பயனர்:Shiva kumarg2110685

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறநானூறு புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு, நந்தா விளக்கம் என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் புறநூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சிறுபான்மையாக வஞ்சி அடிகளும் விரவி வரும். [1]புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போலப் புற ஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு விளக்குகிறது.

பாடல்:

வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப் பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் செருவென் றதுவாகை யாம்.[2] இப்புற ஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன. இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது.

புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1894-ஆம் ஆண்டு பழையஉரையோடு (முதல் 266 பாடல்களுக்கு மட்டுமே பழைய உரை கிடைத்துள்ளது) நூல் முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்."

திருக்குறள்

திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்குஎனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று பாரம்பரியமாக அறியப்படுகிறார். இந்நூலின் காலம் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டு வரை எனப் பலவாறு கணிக்கப்படுகிறது. பாரம்பரியமாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசிப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப்பாய்வுகள் இந்நூல் பொ.ஊ. 450 முதல் 500 வரையிலான கடைச்சங்க காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் குறிக்கின்றன.

திருக்குறள் 133 அதிகாரங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்திற்குப் பத்து குறட்பாக்கள் வீதம் மொத்தம் 1,330 குறட்பாக்களைக் கொண்டது. அனைத்துப் பாக்களும் குறள் வெண்பா வகையில் அமைக்கப்பட்டதாகும். மேலும் ஒவ்வொரு அதிகாரத்தின் பத்துப் பாக்களும் அவ்வதிகாரத்தின் கருப்பொருளாக விளங்கும் அறநெறியினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. இந்நூல் மூன்று பகுதிகளாக அல்லது "பால்களாகப்" பகுக்கப்பட்டுள்ளது:

  • முதற் பால்—அறம்: ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றியும் யோக தத்துவத்தைப் பற்றியும் கூறுவது (அதிகாரங்கள் 1–38)
  • இரண்டாம் பால்—பொருள்: ஒருவர் தன் சமூக வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களை, அதாவது சமூகம், பொருளாதாரம், அரசியல், மற்றும் நிருவாகம் ஆகிய விழுமியங்களைப் பற்றிக் கூறுவது (அதிகாரங்கள் 39–108)
  • மூன்றாம் பால்—காமம்/இன்பம்: ஒருவர் தன் அகவாழ்வில்கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றிக் கூறுவது (அதிகாரங்கள் 109–133)தமிழ் இலக்கியங்களில் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் உலகின் மிக அதிக மொழிபெயர்ப்புகளைக் கண்ட நூல்களில் ஒன்றாகவும் திருக்குறள் திகழ்கிறது. 1975-ம் ஆண்டின் முடிவில் குறள் 20 மொழிகளுக்குக் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டிருந்ததாக சுவெலபில் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார். வடமொழி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழிகளிலும், பர்மீயம், மலாய், சீனம், ஃபிஜியன், இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மானியம், ரஷ்யன், போலிஷ், ஸ்வீடிஷ், தாய், ஆங்கிலம் ஆகிய அயல் மொழிகளிலும் அதுவரை குறளானது மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shiva_kumarg2110685&oldid=3693299" இலிருந்து மீள்விக்கப்பட்டது