ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்
ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்
ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் திரைப்பட விள்ம்பரம்
இயக்குனர் லெனின் எம். சிவம்
தயாரிப்பாளர் வஷ்னு முரளி
கதை லெனின் எம். சிவம்
நடிப்பு சுதன் மகாலிங்கம்
இசையமைப்பு பிரவின் மணி
ஒளிப்பதிவு சுரேஸ் ரோகின்
திரைக்கதை லெனின் எம். சிவம்
கலையகம் Eye Catch Mulitmedia Inc.
விநியோகம் Eye Catch Mulitmedia Inc.
வெளியீடு செப்டம்பர் 28, 2013 (கனடா)
கால நீளம் 100 நிமிடங்கள்
நாடு கனடா
மொழி தமிழ்

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் (A Gun & a Ring), 2013 ஆம் ஆண்டு கனடாவில் தயாராகி, வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இது சூன் 19, 2013 அன்று சீனாவின் சாங்காய் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில், போட்டிக்காகத் திரையிடப்பட்ட முதலாவது தமிழ்த் திரைப்படமாகும். 112 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்தும் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களில் 12 படங்கள் மட்டுமே போட்டிக்குத் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.

இத்திரைப்படத்தை 1999 என்னும் திரைப்படத்தை இயக்கிய லெனின் எம்.சிவம் எழுதி இயக்கியுள்ளார்.

கதைச் சுருக்கம்[தொகு]

சுருக்கமாக[தொகு]

ரொறன்ரோவில் வாழும் 6 சாதாரண ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டு வார காலத்துள் நடைபெறும், தனித்துவமான அதேவேளை ஒன்றுடனொன்று தொடர்புள்ள நிகழ்வுகளையே படம் சித்தரிக்கின்றது. தாம் குடியேறிய நாட்டில், வன்முறையும் மரணங்களும் நிறைந்த ஈழப்போர் தந்த வலியை மறக்க முடியாத மனநிலையோடு புதியதொரு வாழ்வைக் கட்டியமைக்க முனையும் வெவ்வேறு தலைமுறையினர் எதிர்கொள்ளும் கடினமான யதார்த்தத்தை இத்திரைப்படம் ஆழமாக ஆராய முயல்கின்றது.

விபரமாக[தொகு]

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவமொன்றுடன் படம் தொடங்குகிறது. கசப்பான கடந்த காலத்தைக் கொண்ட இளைஞன் ஞானம். அப்போது அவன் இந்தியாவில் போராளிகளுக்கான பயிற்சி முகாமிலிருந்தான். அவனும் கூட்டாளிகளும் பயிற்சி முகாமை வெறுத்து, தப்பிச்செல்லத் திட்டமிட்டதை இரும்பனின் தீவிர விசாரணையில் நண்பர்களை காட்டிக்கொடுத்து தனது விடுதலையைப் பரிசாகப் பெற்று கனடா வருகிறான். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரொறன்ரோவில் இன்னமும் கடந்த கால நினைவுகளிலிருந்து மீள முடியாமல் தத்தளிக்கும் ஞானத்தின் மனைவி அவனை விட்டு விலகிச்செல்கிறாள். பல்லாண்டுகளுக்கு முந்திய பயங்கர நினைவுகளும் குற்றவுணர்ச்சியும் உலகின் மீது தாளாவெறுப்புக் கொள்ளும் ஞானத்தின் நிம்மதியான உறக்கத்தைக் கலைத்த வண்ணமே இருக்கிறன இருப்பினும், தன்னை இன்னமும் நினைவுகளிலும் கனவுகளிலும் விடாது துரத்திக்கொண்டிருக்கும் இரும்பனை பல ஆண்டுகளின் பின் ரொறன்ரோவில் கண்டு, அவனைப் பழிவாங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறான் ஞானம். பழிவாங்க முயற்சியும் செய்கிறான்.

