அனைத்துலக நீதிமன்றம்
அனைத்துலக நீதிமன்றம் |
|
|---|---|
அமைதி மாளிகை, அனைத்துலக நீதிமன்றத்தின் தலைமையகம். |
|
| வகை | முதன்மை உறுப்பு |
| சுருக்கப்பெயர் | ICJ, CIJ |
| தலைமை | அனைத்துலக நீதிமன்றத்தின் தலைவர் டேம் ரோசலின் ஹிக்கின்ஸ் DBE |
| நிலை | செயற்படுகிறது |
| நிறுவப்பட்டது | 1945 |
| இணையதளம் | www.icj-cij.org |
அனைத்துலக நீதிமன்றம் (International Court of Justice) என்பது, ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான தனியார் ஆய்வு மையமான, ஹேக் அனைத்துலகச் சட்ட அக்கடமி என்னும் நிறுவனத்துடன் அமைதி மாளிகை (Peace Palace) என அழைக்கப்படும் கட்டிடத்தை அனைத்துலக நீதிமன்றம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் பல நீதிபதிகள் மேற்படி அக்கடமியுடன் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தின்படி 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந் நீதிமன்றம் 1946 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கியது. இது முன்னர் இயங்கிவந்த நிரந்தர அனைத்துலக நீதிமன்றம் (Permanent Court of International Justice) என்பதற்கான பதிலீடாகச் செயல்பட்டது. இதன் சட்டங்களும் இதன் முன்னோடியின் சட்டங்களை ஒத்ததே. அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் என்பதும் அனைத்துலக அளவிலான நீதி வழங்குதலுடன் தொடர்புடையதாக இருப்பினும் அதுவும், அனைத்துலக நீதிமன்றமும் ஒன்றல்ல.
இதன் உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், முறையான அதிகாரம் பெற்ற அனைத்துலக அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆகியவை முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய பணிகளாகும். இதன் வரலாற்றில் மிகக் குறைந்த வழக்குகளையே இது கையாண்டுள்ளது எனினும், 1980 களுக்குப் பின்னர் இந் நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில், சிறப்பாக வளர்ந்துவரும் நாடுகள் மத்தியில், ஆர்வம் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபைப் பட்டயத்தின் 14 ஆம் பிரிவு, உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதற்குப் பொதுச்சபைக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனினும் இது சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தடுப்பு வாக்குரிமைக்கு உட்பட்டது ஆகும்.