அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில்
அருப்புக்கோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் (Aruppukottai Arulmigu Muthumariyamman kovil) தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை நகரில் அமைந்துள்ளது இக்கோவில் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட கோவில் ஆகும்.
கோவில் தல வரலாறு
[தொகு]முந்தைய காலத்தில் திருநல்லூர் என்று வழங்கப்பட்ட அருப்புக்கோட்டையின் வடபகுதி காட்டுப்பகுதியாக இருந்தது. கி.பி.1865 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தின் காலை வேளையில் விறகு, சாணம் எடுப்பதற்காக ஒரு பெண் அந்தக் காட்டுப் பகுதிக்குள் சென்றாள். அந்தப் பெண் விறகு எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் அவளின் பின்னால் இருந்து 'பெண்ணே இந்த இடத்தைத் தூய்மை செய்து நீர் தெளிப்பாயாக' என்றும் 'இந்த இடத்தைத் தூய்மை செய்து நீர் தெளித்தால் கால்பணம் கிடைக்கும்' என்றும் ஒரு குரல் கேட்டது. அந்தப் பெண் வியப்படைந்து அந்த இடத்தை வேப்ப இலைகள் கொண்டு தூய்மை செய்து நீர் தெளித்தாள். அப்போது அந்த இடத்தில் கால்பணம் கிடைத்தது. அந்தப் பெண் மகிழ்ச்சி அடைந்தாள்.மறுநாளும் இதே போல் நிகழ அப்பெண் ஊர்க்காரர்களிடம் நிகழ்ந்தவற்றைக் கூற அனைவரும் அந்த இடத்திற்குச் சென்றனர். அப்போது 'இந்த இடத்தில் நான் முத்துமாரியாக எழுந்தருளி மக்களுக்கு அருள்புரிவேன்' என குரல் கேட்டது. எனவே, நாடார் சமுதாய மக்கள் அந்த இடத்தில் பத்மபீட கற்றளி ஒன்று அமைத்து முத்துமாரியம்மனை வழிபட்டார்கள். இதுவே இத்தலத்தின் வரலாறாக கூறப்பட்டு வருகிறது. தற்போது முத்துமாரியம்மன் கோவில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய கோவிலாகக் கட்டப்பட்டு அனைவரும் வழிபடும் கோவிலாக அருப்புக்கோட்டையில் அமைந்துள்ளது.[1][2]
பங்குனிப் பொங்கல் விழா
[தொகு]அருப்புக்கோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனிப் பொங்கல் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.[3]
கொடியேற்றம்
[தொகு]ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதத்தில் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அன்று அருப்புக்கோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் பங்குனிப் பொங்கல் விழா துவங்குகிறது. அன்று இரவு கோவில் அறங்காவலர்,உறவின்முறைத்தலைவர், அம்பலகாரர்கள், ஊர்ப்பெரியவர்கள், பொதுமக்கள் அனைவரும் நாடார்கள் உறவின்முறை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து கோவிலில் கொடியேற்றுவர். அன்று முதல் நேர்த்திக்கடன் செலுத்தும் பெண்கள் கோவிலைச் சுற்றி தண்ணீர் எடுத்து ஊற்றுவர்.
காப்பு கட்டுதல்
[தொகு]கோவிலில் உருண்டு கொடுப்பவர்கள்,பால்குடம் எடுப்பவர்கள், அலகு குத்துபவர்கள், சிலார் குத்துபவர்கள், தீச்சட்டி எடுப்பவர்கள், பூக்குழி இறங்குபவர்கள் என நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அனைவரும் கொடியேற்றம் அன்று முத்துமாரியம்மன் கோவில் பூசாரி மூலம் தங்கள் கையில் விரல் மஞ்சள் கிழங்குடன் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்வார்கள். இதுவே காப்பு கட்டுதல் எனப்படுகிறது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வரை கையில் காப்பு கட்டியிருப்பார்கள்.
பொங்கல் விழா
[தொகு]கோவில் கொடியேற்ற நாளில் இருந்து எட்டாம் நாள் பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்று பெண்கள் விரதம் இருந்து கோவிலின் முன் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். நேர்த்திக்கடனாக மண்பொம்மைகளைக் கோவிலில் செலுத்துவர். மாவிளக்கு வழிபாடு செய்வர். பொங்கல் நாளன்று இரவு அம்மனுக்கு வெண் சாதம், நெத்திலி கருவாடு படைத்து வழிபாடு செய்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.
தீச்சட்டி
[தொகு]கோவில் கொடியேற்ற நாளில் இருந்து ஒன்பதாம் நாள் தீச்சட்டி திருவிழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை முதலே நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் தீச்சட்டி, 21 சட்டி, 51 சட்டி, 101 சட்டி என தங்கள் நேர்த்திக் கடனை நள்ளிரவு வரை செலுத்துவர். தீச்சட்டியானது நாடார் சிவன் கோவில் என அழைக்கப்படும் அமுதலிங்கேசுவரர் கோவிலில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ள வாழவந்த அம்மன் முன்பு வளர்க்கப்படுகிறது. பின் அங்கிருந்து கடைத்தெரு வழியே ஊர் முழுவதும் ஊர்வலமாக மேளதாளத்துடன் எடுத்து வந்து முத்துமாரியம்மன் கோவிலில் செலுத்தப்படுகிறது.
