புகாரா

ஆள்கூறுகள்: 39°46′N 64°26′E / 39.767°N 64.433°E / 39.767; 64.433
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புகாரா
உசுபேகியம்: 'Buxoro' / Бухоро
மீர்-இ அரப் மத்ரசா
மீர்-இ அரப் மத்ரசா
நாடு உஸ்பெகிஸ்தான்
மாகாணம்புகாரா மாகாணம்
அரசு
 • ஹாக்கிம்ருசுதமோவ் கியாமுத்தீன் கஹ்ஹாரோவிச்சு
மக்கள்தொகை (2009)
 • நகரம்263,400
 • நகர்ப்புறம்283,400
 • பெருநகர்328,400
நேர வலயம்GMT +5
Postcode2001ХХ
தொலைபேசி குறியீடுlocal 365, int. +99865
இணையதளம்http://www.buxoro.uz/

புகாரா (பாரசீக மொழி: بُخاراBuxârâ; உசுபேகியம்: Buxoro / Бухоро) நகரம், (சொகிடிய மொழியில் βuxārak ("பேறு பெற்ற இடம்") எனப் பொருள் படும்) உசுபெகிசுதான் நாட்டின் புகாரா மாகாணத்தின் தலைநகராகும். உசுபெகிசுதானின் ஐந்தாவது மிகப் பெரிய நகரான இது 2009 ஆம் ஆண்டு மக்கட் தொகைக் கணக்கெடுப்பின்படி 263,400 பேர் வாழும் நகராகும். புகாரா நகரைச் சூழவுள்ள பகுதி ஆகக் குறைந்தது ஐயாயிரம் ஆண்டு காலமாக மக்கள் வாழிடமாக உள்ளதுடன் இந்த புகாரா நகரம் அதில் அரைவாசிக் காலம், அஃதாவது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. பட்டுப் பாதையில் அமைந்துள்ள இந்நகரம் பன்னெடுங்காலமாக வணிகம், அறிவு, பண்பாடு மற்றும் சமயம் என்பவற்றுக்கான புகழ் மிக்க மையமாக இருந்துள்ளது. ஏராளமான பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரசாக்களைக் கொண்டுள்ள புகாரா வரலாற்று மையம் உலக பாரம்பரியக் களமொன்றாக யுனெசுக்கோ நிறுவனத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. புகாராவின் மக்கட்டொகையிற் பெரும்பான்மையானோர் உசுபெக்கு இனத்தினராக இருக்கும் அதே வேளை ஏராளமான தாஜிக்கு இனத்தினரும் இந்நகரைத் தாயகமாகக் கொண்டுள்ளனர். இந்நகரின் மக்கட்டொகை பன்னெடுங்காலமாகவே யூதர்கள் உட்படப் பல்வேறு சிறுபான்மை இனங்களையும் கொண்டுள்ளது.

பெயர்கள்[தொகு]

புகாரா நகரம் 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால் பொகாரா என்றே அழைக்கப்பட்டது. தியாங்கு சீன மொழியில் இந்நகரின் பெயர் இது புஃகே(捕喝) என்று அழைக்கப்படுகிறது.[1]

ஈரானிய மொழிகளைப் பேசும் சொகிடியர்கள் இப்பகுதியற் குடியேறிய பின்னர் இப்பகுதியின் முதன்மை மொழியாகப் பாரசீக மொழி அமைந்தது. புகாரா என்பது சொகிடிய மொழிச் சொல்லான புகாரக் (βuxārak - நற்பேறு பெற்ற இடம்) என்பதிலிருந்து வந்திருக்கலாமெனக் குறிப்பிடுகிறது.[2]

முகம்மது இப்னு ஜஃபர் நர்சகி தான் எழுதிய (பொ.கா. 943-44 அளவில் நிறைவுற்ற) புகாரா வரலாறு எனும் நூலிற் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

புகாராவுக்குப் பல பெயர்கள் உள்ளன. அப்பெயர்களில் ஒன்றுதான் நூமிஜ்காத் என்பது. இது பூமிசுகாத் என்றும் அழைக்கப்பட்டது. அரபு மொழியில் இதற்கு மதீனா அல்-சுஃப்ரிய்யா (செப்பு நகரம்) என்றும் மதீனா அத்-துஜ்ஜார் (வணிகர் நகரம்) என்றும் இரண்டு பெயர்கள் உள்ளன. எனினும், புகாரா என்ற பெயரே அவையனைத்திலும் பொதுவாக அறியப்பட்ட பெயராகும். குராசானில் வேறெந்த நகரமும் இவ்வளவு பெயர்களைக் கொண்டதில்லை[3]

வரலாறு[தொகு]

முதன்மையான இடங்கள்[தொகு]

மொஸ்கோ நகரில் உள்ள பிரித்தானியத் தூதரகத்திற் கடமையாற்றிய இளம் இராசதந்திரி பிட்சுரோயி மக்லியன் என்பார் 1938 ஆம் ஆண்டு புகாரா நகருக்கு அடிக்கடி பயணித்ததுடன், புகாராவின் புகழ் மிக்க இடங்களைப் பார்வையிடுவதிலும் இந்நகரின் பூங்காக்களிற் படுத்துறங்குவதிலும் இன்பம் கண்டார். அவர் புகாராவைப் புனிதமிக்க நகரம் என்றே குறிப்பிடுகிறார்.

