பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம்பு
உள்நாட்டு தைப்பன், உலகிலேயே அதிக நஞ்சுள்ள பாம்பினம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு: ஊர்வன
வரிசை: செதிலுடைய ஊர்வன
குடும்பம்: பாம்பு
லின்னேயஸ், 1758
வடிகால் குழாய் மேல் பச்சைப் பாம்பு ஒன்று.

பாம்பு என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் ஆகும். இது முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்டது. இதற்கு கால்கள் இல்லை ; எனினும் தன் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. பாம்புகளில் தோராயமாக 3,600 இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் நச்சுப் பாம்புகள் ஆகும். இந்தியாவிலுள்ள ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள் ஆகும். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் உணவுக்காகவும் நஞ்சை பயன்படுத்துகின்றன. இரைகளை பற்களால் கவ்விக் கடிக்கும்போது பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நஞ்சு வெளியேறி இரையின் உடலுள்ளே சென்று அதைக் கொல்கிறது.

இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுடையவை. ஒருசில நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. அவற்றில் நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும். வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து குருதி உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்ததாகும். இலங்கையில் தோராயமாக 200 பாம்பு இனங்கள் உள்ளன.

உடலமைப்பு[தொகு]

தோலும் நிறமும்[தொகு]

பாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இவை தங்கள் தோலை உரித்து விடுகின்றன. இவ்வாறு தங்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் பண்பின் காரணமாக இவை மருத்துவத் துறையில் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்குறியீடு மருந்துகள் மூலம் குணமடைவதைக் குறிக்கிறது.

எலும்புச் சட்டம்[தொகு]

பெரும்பாலான பாம்புகளின் எலும்புக்கூடு என்பது மண்டை ஓடு, முதுகெலும்புகள் மற்றும் விலா எலும்புகள் ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ளது. பாம்பிற்கு 200 முதல் 400 (அல்லது அதற்கு மேற்பட்ட) முதுகெலும்புகள் உள்ளன. பாம்பின் நன்கு விரியக்கூடிய தாடை எலும்புகள் பெரிய இரைகளை உட்கொள்ள உதவுகின்றது.

உள்ளுறுப்புகள்[தொகு]

1: esophagus2: trachea3:tracheal lungs4: rudimentary left lung4: right lung6: heart7: liver8 stomach9: air sac10: gallbladder11: pancreas12: spleen13: intestine14: testicles15: kidneys
பாம்பின் உள்ளுறுப்புகள். 1 உணவுக்குழாய் 2 மூச்சுக்குழல் 3 மூச்சுக்குழாய்ப்பை, 4 வளர்ச்சியடையாத இடதுநுரையீரல், 5 வலது நுரையீரல், 6 இதயம், 7 கல்லீரல், 8 இரைப்பை, 9 காற்றுப்பை 10 பித்தப்பை 11 கணையம், 12 மண்ணீரல், 13 குடல், 14 விரைகள், 15 சிறுநீரகங்கள்.

பாம்புகளின் இடது நுரையீரல் மிகவும் சிறியது சிலவற்றில் இல்லாமலும் இருப்பதுண்டு. எனவே பாம்புகளின் நுரையீரல்களில் வலதுபக்கம் மட்டுமே வேலை செய்கிறது.

உணவுப்பழக்கம்[தொகு]

அனைத்து வகையான பாம்புகளும் ஊனுண்ணிகள் ஆகும். இவை சிறு விலங்குகளை உணவாகக் கொள்கின்றன. சிறிய ஊர்வன, எலி, பறவைகள், அவற்றின்முட்டைகள், மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை உணவாகக் கொல்கின்றன. "ராஜநாகம் என்ற பாம்பினம் மற்ற பாம்புகளை மட்டுமே உணவாக உட்கொள்கிறது. சில பாம்புகள் தனது நச்சுக்கடியின் மூலம் இரையைக் கொல்கின்றன. சில பாம்புகள் இரையை சுற்றி வளைத்து நெருக்கிக் கொல்கின்றன. சில பாம்புகள் தனது இரையை உயிருடன் முழுதாக விழுங்கி விடுகின்றன.

வாழ்முறை இனப்பெருக்கம்[தொகு]

பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் விரியன்கள் போன்ற சில பாம்புகள் குட்டி போடுகின்றன. மண்பாம்புகளின் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப் பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு தருவதில்லை. சில் பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன. ரீனல் பாம்புகள் தரையில் இலைகளை கூடாகக்கட்டி அதில் முட்டை இடுகின்றன. பாம்புகளில் குருட்டுப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் தானாகவே கருவடைகிறது. இதில் பெண் இனம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.

