சைபீரியா மீதான மங்கோலியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்.. 1300இல் மங்கோலியப் பேரரசு (பிந்தைய தைமூரியப் பேரரசு சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது)

மங்கோலியர்கள் நீண்ட காலமாகச் சைபீரியக் காட்டு (தைகா) மக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மங்கோலியர்கள் அவர்களை ஓயின் இர்கட் ("காட்டின் மக்கள்") என்று அழைத்தனர். பர்கா மற்றும் உரியாங்கை போன்ற இம்மக்களில் பெரும்பாலானவர்கள் மங்கோலியர்களிடமிருந்து சிறிதளவே வேறுபட்டிருந்தனர். பைக்கால் ஏரியைச் சுற்றி இருந்த பழங்குடியினங்கள் மங்கோலிய மொழியைப் பேசிய அதே சமயத்தில், மேற்குப் பக்கம் இருந்த பழங்குடியினங்கள் துருக்கிய, சமயோதிய அல்லது எனிசை மொழிகளைப் பேசினர்.

1206ஆம் ஆண்டு மங்கோலியப் பீடபூமி மற்றும் தெற்கு சைபீரியாவில் இருந்த அனைத்து மங்கோலிய மற்றும் துருக்கியப் பழங்குடியினங்களைச் செங்கிஸ் கான் ஒன்றிணைத்தார். 1207ஆம் ஆண்டு செங்கிஸ் கானின் மூத்த மகனான சூச்சி சைபீரியக் காட்டு மக்கள், உரியாங்கை, ஒயிரட்கள், பர்கா, காகாக்கள், புரியத்துகள், துவன்கள், கோரி-துமேடு மற்றும் கிர்கிசு ஆகியோரை அடிபணிய வைத்தார்.[1] பிறகு சைபீரியர்களை அவர் மூன்று தியூமன்களாக மாற்றியமைத்தார். இர்டிஷ் ஆற்றின் பக்கவாட்டில் அமைந்திருந்த தெலங்கித் மற்றும் தோலோசு மக்களை தனது பழைய நண்பனாகிய கோர்ச்சிக்குச் செங்கிஸ் கான் கொடுத்தார். அதே நேரத்தில் பர்கா, துமேது, புரியத்துகள், கோரி, கெசுமிதி மற்றும் பஷ்கிர்கள் தனித்தனியான 1,000 மக்களாக மாற்றியமைக்கப்பட்டனர். தெலங்கித், தோலோசு, ஒயிரட்டுகள் மற்றும் எனிசை கிர்கிசு ஆகியோர் தியூமன்களாக மாற்றியமைக்கப்பட்டனர்.[2] சின் அரசமரபு மீதான மங்கோலியர்களின் படையெடுப்பின் முதல் தாக்குதல்களுக்குப் பிறகு கேம்-கேம்சிக்கில் ஆன் இனத்தைச் சேர்ந்த கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளைக் கொண்ட ஒரு குடியிருப்பைச் செங்கிஸ் கான் உருவாக்கினார். இம்மக்களிடமிருந்து காணிக்கையாகக் கிர் வல்லூறுகள், மிருக உரோமங்கள், பெண்கள் மற்றும் கிர்கிசு குதிரைகளைப் பெரிய கான்கள் விரும்பினர்.

மேற்கு சைபீரியாவானது தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆட்சியின் கீழ் வந்தது.[3] சூச்சியின் மூத்த மகனான ஓர்டா கானின் வழித்தோன்றல்கள் நேரடியாக இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர். மேற்குச் சைபீரியாவின் சதுப்பு நிலங்களில் காணிக்கையைச் சேகரிப்பதை எளிதாக்க நாய்களால் இழுக்கப்பட்ட வண்டிகளைக் கொண்ட யாம் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

1270ஆம் ஆண்டு கிர்கிசு மற்றும் துவன் வடிநிலப் பகுதிகளுக்கு நீதிபதியாகச் சேவையாற்றுவதற்காக ஒரு புதிய குடியிருப்பாளர் குழுவுடன் ஆன் இனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியைக் குப்லாய் கான் அனுப்பினார்.[4] 1275ஆம் ஆண்டு முதல் ஒக்தாயியின் பேரனாகிய கய்டு நடு சைபீரியாவின் பகுதிகளை ஆக்கிரமித்தார். 1293ஆம் ஆண்டு குப்லாயின் கிப்சாக் தளபதியான துதுக்கின் தலைமையிலான யுவான் அரசமரபின் இராணுவமானது கிர்கிசு நிலங்களை மீண்டும் ஆக்கிரமித்தது. அன்றிலிருந்து நடு மற்றும் கிழக்கு சைபீரியாவின் பெரும்பாலான பகுதிகளை யுவான் அரச மரபானது கட்டுப்படுத்தியது.[5]

எனிசை பகுதியானது ஆன் இனத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நெசவாளர் சமூகத்தைக் கொண்டிருந்தது. சமர்கந்து மற்றும் வெளி மங்கோலியா ஆகிய இரு பகுதிகளுமே ஆன் இனத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கைவினைஞர்களைக் கொண்டிருந்தன.[6]

உசாத்துணை[தொகு]

  1. மங்கோலியர்களின் இரகசிய வரலாறு, ch.V
  2. C.P.Atwood-Encyclopedia of Mongolia and the Mongol Empire, p. 502
  3. Nagendra Kr Singh, Nagendra Kumar – International Encyclopaedia of Islamic Dynasties, p.271
  4. History of Yuan 《 元史 》,
  5. C.P.Atwood-Encyclopedia of Mongolia and the Mongol Empire, p.503
  6. Jacques Gernet (31 May 1996). A History of Chinese Civilization. Cambridge University Press. பக். 377–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-49781-7. https://archive.org/details/historyofchinese00gern.