தில்லி தேசியத் தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) சட்டம் 2023

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தில்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) சட்டம், 2023 (The Government of National Capital Territory of Delhi (Amendment) Act, 2023 அல்லது GNCTD Amendment Act), இந்திய நடுவண் அரசு 19 மே 2023 அன்று தில்லி அரசின் குடிமைப்பணி அதிகாரிகள் தொடர்பான அவசரச் சட்டம் மூலம் தில்லி அரசு குடிமைப்பணி அதிகாரிகள் தொடர்பாக தில்லி சட்டமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நீக்கியது. மேலும் இச்சட்டம் மூலம் தேசியத் தலைநகர் தில்லி பிரதேச குடிமைப் பணிகள் ஆணையம் ஒன்றை நிறுவ உள்ளது. இக்குடிமைப் பணிகள் ஆணையத்தில் தில்லி முதல்வர், தில்லி அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் முதன்மை உள்துறைச் செயலாளர் ஆகியோர் இருப்பர். தில்லி குடிமைப் அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பணியிடங்கள் மற்றும் ஒழுங்காற்று விவகாரங்கள் தொடர்பாக இந்த ஆணையம் தில்லி துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைகளை செய்யும். தேசிய தலைநகர் குடிமைப் பணிகள் ஆணையம் மற்றும் தில்லி சட்டமன்றத்தை கூட்டுவது, ஒத்திவைப்பது மற்றும் கலைப்பது உள்ளிட்ட பல விஷயங்களில் துணைநிலை ஆளுநர் தனது சொந்த விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு இந்த அவசரச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது.[1]

சட்டம் இயற்றல்[தொகு]

மக்களவையில்[தொகு]

தில்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா, 2023வை மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் 3 ஆகஸ்டு 2023 (வியாழன்) அன்று தாக்கல் செய்தார்.[2][3][4] பெரும்பான்மை உறுப்பினர்களால் வாக்களிப்பட்டு இந்த சட்ட முன்மொழிவு ஏற்கப்பட்டது. அவையில் எதிர்கட்சிகளுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் இந்திய தேசிய காங்கிரசு, திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இச்சட்ட முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.[5][6]

மாநிலங்களவையில்[தொகு]

7 ஆகஸ்டு 2023 அன்று (திங்கள்) இச்சட்ட முன்மொழிவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் சா தாக்கல் செய்தார். இச்சட்ட முன்மொழிவுக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி, பிஜு ஜனதா தளம், அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு அளித்தது. இச்சட்ட முன்மொழிவிற்கான ஓட்டெடுப்பில், ஆதராக 131 பேரும்; எதிராக 102 பேரும் வாக்களித்தால், சட்ட முன்மொழிவு பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட்டது.[7]

பின்னணி[தொகு]

தில்லி தேசியத் தலைநகரப் பகுதியின் பொது ஒழுங்கு, நிலம் மற்றும் காவல் துறை ஆகியவைகள் இந்திய நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்கே இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் மீது அதிகாரம் செலுத்த உரிமையுள்ளது என இந்திய உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு வழக்கு தொடுத்தது. இதனை நடுவண் அரசு எதிர்த்தது.

வழக்கில் உச்ச நீதிமன்றம், தில்லி காவல்துறை மற்றும் நிலம் தவிர்த்து, தில்லி அரசில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளின் மீதான முழுக்கட்டுப்பாடு மற்றும் அதிகாரம் தில்லி அரசுக்கே உள்ளது என 12 மே 2023 அன்று தீர்ப்பு வழங்கியது. மேலும் தீர்ப்பில் நடுவண் அரசு விரும்பினால் இது குறித்து தனியாகச் சட்டம் ஒன்றை இயற்றிலாம் என ஆலோசனையும் வழங்கியது.

இதனை அடுத்து 19 மே 2023 அன்று இந்திய நடுவண் அரசு, தில்லி அரசில் பணிபுரியும் அதிகாரிகள் மீதான அதிகாரம் இந்திய அரசுக்கு உள்ளது என அவசரச் சட்டம் இயற்றியது. அவசரச் சட்டத்தின் ஆயுட்காலம் 6 மாதம் என்பதால், அவசரச் சட்டத்திற்கு பதிலாக நாடாளுமன்றத்தில் உரிய சட்ட முன்மொழிவை கொண்டு வந்து, பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் தில்லி அரசுப் பணியாளர் தொடர்பான சட்ட முன்மொழிவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடுவண் அரசு முடிவு செய்தது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதல்[தொகு]

தில்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) சட்டம், 2023க்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் 12 ஆகஸ்டு 2023 அன்று ஒப்புதல் வழங்கியுடன், இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததது.[8][9]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]