சில பாம்பு இனங்கள்: மலைப்பாம்பு

நச்சற்ற பாம்புகள்:

கொடிய பாம்புகள்[தொகு]

சில வகைப் பாம்புகள் அதித நஞ்சினை உருவாக்கும் வல்லமையுடன் இருக்கின்றன. உலகின் மிக கொடிய பாம்புகளாக கருதப்படும் பாம்பினங்கள்:

  • கருப்பு மாம்பா ஆப்பிரிக்காவை வாழிடமாகக் கொண்ட ஒரு நச்சுப்பாம்பு இனம் ஆகும். இதுதான் உலகிலேயே மிக விரைந்து ஊர்ந்து செல்லவல்ல பாம்பினம். மணிக்கு 20 கி.மீ(12.5 மைல்கள்) விரைவில் சிறு தொலைவு ஊரவல்லது. ஒரே கடியில் 100 மில்லி கிராம் நஞ்சை உட்செலுத்தும் என்றும் சுமார் 10 மில்லி கிராம் கொடுத்தாலே மக்கள் இறந்துவிடுவார்கள் என்பது அறியத்தக்கது, உடலில் உள்ள தசைகளை இந்த நஞ்சு தாக்குவதால், உறுப்புகள் செயல் இழந்து இறப்பு நேரிடும்.
  • இந்திய நாகம் இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும். இவை ஏறத்தாழ இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக் கூடியன. இவை இந்தியத் துணைக்கண்டத்தின் கொடிய பாம்புகளாக கருதப்படும் நான்கு நச்சுப்பாம்புகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் பெரும்பாலான இறப்புக்களுக்கும் இவையே காரணமாக விளங்குகின்றன.
  • சுருட்டைவிரியன் நான்கு பெரும் கொடிய நச்சுப்பாம்புகள் பட்டியலில் இதுவும் ஒன்றாகும். அளவில் சிறியதாக இருந்தாலும் இதன் நஞ்சு சிவப்பணுக்களை அழிக்கும் வகையைச் சேர்ந்தது; வீரியம் வாய்ந்தது; தொல்லை தந்தால் உடனே தாக்கக்கூடியது; பெரும்பாலான மனித இறப்புகளுக்கு சுருட்டை விரியன்களும் காரணமாகின்றன.
  • கண்ணாடி விரியன் பெரும் நான்கு பட்டியலில் இதுவும் ஒன்று. கண்ணாடி விரியன் பாம்பின் நச்சும் குருதி அழிப்பானாகும்.
  • இராச நாகம் என்பது தென்கிழக்கு ஆசியபகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். உலகில் உள்ள நச்சுப்பாம்புகளில் இதுவே மிக நீளமானது. சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது.[1] பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் வீரியம் ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் மனித இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கிறது.
  • பச்சை விரியன் என்பது இலங்கையில் காணப்படும் விரியன் இனத்தைச் சேர்ந்த ஒரு நச்சுப் பாம்பு. இது வரை இதன் சிற்றினங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. ஆண் பாம்புகள் 70 செ.மீ நீளம் வரையும் பெண் பாம்பு 130 செ.மீ வரையும் வளரக்கூடியவை. இலங்கையில் பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. தரை மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

இந்திய வனச்சட்டமும் பாம்புகளும்[தொகு]

இந்திய வனச்சட்டம் 1972ன் படி பாம்புகளை துன்புறுத்துவதோ கொல்வதோ தண்டனைக்குரிய குற்றம். இருப்பினும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின்மையால் பெரும்பாலானோர் பாம்புகளை கண்டவுடன் கொன்று விடுகின்றனர்.

