பிரேமாவதி மனம்பேரி
பிரேமாவதி மனம்பேரி (Premawathi Manamperi, 1949–1971) என்பவர் இலங்கையின் தென்பகுதியில் உள்ள கதிர்காமத்தைச் சேர்ந்த அழகியும், இடதுசாரிப் போராளியும் ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டில் நடந்த மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியின் போது இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]பிரேமாவதி 10 பேர் கொண்ட சிங்களக் குடும்பம் ஒன்றில் மூத்தவராக 1949 ஆம் ஆண்டில் பிறந்தார்.[1] பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்ற இவர் பௌத்த பாடசாலை ஒன்றில் குழந்தைகளுக்கு பௌத்தம் கற்பிக்கும் ஆசிரியையாகப் பணியாற்றினார்.[2] 1969 இல் கதிர்காமத்தில் நடந்த புதுவருட கிராம அழகிப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவதாகவும், பின்னர் 1970 மீண்டும் கலந்து கொண்டு முதலாவதாகவும் வந்தார்.[2][3]
கிளர்ச்சி
[தொகு]மனம்பேரி மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து, அவ்வியக்கத்திற்கு சீருடைகள் தைத்துக் கொடுத்து உதவி செய்து வந்தார்.[2] 1971 ஏப்ரலில் தென்னிலங்கையில் இடம்பெற்ற ஜேவிபி கிளர்ச்சியின் போது, கதிர்காமம் முக்கிய நகரமாக செயற்பட்டது. ஏப்ரல் 16 இல் இலங்கைத் தரைப்படை இக்கிளர்ச்சியை அடக்கி, நகரை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இளைஞர்கள் பலர் காட்டினுள் தப்பி ஓடினர். பிரேமாவதி உட்பட சில பெண்கள் போராளிகளுக்கு உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.[3]
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பிரேமாவதி இரவு முழுவதும் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். பின்னர் அவரை நிர்வாணமாக்கிய இராணுவத்தினர் கதிர்காமம் புனித நகரின் வீதிகளில் நிர்வாணமாக இழுத்து வந்து,[2] பொது மக்கள் முன்னிலையில் துன்புறுத்தப்பட்டு, அஞ்சலகம் ஒன்றின் முன்னால் அவரை சுட்டு தீ வைத்து விட்டு அகன்றனர். பின்னர் மீண்டும் திரும்பி வந்து சுட்டுக் கொன்றனர். மனம்பேரி இறுதியில் தலையில் சூட்டுக் காயம் பட்டு இறந்தார்.[3][4]
பிரேமாவதியைக் கொலை செய்த குற்றத்திற்காக லெப்டினண்ட் ஏ. விஜயசூரிய, அமரதாச இரத்திநாயக்கா இருவரும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இருவருக்கும் 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[5] 1988 ஆம் ஆண்டில் லெப்டினண்ட் விஜயசூரியா மாத்தறையில் வைத்து மக்கள் விடுதலை முன்னணியினரால் கொல்லப்பட்டார்.
1977 தேர்தல்
[தொகு]பிரேமாவதியின் கொலை தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்பிரச்சினை 1977 நாடாளுமன்றத் தேர்தலில் அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசுக்கு எதிரான பிரசாரமாக ஐதேக வேட்பாளர் ஜே. ஆர். ஜெயவர்தனவினால் முன்னெடுக்கப்பட்டது.
திரைப்படம்
[தொகு]பிரேமாவதி மனம்பேரியின் கதை 2001 ஆம் ஆண்டில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதில் சங்கீதா வீரரத்தினா பிரேமாவதியாக நடித்தார்.
மேலதிக வாசிப்பிற்கு
[தொகு]- Justice A. C. Alles (1979). Insurgency – 1971 : An Account of the April Insurrection in Sri Lanka (Third printing ed.). The Colombo Apothecaries' Co. Colombo.
- Rohan Gunaratna (1990). Sri Lanka - A Lost Revolution? The Inside Story of the JVP. Institute of Fundamental Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-26-0004-9.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pilgrims hold up film shooting". சண்டே டைம்சு. 2001. பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ 2.0 2.1 2.2 2.3 முருகபூபதி, லெ. (01-05-2015). "எழுதமறந்த குறிப்புகள் 02". Archived from the original on 2015-05-06. பார்க்கப்பட்ட நாள் 23-03-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 3.0 3.1 3.2 "Loss of Youth". The Nation. 2007. Archived from the original on 2007-05-05. பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ Gooneratne, Elmo (29-11-2014). "Premawathie Manamperi brutally killed, buried alive". Archived from the original on 2016-10-12. பார்க்கப்பட்ட நாள் 23-03-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "A. WIJESURIYA and another, Appellants, and THE STATE, Respondent". LawNet - Sri Lanka's Legal Information Network. Archived from the original on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2018-03-23.