ஞானத்தோடு ஒப்பிடும்போது முற்றிலும் வேறுபட்டவர் சொர்ணம். சமூகத் தலைவர். கனடாவுக்குப் புலம்பெயரும் வாய்ப்பிருந்தும் அதை மறுதலித்து, போர்க்காலத்தில் ஈழத்திலேயே இருந்து மக்கள் பணி செய்த தன் மனைவியைத் தியாகியாகவே பார்க்கிறவர் சொர்ணம். மற்றவர்கள் ஏதாவது உதவி தேடி சொர்ணத்திடம் வந்தால் மறுக்காமல் உதவுபவராகவே சொர்ணம் இருக்கிறார். சொர்ணத்தின் இந்த உதவும் மனப்பான்மை அவரது ஒரே கரிசனையாக இருந்த மகள் மீனுவின் பாதுகாப்பில் சற்றுத் தளர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் மீனுவில் கண் வைத்திருந்தான் இன்னொருவன். சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யக்கூடிய கொலைகாரன்.

இந்த மிலேச்சனை 3ஆண்டுகளாகக் கண்காணித்துவரும் புலனாய்வு அதிகாரி ஜோன். மக்களைப் பாதுகாக்கும் தனது பணியின் நிமித்தம் தன் சொந்த வாழ்வில் எத்தனையோ விட்டுக் கொடுப்புகளைச் செய்கிறார். உணர்ச்சிவேகம் அறிவைப் பின்தள்ள தன் சகா எவ்வளவு சொல்லியும் கேளாமல், மீனுவைப் அவளது தந்தைக்கு தெரியாமல் பொறியாக வைத்து காமுகனைப் பிடிக்கத் திட்டமிடுகிறார் ஜோன்.

சொர்ணம் உதவ முயலும் இன்னொருவர் அபி. போரினால் பாதிக்கப்பட்டு, சோகத்தில் மூழ்கியிருக்கும் இளம்பெண். ஈழத்தில் தனக்குத் தெரிந்த எல்லோரினதும் மரணத்தின் சாட்சி அவள். பேசி நிச்சயிக்கப்பட்ட திருமண மற்றும் எதிர்காலக் கனவுகளோடு புதுவாழ்வு தேடிக் கனடா வந்திறங்குகிறாள். விமான நிலையம் வரவேண்டியவன் வரவேயில்லை. இத்திருமணம் கைகூடவேண்டும் என்று நினைக்கும், திருமணத்தைப் பேசி முடித்த ஓர் உறவினர் வீட்டில் தங்குகிறாள். அவர்களது அழுத்தம், புறக்கணிப்புகள், நச்சரிப்புகளால் வெளியேறி ஒரு காப்பகத்தில் தஞ்சம் புகுகிறாள். அங்குதான் அபிற் அவள் வாழ்வில் வருகிறான். அபிற் சூடான் போரில் பாதிப்புக்குள்ளான ஒருவன். கனடியத் தமிழர்களுக்கும் தனக்குமிடையே இல்லாத பல ஒற்றுமைகள் தனக்கும் அபிற்றுக்குமிடையே இருப்பதை அபி உணர்கிறாள். அழகான ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது

நடுத்தர வயதையுடைய அரியமும் மனைவியும் அவர்களது மகனின் தற்கொலையிலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர். பல புதிய குடிவரவாளர்கள் செய்த முதலாவது வேலையான கோப்பை கழுவும் வேலையில் தன்னை அமிழ்த்திக்கொள்வதன் மூலம் அரியம் கவலையை மறக்க முயல்கிறார். ஆயினும் கவலையால் மன அழுத்தத்திற்குள்ளான மனைவி இழப்பை அடிக்கடி நினைவுபடுத்தியபடியிருக்கிறார். மீள வழி தேடிக்கொண்டிருக்கும் வேளையில், அரியத்தின் இருண்ட கடந்த காலம் பழி வாங்கும் வெஞ்சினத்தோடு வாயிற்படியில் வந்து நிற்க, இவ்வளவு காலமும் அடக்கிவைத்திருந்த கோபமும் விரக்தியும் ஒருவாறாக வெடித்தெழுகின்றன.

ஆதிக்கு அதிர்ச்சிகரமான ஒரு சேதி வருகிறது. அவனின் காதலன் மரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டான். தனது கட்டுப்பாடான தந்தையுடன் வாழும் ஆதி நல்ல கெட்டிக்காரன். தந்தையின் அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் இசைந்து வாழ்ந்த ஆதி ஒரேயொரு விடயத்தில் தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்தான். ஆதி தன்னினச் சேர்க்கையில் நாட்டமுள்ளவன். தந்தையால் இதை ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை. தந்தையின் பேச்சுக்கு அடங்கியமையே தன் காதலனின் தற்கொலைக்கும் காரணம் என ஆதி நினைக்கிறான். குற்றவுணர்ச்சியில் பேச்சைக் குறைத்துக் கொள்கிறான். தந்தையின் எதிர்பார்ப்புகளுக்கும் தனது இழப்புக்குமிடையே தத்தளிக்கும் ஆதி ஒரு முடிவெடுக்கிறான்.