பூக்குழித் திருவிழா
[தொகு]அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் விழாவில் மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக விளங்குவது பூக்குழித் திருவிழா ஆகும்.
வரலாறு
[தொகு]அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பெரிய கருப்ப நாடார் என்பவர் ரெங்கூன் சென்று வியாபாரம் செய்து வந்தவர். அவரது மூத்த மகன் நடராசன் குழந்தையாக இருந்த போது குழம்புச் சட்டியில் தவறி விழுந்துவிட்டார். குழந்தையின் உடல்நிலை மோசமானது. குழந்தையைக் காப்பாற்றுமாறு வேண்டி பெரிய கருப்ப நாடார் முத்துமாரியம்மனை வழிபட்டார். ரெங்கூனில் பூக்குழி விழாவைப் பார்த்திருந்த அவர் குழந்தை நலம் அடைந்தால் அதேபோல் பூக்குழி இறங்குவதாக வேண்டினார். குழந்தை நலம் அடைந்ததால் தன் நேர்த்திக்கடனான பூக்குழியை நிறைவேற்றினார். அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் முதன் முதலாக மதலை நாடார் உதவியுடன் பெரிய கருப்ப நாடார் தன் தாயாருடன் பூக்குழி இறங்கினார்.[4]
விரத முறைகள்
[தொகு]பூக்குழி இறங்கும் பக்தர்கள் பங்குனி மாதம் முதல் நாளில் இருந்து விரதம் தொடங்குவார்கள்.
- அசைவ உணவு எதுவும் உண்ணமாட்டார்கள்.
- காலில் செருப்பு அணியமாட்டார்கள்.
- பயிறு வகைகள், கீரை வகைகள், பாகற்காய் சாப்பிடவோ, சமைக்கவோ மாட்டார்கள்.
- யார் வீட்டிலும் உணவு உண்ணமாட்டார்கள்.
- இறப்பு நிகழ்ந்த வீட்டிற்குச் செல்லமாட்டார்கள்.
- இரவு வெறும் தரையில் தலையணை, போர்வையின்றியே உறங்குவார்கள்.
பூக்குழி அமைப்பு
[தொகு]பூக்குழியானது அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் முன்பு பதினெட்டு அடி நீளமும் மூன்று அடி அகலமும் மூன்று அடி ஆழமும் கொண்டு தோணி போல் வடிவமைக்கப்படுகிறது. இவ்வாறு வடிவமைக்கப்படுவது தமிழ்நாட்டிலேயே அருப்புக்கோட்டையில் மட்டும்தான் என்பது சிறப்பானது. பூக்குழி பசுவின் சாணத்தால் மெழுகப்பெற்று மலர்கள் தூவப்பெற்று கோலமிடப்பட்டு அழகுபடுத்தப்படும்.
பூக்குழி பற்ற வைத்தல்
[தொகு]பூக்குழி முழுவதும் விறகுகள் சீராக அடுக்கப்படும். வானில் கருடன் வந்து மூன்று முறை வலம் வருவது இங்கு ஒவ்வோர் ஆண்டும் வழக்கமாக நடைபெறக்கூடிய ஒன்றாக உள்ளது. கருடன் வலம் வந்த பின்பே பூக்குழியில் மஞ்சள், பால், வெண்ணெய் ஊற்றப்பட்டு , சூடம் ஏற்றப்பட்டு தீ பற்றவைக்கப்படும். அன்றைய நாள் முழுவதும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக விறகு, உப்பு, மிளகு, வெண்ணெய் போன்ற பொருள்களைச் செலுத்துவார்கள். அதிகாலை வரை தீ நன்கு எரியும். தீ எரியும் போது இடையிடையே நீண்ட கம்பிகள் மூலம் கங்குகள் சமமாகப் பரப்பிவிடப்படுகின்றன.
பூக்குழி இறங்குதல்
[தொகு]கோவில் கொடியேற்ற நாளில் இருந்து பத்தாம் நாள் அதிகாலையில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நடப்பார்கள். ஒரு முறையோ, மூன்று முறைகளோ பூக்குழியில் இறங்குவார்கள். பூக்குழியில் இறங்கும்போது பக்தர்கள் அனைவரும் ஓம் சக்தி, பராசக்தி என்றும் ஆகோ அய்யாகோ என்றும் முழங்குவர். இந்நிகழ்வைக் காண அருகிலுள்ள பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து காத்திருப்பார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தினமலர்". பங்குனி விழா மலர். 6-04-2016. pp. 2,3.
- ↑ கவிஞர் அ.காசி (1982). மாரியைப் பணிகுவம். வரலாறு: பார்வதி அச்சகம். pp. 3, 4, 5.
- ↑ அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் விழா, தினமலர், நாள்: மே 26, 2017.
- ↑ முத்துமாரியம்மன் பூக்குழி விழா. பூக்குழி: RMP Family. 2006. pp. 4, 15, 19.