சு. இராசரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
"இந்துபோர்ட்" சு. இராசரத்தினம்


இலங்கை சட்டவாக்கப் பேரவையின் வட மாகாண (மத்திய பகுதி) உறுப்பினர்
பதவியில்
1924 – 1931

பிறப்பு ஜூலை 4, 1884
இறப்பு 1970
தேசியம் இலங்கைத் தமிழர்
தொழில் வழக்கறிஞர்
துறை அரசியல்வாதி
சமயம் சைவ சமயம்

சு. இராசரத்தினம் (ஜூலை 4, 1884 - 1970), இந்து போர்ட் இராசரத்தினம் எனச் சிறப்பாக அழைக்கப்பட்டவர். சைவ சமய அபிவிருத்தியில் கவனம் செலுத்தியவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதி. இலங்கை சட்டவாக்கப் பேரவையில் ஏழாண்டுகள் உறுப்பினராக இருந்தவர். சட்டவல்லுனர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

இவர் சுப்பிரமணியம் என்பவரின் புதல்வர். வழக்கறிஞராக இருந்தவர். டிசம்பர் 1, 1923 இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி போன்றோரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பெற்ற சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்தின் (இந்துபோர்ட்) வளர்ச்சியிலே முக்கிய பங்காற்றினார். அதன் முகாமையாளராகவும் செயலாளராகவும் அதன் ஆரம்பகாலத்திலிருந்து நீண்டகாலம் பணியாற்றியவர். சட்ட வல்லுநராக விளங்கிய அவர், தேடிவந்த உயர் பதவிகளையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு முழுநேர ஊழியராக, சைவ வித்தியா விருத்திச்சங்கத்துடன் ஒன்றித்தார். இதனால் "இந்து போர்ட்' என்றால் சு.இராசரத்தினத்தையே குறிப்பதாக அமைந்தது[1]. யாழ்ப்பாணக் குடாநாடு, முல்லைத்தீவு, பதுளை, நாவலப்பிட்டி, புத்தளம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, ஊர்காவற்றுறை உட்பட நெடுந்தீவு முதலான இடங்களில் 174 சைவப் பாடசாலைகள், 7 ஆங்கிலப் பாடசாலைகள், 16 பன்னவேலைப் பாடசாலைகள், தற்காலிக அங்கீகாரத்துடனான மேலும் 63 பாடசாலைகள், 2 அநாதை இல்லங்கள், ஓர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை என்பவற்றை சைவவித்தியா விருத்திச் சங்க நிர்வாகத்தின் மூலம் உருவாக்கி இயங்கச் செய்தார். அக்டோபர் 1928 இல் திருநெல்வேலியில் சைவாசிரியர் பயிற்சி நிறுவனத்தை ஆரம்பிக்கக் காரணகர்த்தராக இருந்திருக்கிறார்.

சட்டசபை உறுப்பினர்[தொகு]

1924 ஆம் ஆண்டு முதல் வட மாகாணம் மத்தியின் இலங்கை சட்டவாக்கப் பேரவைப் பிரதிநிதியாக ஏழு ஆண்டுகள் பதவி வகித்தார். அக்காலத்தில் சைவர்களுக்குத் தீமையாக நடைமுறையில் இருந்த பல சட்டங்களைத் திருத்தியமைக்கக் காரணமாயிருந்தார். கிறித்தவப் பள்ளிகளுக்கு அருகில் சைவப்பள்ளிகள் அமைக்கவும், சைவப் பள்ளிகளுக்கு உதவி நன்கொடை பெற்றுத்தரவும் அக்காலகட்டத்தைய சட்டசபை காரணமானது குறிப்பிடத்தக்கது.

1930 இல் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இரு அநாதை விடுதிகளும் கல்வி கற்பதற்கு பாடசாலை வசதிகளும் இவரது முயற்சியால் உருவாகின.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சு._இராசரத்தினம்&oldid=1120547" இருந்து மீள்விக்கப்பட்டது