போ-இ கலான் தொகுதி (12-14 ஆம் நூற்றாண்டு)
இடம்: மீர்-இ அரப் மத்ரசா; நடு: மினாரா-இ கலான்; வலம்: மஸ்ஜித்-இ கலான்

போ-இ-கலான் தொகுதி[தொகு]

கல்யாண் அல்லது சிறு கலான் (பெரிய மினாரா)

போ-இ கலான் (அல்லது போயி கல்யாண், பாரசீக மொழியில் پای کلان "பெரும் அடித்தளம்") என்பது கலான் பகுதியின் பெரிய மினாராவைச் சூழவுள்ள பகுதியில் உள்ள கட்டிடக் கலை நுணுக்கங்கள் மிகுந்த கட்டிடத் தொகுதியாகும்.

  • கல்யாண் மினாரா அல்லது மினாரா-இ கலான் (பாரசீக/தாஜிக்கிய மொழிகளிற் "பெரிய மினாரா" என்று பொருள்): இது செங்கல்லினாலான வட்ட வடிவத் தூணாக அமைந்த கோபுரம் ஆகும். கீழிருந்து மேலாக இதன் வட்டம் குறுகிச் செல்கிறது. அடியில் 9 மீ விட்டத்தைக் கொண்ட இது மேற்பகுதியில் 6 மீ விட்டமுடையது. இதன் உயரம் 45.6 மீ ஆகும். பல நூற்றாண்டுகளாக சாவுத் தண்டனைக் குற்றவாளிகளுக்கு இதன் மேலிருந்து கீழே தள்ளி விடப்பட்டுத் தண்டனை நிறைவேற்றப்பட்டமையினால் இது சாவுக் கோபுரம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
  • கலான் பள்ளிவாசல் (மஸ்ஜித்-இ கலான்): 1514 ஆம் ஆண்டிற் கட்டி முடிக்கப்பட்ட இது சமர்கந்து நகரில் உள்ள பீபி-கானிம் பள்ளிவாசலின் அளவை ஒத்தது. இவையிரண்டும் ஒரே மாதிரியான கட்டிடங்களாயிருப்பினும் கட்டிடக்கலையைப் பொறுத்தவரையில் மிகவும் வேறுபாடானவையாகும்.
  • மீர்-இ அரப் மத்ரசா: இதன் தொடக்கம் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. சைபானி மரபினரின் தொடக்க கால ஆன்மீக வழிகாட்டியான யெமன் நாட்டைச் சேர்ந்த ஷைகு அப்துல்லாஹ் யமானி என்பவராற் கட்டுவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. மத்ரசாக் கட்டுமானங்களுக்கு உபைதுல்லாஹ் கான் (ஆட்சி: 1533-1539) அளித்த நன்கொடைகளுக்கு அவரே பொறுப்பாளியாயிருந்தார்.

இசுமாஈல் சாமானியின் கல்லறை[தொகு]

இசுமாஈல் சாமானியின் கல்லறை (9 ஆம்-10 ஆம் நூற்றாண்டுகள்) நடு ஆசியாவின் மிகச் சிறந்த கட்டிட வடிவமைப்புக்களில் ஒன்றாகும். அது பொதுக் காலம் 892 - 943 காலப்பகுதியிற் கட்டப்பட்டது. நடு ஆசியாவில் ஆட்சி செய்த இறுதிப் பாரசீக அரச மரபான சாமானிய அரச மரபைத் தோற்றுவித்த இசுமாஈல் சாமானியின் கல்லறையைச் சுற்றிக் கட்டப்பட்டது. சாமானிய அரசே 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளில் இந்நகரை ஆட்சி செய்தது. சாமானிய மரபினர் தொடக்கத்தில் பக்தாத் நகரிலிருந்து ஆட்சி செய்த அப்பாசியக் கலீபகத்தின் ஆளுநர்களாக குராசானில் இருந்த போதிலும், பிற்காலத்தில் இறைமையுள்ள அரசைத் தோற்றுவித்தனர்.

