சோடியம் பைகார்பனேட்டு ஏவூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோடியம் பைகார்பனேட்டு ஏவூர்தியானது (Sodium bicarbonate rocket), 35 மிமீ ஒளிப்படச் சுருள் டப்பாவையும் சோடியம் பைகார்பனேட்டுடன், ஒரு காடியின் வினையிலிருந்து பெறப்படும் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அழுத்தத்தையும் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு மாதிரி ஏவூர்தியாகும். இவ்வகை ஏவூர்திகள் அறிவியல் வகுப்பறைகளில் இயற்பியல் மற்றும் வேதியியல் கொள்கைகளை விளக்குவதற்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. சில சமயங்களில் இது அல்கா-செல்ட்செர் ஏவூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.

தயாரித்தல்[தொகு]

இந்தச் சோதனையில், ஒரு ஒளிப்படச்சுருள்  டப்பாவானது நீரால் நிரப்பப்படுகிறது. அதனுள் நுரைத்துப் பொங்குதலுக்கான மாத்திரை (பொதுவாக அல்கா-செல்ட்செர்) சேர்க்கப்பட்டு டப்பாவானது இறுக்கமாக மூடப்படுகிறது. சிறிது நேரம் கழித்து, கார்பன் டை ஆக்சைடின் அழுத்தமானது மூடப்பட்ட டப்பாவினை உயர எழும்பிப் பறக்கச் செய்ய போதுமானதாக இருக்கிறது. இவ்வாறான நிகழ்வு நடக்கும் போது “பாப்“  ஒலியானது எழுகிறது.  டப்பாவானது வண்ணக் காகிதங்களால் ஏவூர்தியின் வடிவத்தைப் பெறும் விதத்தில் அலங்கரிக்கப்படலாம்.[1]

செயற்படும் விதம்[தொகு]

ஏவூர்தி அறிவியலில், ஒரு வேதி வினையானது மிக வேகமாக வாயு ஒன்றை உருவாக்குகிறது. இந்த வாயுவானது, ஏவூர்திப் பொறியிலிருந்து ஒரு திசையில் வெளியேற்றப்படும் பொழுது, அதன் உந்தமானது ஏவூர்தியை வாயு வெளியேறும் திசைக்கு எதிர்த்திசையில் செலுத்துகிறது.

புகைப்படச்சுருள் டப்பாவில் செய்யப்பட்ட ஏவூர்தி மாதிரியானது அழுத்தப்பட்ட வாயுவானது வெளியேற முயலும் போது டப்பாவின் பலவீனமான பகுதியினைத் துளைத்துக் கொண்டு அனைத்து வாயுவையும் வெளியேற்றி விடுகிறது. டப்பாவின் பின்புறத்திலிருந்து வரும் வாயுவானது, ஏவூர்தி மாதிரியினை மேல் நோக்கித் தள்ளுகிறது. வளிமண்டலக் காற்றின் எதிர்ப்பு மற்றும் புவி ஈர்ப்பு விசை ஆகியவை அதை கீழே விழச்செய்கிறது. ஒளிப்படச் சுருள் டப்பா குறைவான எடையின் காரணமாக வெகு விரைவாக முடுக்கம் பெறுகிறது. இந்த ஏவூர்தி மாதிரியானது, ஒரு திண்ம மற்றும் திரவம் கலந்த கலவையைப் பயன்படுத்தி வாயுவை உருவாக்குகிறது. இதிலிருந்து வெளிவரும் வாயுவானது, கார்பன் டை ஆக்சைடாகவும் (CO2), திரவமானது நீராகவும்(H2O), மற்றும் திண்மமானது நுரைத்துப் பொங்குதல் மாத்திரையாகவும் உள்ளன. நீரானது நுரைத்துப் பொங்குதல் மாத்திரையுடன் கலக்கப்படும் போது, கார்பன் டைஆக்சைடு வாயுவானது உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வினையின் வேகமானது, மாத்திரையின் புறப்பரப்பளவினைப் பொறுத்து மாறக்கூடியது.

வகுப்பறைப் பயன்பாடுகள்[தொகு]

சோடியம் பைகார்பனேட்டு ஏவூர்தி சோதனையை அடிப்படையாகக் கொண்டு  பல பாடங்கள் உள்ளன.

  • மாணவர்கள் வெவ்வேறு அளவிலான நீர் மற்றும் அல்கா-செல்ட்செர் மாத்திரைகளைக் கொண்டு ஏவூர்திகளை அதிகத் தொலைவு எடுத்துச் செல்லும் விகித இயைபைக் கண்டறியச் செய்யலாம்.[2]
  • மாணவர்கள், ஏவூர்திகள் கடக்கும் தொலைவுகளிலிருந்து அவற்றின் வேகம் மற்றும் திசைவேகத்தைக் கண்டறிவதற்கான சமன்பாடுகளை வருவிக்கச் செய்யலாம்.[3]
  • நியூட்டனின் மூன்றாவது விதியையும் விளக்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]