இவர்கள் அனைவரும் தமக்கான வழிகளில் ஒரு முடிவு தேட முயல்வதே படத்தின் உச்சக்கட்டம். இந்த ஆறு கதைகளையும் வன்முறையையும் துயரத்தையும் குறிக்கும் ஒரு துப்பாக்கியும் நம்பிக்கையையும் மீளெழுச்சியையும் குறிக்கும் ஒரு மோதிரமும் தொடுக்கின்றன. இந்தப் பாத்திரங்களின் வாழ்க்கையில் சிலர் இழப்பிலிருந்தும் துயரிலிருந்தும் மீண்டெழ முயற்சிக்க, வேறு சிலர் விபரீதமான முடிவுகளுக்குப் போகின்றனர். எதிர்பாராத விளைவுகள், எதிர்பாராத முடிவுகள்.

பங்கு பற்றிய திரைப்பட விழாக்கள்[தொகு]

 • சாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா (SIFF) in June 2013
 • மொன்ரியல் உலக திரைப்பட விழா (MWFF) in Aug 2013
 • லூஈவில் பன்னாட்டுத் திரைப்பட விழா (LIFF) in Oct 2013
 • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழா (CIFF) in Oct 2013
 • ஹமில்டன் திரைப்பட விழா (HFF) in Nov 2013
 • நார்வே தமிழ் திரைப்பட விழா (NTFF) in Apr 2014
 • சென்னை பெண்களுக்கான உலக திரைப்பட விழா (CWIFF) in May 2014

விருதுகள்[தொகு]

 • சாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் தங்க குவளை விருதுக்கான தேர்வு
 • ஹமில்டன் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்க்கான தேர்வு
 • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்தபடத்திற்கான சபயர் விருது ( Sapphire Award for Best Feature Film)
 • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர்க்கான சபயர் விருது (Sapphire Award for Best Director)
 • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான எமெறோல்ட் விருது (Emerald Award for Best Actor Jon Berrie)
 • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பச்சை விருது (Green Award for Best Actor Kandasamy Gangatharan)
 • நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்க்கான விருது
 • நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர்க்கான விருது
 • நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது

தயாரிப்புக் குறிப்புகள்[தொகு]

2011இல் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் சபேசன் ஜெயராஜசிங்கத்துக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அவர் முன்பு இணைந்து பணியாற்றிய, நீண்டகாலக் கூட்டாளி, வளர்ந்துவரும் இயக்குநர் லெனின்.எம்.சிவத்திடமிருந்தே அந்த மின்னஞ்சல்;. பல விருதுகளை வென்ற '1999' திரைப்படத்தை லெனின் இயக்க ஒளிப்பதிவு செய்திருந்தார் சபேசன். லெனினின் மின்னஞ்சல் ஒரு புதிய திரைக்கதையைக் கொண்டிருந்தது. அதற்கு முந்திய 5 வாரங்கள் லெனின் அதற்காக அல்லும் பகலும் உழைத்திருந்தார். ஈழத்துப் போரிலிருந்து தப்பி கனடாவில் புதுவாழ்வைக் கட்டியெழுப்ப முனைவோரின் கதை நன்றாக இருந்ததாக சபேசனுக்கும் பட, கதையை லெனினோடு இணைந்து செப்பனிட்டார் சபேசன். அதன்பின், மொன்றியலில் வாழும் இளம் தொழிலதிபர் விஷ்ணு முரளி தனது Eyecatch Multimedia சார்பில் தயாரிக்க முன்வந்தார் உலகின் மிகக் கொடூரமான, ஊடகங்களால் கண்டுகொள்ளாமலேயே விடப்பட்ட ஈழப்போர் முடிந்து 3வது ஆண்டு நினைவு நாளான மே 19, 2012 அன்று படப்பிடிப்புத் தொடங்கியது.படத்தில் பங்கெடுத்த எல்லோருமே ஏதோ ஒரு முழு நேரவேலை செய்துகொண்டிருந்தபடியால், படப்பிடிப்பு கவனமாகத் திட்டமிடப்பட்டது. பெரும்பாலானோர் தமக்கான விடுமுறை நாட்களைப் பயன்படுத்தினர். ஓய்வொழிச்சலின்றி 14 நாட்கள் தொடர் படப்பிடிப்பு. ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த நடிகர்கள் உட்பட, 50 நடிகர்கள். 40 வரையிலான திரைக்குப் பின்னான உழைப்பாளிகள். 52 இடங்களில் படப்பிடிப்பு. ஒளிப்பதிவாளர் சுரேஷ் ரோஹின், நேரத்தை மிச்சப்படுத்த ஒரே நேரத்தில் இரு காமராக்கள் பயன்படுத்த ஆலோசனை சொன்னார். மட்டுப்படுத்தப்பட்ட தயாரிப்புச் செலவு. இரண்டு Red One கமெராக்கள் அதிக செலவாகுமென்பதால் இரு Si - 2K கமெராக்கள் பயன்படுத்தப்பட்டன.