சசுமா ஐயூப் கல்லறை[தொகு]

சசுமா ஐயூப் கல்லறை என்பது சாமானியக் கல்லறைக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கல்லறையாகும். இதன் பெயர் பாரசீக மொழியில் ஐயூபின் (யோபுவின்) நீரூற்று எனப் பொருளாகும். இது திருக்குர்ஆனிலும் விவிலியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இறைத்தூதர் ஐயூப் (யோபு) அவர்கள் தம் பரிவாரத்துடன் வந்து நிலத்தின் மீது ஊதிய இடத்தில் உருவான நீரூற்று எனக் கருதப்படுகிறது. இவ்வூற்றின் நீர் இன்னமும் துப்புரவானதாகவும் நோய் நீக்கிச் சுகமளிப்பதாகவும் கருதப்படுகிறது. தைமூரின் காலத்திற் கட்டப்பட்டதான இப்போதுள்ள கட்டிடம் குவாரிசும் பகுதியின் கட்டிடக்கலையை ஒத்துள்ளதால் புகாராவின் ஏனைய கட்டிடங்களிலிருந்து வேறுபடுகிறது.

புகாரா கோட்டை[தொகு]

புகாரா கோட்டைச் சுவர்

போக்குவரத்து[தொகு]

புகாராவினூடு செல்லும் எம்37 பெருந்தெரு அசுகாபாத் உட்பட துருக்மெனிசுதான் நாட்டின் பெரும்பாலான நகரங்களுடன் இந்நகரை இணைக்கிறது.

மக்கட் தொகை[தொகு]

புகாரா நகரின் மக்கட்டொகை பெரும்பாலும் பாரசீக மொழி பேசும் தாஜிக் இனத்தினரைக் கொண்டுள்ளது. சமர்கந்து நகரைப் போலவே புகாராவும் நடு ஆசியாவில் தாஜிக் இன மக்கள் செறிந்து வாழும் இடங்களில் ஒன்றாகும். இவ்விரு நகரங்களும் இன்றைய தாஜிக்கிசுதான் நாட்டுக்கு வெளியே அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

இருபதாம் நூற்றாண்டு வரையிலும் இந்நகர் புகாரா யூதர்களின் தாயகமாகத் திகழ்ந்தது. புகாரா யூதர்களின் முன்னோர் ஐரேப்பாவில் உரோமப் பேரரசு நிலவிய காலத்திலேயே இங்கு குடியேறியோராவர். புகாரா யூதர்களிற் பெரும்பான்மையானோர் 1925-2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இசுரவேல் நாட்டிலும் அமெரிக்காவிலும் சென்று குடியேறிவிட்டனர்.

கவிதையும் இலக்கியமும்[தொகு]

பண்பாட்டுப் புகழ் மிக்க நகரென்ற அடிப்படையில் ஏராளமான உள்நாட்டு இலக்கியங்களிலும் பாரசீக இலக்கியங்களிலும் புகாரா நகரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ای بخارا شاد باش و دیر زی
ஓ புகாரா! மகிழ்வோடு நீடூழி வாழ்!
شاه زی تو میهمان آید همی
உன் வேந்தன் வெற்றியுடன் வருகிறான்.
---ருதாகி

மௌலானா ரூமி இந்நகரின் சிறப்பை வெகுவாகப் புகழ்கிறார்:

آن بخارا معدن دانش بود
"புகாரா அறிவின் சுரங்கமாக இருந்ததே,
پس بخاراییست هرک آنش بود
அறிவுள்ளவன் புகாராவாசியாகவே இருக்கிறான்."

குறிப்பிடத் தக்கோர்[தொகு]

புகழ் மிக்க அறிஞர் பலர் பண்டைக் காலத்தில் புகாராவில் வாழ்ந்துள்ளனர். அவர்களிற் பின்வருவோர் குறிப்பிடத் தக்கோராவர்:

மேற்கோள்கள்[தொகு]

  1. "UMID" Foundation, Uzbekistan. "General Info". Archived from the original on 2001-01-26. பார்க்கப்பட்ட நாள் 2007-10-04.
  2. Richard N Frye, 'இஸ்லாத்துக்கு முந்திய காலங்களில் புகாரா', ஈரானியக் கலைக்களஞ்சியம், 512.
  3. Narshaki,Richard Nelson Fyre, புகாரா வரலாறு, Pg 27

கூடுதல் வாசிப்பு[தொகு]

  • William Moorcroft (explorer) and Trebeck, George. 1841. Travels in the Himalayan Provinces of Hindustan and the Panjab; in Ladakh and Kashmir, in Peshawar, Kabul, Kunduz, and Bokhara... from 1819 to 1825, Vol. II. Reprint: New Delhi, Sagar Publications, 1971.

வெளித் தொடுப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
புகாரா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=புகாரா&oldid=3726001" இலிருந்து மீள்விக்கப்பட்டது