போரோபுதூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
போரோபுதூர் என்பது இந்தோனீசியாவில் உள்ள ஜாவாத் தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மகாயான பௌத்த நினைவுச் சின்னம் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது ஆறு சதுர வடிவிலான மேடை அமைப்புக்களையும், அதன்மேல் அமைந்த மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது. இவை, 2672 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட கற்சுவர்களாலும், 504 புத்தர் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது[1]. உச்சியில் அமைந்துள்ள மேடையின் நடுவில், குவிமாடமும் அதனைச் சுற்றி துளைகள் கொண்ட தாது கோபுரங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள இருந்த நிலையிலான 72 புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன.
இந் நினைவுச்சின்னம், புத்தருக்கான கோயிலாக விளங்குவதுடன், பௌத்த யாத்திரைக்குரிய இடமாகவும் உள்ளது. புனிதப்பயணம் செய்வோர், இதன் அடியில் தொடங்கி, இதைச் சுற்றியபடியே மூன்று தளங்களூடாக மேலேறுவர். இம் மூன்று தளங்களும், காமதாது, ரூபதாது, அரூபதாது எனப்படும் பௌத்த அண்டக் கோட்பாட்டில் கூறியுள்ள்வாறு மூன்று நிலைகளைக் குறிக்கின்றது. இந்தப் பயணத்தின்போது, புனிதப்பயணிகள், 1,460 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட சுவர்கள், காப்புச் சுவர்கள் ஆகியவற்றுடன் அமைந்த படிக்கட்டுகள், நடைவழிகள் என்பவற்றினூடாகச் செல்கின்றனர்.
14 ஆம் நூற்றாண்டில், ஜாவாவின் பௌத்த, இந்து அரசுகளின் வீழ்ச்சியுற்று, ஜாவாவில் இசுலாம் தலையெடுத்ததோடு போரோபுதூர் கைவிடப்பட்டதாகச் சான்றுகள் கூறுகின்றன[2] . 1814 ஆம் ஆண்டில் ஜாவாவின் பிரித்தானிய ஆட்சியாளராக இருந்த தாமஸ் ராஃபில்ஸ் (Thomas Raffles) என்பவரால் இது மீண்டும் கண்டிபிடிக்கப்பட்டு வெளிச்சத்துக்கு வந்தது. இதன் பின்னர் இந்த நினைவுச் சின்னம் பல தடவைகள் புதுப்பிக்கப் பட்டது. இந்தோனீசிய அரசும், யுனெஸ்கோவும் இணைந்து செயற்படுத்திய பெரிய அளவிலான மீளமைப்புத் திட்டம் ஒன்று 1975 ஆம் ஆண்டுக்கும் 1982 ஆம் ஆண்டுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த நினைவுச்சின்னம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டது[3].
[தொகு] குறிப்புகள்
- ↑ Soekmono (1976), page 35-36.
- ↑ Soekmono (1976), page 4.
- ↑ "Borobudur Temple Compounds". UNESCO World Heritage Centre. UNESCO. பார்க்கப்பட்ட நாள் 2006-12-05.