அவகாசியிலிக் கொள்கை
அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse) என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.[1]
அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரரசுகளில் ஆட்சியாளரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியானவராகவோ நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னரரசு பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியில் இணைக்கப்படும்.
பொருளடக்கம் |
ஒன்றிணைப்பு [தொகு]
பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் அவகாசியிலிக் கொள்கையின்படி, சத்தாரா (1848), செய்ப்பூர் (1849), சம்பல்பூர் (1849), நாக்பூர் (1854), சான்சி (1854), தஞ்சை (1855), அவாது (1856), உதயப்பூர் ஆகிய மன்னரரசுகளைச் சொந்தமாக்கிக் கொண்டது.[2]
சான்சி [தொகு]
சான்சியின் மகாராசா கங்காதர இராவு நேரடி வாரிசின்றி நவம்பர் 21, 1853இல் இறந்தமையால் ஆங்கிலேயர் அவகாசியிலிக் கொள்கையின்படி சான்சியைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வர முயற்சித்தனர்.[3] மார்ச்சு, 1854இல் இராணி இலட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து சான்சிக் கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறினர்.[4] ஆயினும் இராணி இலட்சுமிபாய் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பின்னர், ஈ உரோசு தலைமையிலான பிரித்தானியப் படை வீரர்கள் படையெடுப்பின் மூலம் சான்சியைக் கைப்பற்றினர். ஆகையால், 1857ஆம் ஆண்டுப் ஏற்பட்ட பெரும்புரட்சியின் போது சான்சியில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு இராணி இலட்சுமிபாய் தலைமை தாங்கி நடத்திட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.[5]
அவாது [தொகு]
ஆங்கிலேயர்கள், அவாதின் ஆட்சியாளர் ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவர் எனக் கூறி அவாதைத் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஆனாலும் இவ்வொன்றிணைப்பு எதிர்க்கப்பட்டதுடன் 1857 இந்தியக் கிளர்ச்சிக்கான காரணமாகவும் அமைந்தது.[6]