மனித நாகரிகங்களில் பாம்பு[தொகு]

பாரசீகம், இந்தியா, இலங்கை, சீனா, சப்பான், பர்மா, சாவா, அரேபியா, எகிப்து, கிரீசு, இத்தாலி, பெரு, அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபாட்டின் அடையாளங்கள் காணப்படுகின்றன. சில நாடுகளில் பாம்பு நல்ல தெய்வமாகவும் சிலவற்றில் கெட்ட தெய்வமாகவும் கொள்ளப்பட்டது.[2]

பழமொழிகள்[தொகு]

  • பாம்பென்றால் படையும் நடுங்கும்
  • பாம்பின் கால் பாம்பறியும்
  • பாம்பிற்கு பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்
  • "பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா?"
  • "பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்கு களவிலே சாவு"
  • "பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது."
  • "பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!"
  • "பாம்பு தின்ற ஊருக்குப்போனா நடுக்கண்டம் நம்ப கண்டம்."
  • "பாம்பு என்று அடிக்கவும் முடியாது, பழுதை என்று தாண்டவும் முடியாது."
  • "பாம்பு கடிச்சுதா? பயம் கடிச்சுதா?"
  • "போதாத காலத்தில் புடுக்கும் பாம்பாய்ப் பிடுங்கும்."
  • "பாம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை நிமிஷம்."

பழங்கதைகளில் பாம்பு[தொகு]

இந்து சமயம்[தொகு]

  • இந்துக்களின் புராணங்களில் பாம்புகள் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம் ஆகும். இந்துக்களின் காக்கும் கடவுளான விஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற நாகம் ஆதிசேஷன் ஆகும்.அழிக்கும் கடவுளான சிவபெருமானது கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பின் இதன் சகோதரனாகவும் கருதப்படுகிறது.ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், திருப்பதி திருத்தலம் சேஷாசலம் எனப்படுவதும் உண்டு.
  • விஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுக்கும் பொது யமுனை நதியில் காளியன் எனப்படும் மனித உருவம் எடுக்கும் ஒரு நச்சுப் பாம்பு வாழ்ந்து வந்தது. அப்பாம்பினால் அந்நதியினுடைய நீர் விசமாக மாறியது. இதனால் யமுனை நதிக்கு ஒருவரும் செல்லவதில்லை. அப்பாம்பின் விஷத்தால் அருகிலிருந்த புல், பூண்டு, செடி, கொடி, மரங்கள் எல்லாம் வாடின. கிருஷ்ணர் யமுனை நதிக்குச்சென்று அப்பாம்பினை அழித்தார் என புராணக்கதைகள் கூறுகின்றன.
  • சிவனுடைய கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை பாற்கடலை கடைய மத்தாக இருக்க வேண்டுமென தேவர்களும், அசுரர்களும் வேண்டினார்கள். அமுதத்தில் பகுதியை வாசுகிக்கும் தருவதாகக் கூறினார்கள். எனவே பாற்கடலை கடைவதற்கு மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு அரக்கர்கள் பாம்பின் ஒருபுறமும், தேவர்கள் மறுபுறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். நீண்ட நேரம் கடைந்தமையால் வலி தாங்காமல் வாசுகி பாம்பு ஆலகால விஷத்தினைக் கக்கியது. அந்த ஆலகால விஷத்திலிருந்து மக்களையும், தங்களையும் காக்க தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான் ஆலகால விஷத்தினை அருந்தி "நீலகண்டன்" என்று பெயர் பெற்றார்.[3]

கிறிஸ்தவ சமயம்[தொகு]

கிறிஸ்தவ சமயத்தில் பொதுவாக பாம்பு ஒரு தீய உயிரினமாகக் கருதப்படுகின்றது. ஏதேன் தோட்டத்தில் ஏவாளை ஒரு பாம்பு வஞ்சித்ததே இதற்கு காரணம். முன்பு பாம்புகள் கால்களுடன் மிகப்பெரிய விலங்கினமாக இருந்ததாகவும் கடவுள் அளித்த சாபத்தின் காரணமாக அது கால்களை இழந்து தரையில் ஊரும் ஊர்வனமாக மாறிப்போனதாகவும் கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். புனித பேட்ரிக் என்பவர் அயர்லாந்தில் கிறிஸ்தவ சமயத்தை பரப்பிய போது அங்கு இருந்த அனைத்து பாம்பினங்களையும் முற்றிலுமாக வெளியேற்றினார். இதுவே தற்போது அயர்லாந்தில் பாம்புகளே இல்லாததற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

இவற்றையும் பார்க்க[தொகு]

பாம்புக் கடி

மேற்கோள்கள்[தொகு]

  1. Mehrtens, John (1987). Living Snakes of the World. New York: Sterling. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8069-6461-8. https://archive.org/details/livingsnakesofwo00mehr. 
  2. "பாம்பு வணக்கம்" (pdf).
  3. http://www.tamilvu.org/slet/l41C1/l41C1per.jsp?sno=363
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பு&oldid=3836851" இலிருந்து மீள்விக்கப்பட்டது