தில்)
  13. கண்டியின் 1-ம் விமலதர்மசூரியன் (ஆங்கிலத்தில்)
  14. கண்டியின் 1ஆவது விமலதர்மசூரியன் (ஆங்கிலத்தில்)
  15. போர்த்துக்கேயரின் இலங்கை வருகை (தமிழில்)
  16. இலங்கையிலுள்ள புராதனப் பௌத்தப் புண்ணிய இடங்கள் (ஆங்கிலத்தில்)