படப்பிடிப்பு என்பது தனக்கேயான சவால்களையும் கொண்டிருந்தது. குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது கடைசிநாள் படப்பிடிப்பு. குறித்த காட்சி வெளிப்புற வாகனத்தரிப்பிடமொன்றில் படமாக்கப்படவேண்டும்... அதுவும் இரவில். இரவு முழுவதும் பலத்த மழை. அதுவே படப்பிடிப்பின் கடைசி நாள் என்பதாலும் வாடகைக்குப் பெறப்பட்டிருந்த படப்பிடிப்பு உபகரணங்கள் மறுநாள் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்பதாலும் படப்பிடிப்பு உபகரணங்களைச் சிறு கூடாரங்களுக்குள் வைத்துப் படப்பிடிப்பு நடத்தக் குழு தீர்மானித்தது. எல்லாம் தயார். இப்போது படத்தின் கலைப்பிரிவு புதிய எண்ணம் கொண்டது. குழுவினர் பயன்படுத்திய கட்டடம் அருகேயிருந்தது. அதிலேயே படப்பிடிப்பு நடத்தலாமென்பது புதிய திட்டம். அந்தக் கட்டடம் ஓர் உள்ளக கிரிக்கெட் பயிற்சிக் கூடம். அதைக் கைவிடப்பட்ட ஒரு கட்டடமாக மாற்றி, காட்சி கட்டடத்தின் உள்ளே நடப்பதாகக் காட்டத் தீர்மானிக்கப்பட்டது. அந்தக் கட்டடத்தை ஒரு பாழடைந்த கட்டடமாக மாற்ற முழுக்குழுவினருமே பம்பரமாய் இயங்கினர். இரவு 11.00 மணிக்கு மாற்றம் முற்றுப்பெற்றது. முதலாவது காட்சி படமானதும் எல்லோரும் கைதட்டி மகிழ்ந்தனர். அதிகாலை 4.00 மணிக்குப் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. படத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு காட்சியாக அந்தக் காட்சி அமைந்தது. இவ்வாறாக படக்குழுவினர் பலரும் பல்வேறு அருமையான ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டமையும் இப்படம் நிறைவேறக் காரணம்.

படப்பிடிப்பின் பின்னான வேலைகள் ஏப்ரல் 2013இல் முடிவடைந்தன. மே 20,2013இல் இயக்குநர் லெனின் எம்.சிவம் A Gun & A Ring, 16வது ஷாங்காய் சர்வதேசத் திரைப்படவிழாவுக்குத் தெரிவான மகிழ்வான செய்தியை அறிவித்தார்.

நடிகர்கள்[தொகு]

 • ஜான் பெரி
 • மதிவாசன் சீனிவாசகம்
 • கந்தசாமி கங்காதரன்
 • சேகர் தம்பிராசா
 • பாஸ்கர் மனோகரன்
 • தேனுகா கந்தறாயா
 • பவானி சோமசுந்தரம்
 • செல்வஜோதி ரவீந்திரன்
 • ஷெளி ஆந்தனி
 • சுதன் மகாலிங்கம்
 • கோபி திரு
 • பார்த்தி புவன்

வெளி இணைப்புகள்[தொகு]

விமரிசனங்கள்


வலைத்தளங்கள்