குரு கோவிந்த் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குரு கோவிந்த் சிங் (டிசம்பர் 22, 1666 - அக்டோபர் 7, 1708) சீக்கிய மதத்தவரின் பதினொரு குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். ஒன்பதாவது சீக்கிய குருவின் மகனான இவர் இந்தியாவின் பீகாரில் பாட்னாவில் பிறந்தவர். 1675 முதல் இறப்பு வரை சீக்கியரின் குருவாக இருந்தார். மொகாலயப் பேரரசர் அவுரங்கசீப்புடனான சீக்கியரின் மதப்போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார். குரு கோவிந்த் சிங் சீக்கியத்தின் பல கூறுகளை உறுதிப்படுத்தியதுடன் சீக்கிய மதநூலான குரு கிரந்த் சாகிப்பை சீக்கியமதத்தின் வாழும் குருவாக்கினார்.

இவர் அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். குதிரைச் சவாரி, பலவகை துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவைகளைக் கையாள்வதில் சிறப்பு பெற்று விளங்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் மூன்றுமுறை திருமணம் செய்து கொண்டார். 1677 ஆம் ஆண்டில் ஜூடோஜி என்பவரையும், 1684 ஆம் ஆண்டில் சுந்தரிஜி என்பவரை இரண்டாவதாகவும், அதன் பின்னர் சாஹிப் கௌர் என்பவரை மூன்றாவதாகவும் திருமணம் செய்து கொண்டார். 1684 ஆம் ஆண்டில் பஞ்சாபி மொழியில் “சாண்டி தி -வார்” எனும் நூலினை எழுதிய இவர் 1685 ஆம் ஆண்டில் “பாண்டா சாஹிப்” எனும் மத வழிபாட்டு இடத்தை நிறுவினார். இங்கு மத போதனை, ஆயுதப்பயிற்சி மற்றும் இந்தி, பெர்சியன், பஞ்சாபி மொழிகளைக் கற்பித்தார். ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபாதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்னும் நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்பு போன்றவைகளுக்கான இடங்களையும் நிறுவினார்.

”1698 ஆம் ஆண்டில் பச்சிட்டார் நாடக்” எனும் தன் வரலாற்று நூலை எழுதிய இவர் 1699 ஆம் ஆண்டில் சாதி, மத, இன மற்றும் பால்வழிப் பாகுபாடுகளையும் பிரித்து ஆள்வதையும் முடிவுக்குக் கொண்டு வர “கால்சா” எனும் அமைப்பை நிறுவினார்.

மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாண்டெட் என்னும் இடத்தில் அக்டோபர் 7, 1708இல் மரணமடைந்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குரு_கோவிந்த்_சிங்&oldid=1408889" இருந்து மீள்விக்கப்பட்டது