பஞ்சூர்லி
பஞ்சூர்லி (Panjurli), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் துளு நாட்டின் பகுதிகளான தெட்சிண கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்ட கிராமப்புற மக்களால் ஆடப்படும் பூத கோலா ஆட்டத்தின் ஒரு பகுதியாக வணங்கப்படும் ஆண் காட்டுப்பன்றியின் தெய்வீக ஆவி ஆகும். துளு மொழியில் பஞ்சூர்லி என்றால் காட்டுப்பன்றிக் குட்டி என்று பொருள். பஞ்சூர்லி ஆட்டத்தின் போது ஆடுபவர் தெய்வீக ஆண் காட்டுப்பன்றி தலை வடிவ உலோக முகமூடி அணிந்திருப்பர்.
வரலாறு
[தொகு]துளு நாட்டில் காட்டுப்பன்றிகள் விவசாயிகளின் சாகுபடி பயிர்களை அழித்து வந்ததால், விவசாயிகள் காட்டுப்பன்றிகளின் ஆவிகளை வணங்கத் தொடங்கினர். இது பின்வரும் கதையின் மூலம் இந்து மதத்தில் உள்வாங்கப்பட்டது. புராதன துளு இலக்கியம் இலக்கியத்தின் படி, பார்வதி தேவி ஒரு காட்டுப்பன்றியின் குட்டியை தனது செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். ஒரு முறை அப்பன்றிக்குட்டி கைலாசத்தில் உள்ள தோட்டங்களை அழித்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் காட்டுப்பன்றியை கொன்றார். இது பார்வதியை பெரிதும் வருத்தியது. அவளைச் சமாதானப்படுத்த, சிவன் அதை ஒரு ஆவியாக மீண்டும் உயிர்ப்பித்து, மக்களைப் பாதுகாக்கவும், தீமையிலிருந்து நன்மைக்கு வழிநடத்தவும் பூமிக்கு அனுப்பினார்.
பூத கோல வடிவில் பூத வழிபாடு துளு நாட்டு (மங்களூர், உடுப்பி, குந்தபுரா போன்ற தென் கடலோர கர்நாடகா மாவட்டங்கள்) மற்றும் கேரளாவின் காசர்கோடு பகுதியில் கொண்டாடப்படுகிறது. பூத கோல வழிபாடு கிராம சமூக-கலாச்சார வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகும். பூதா என்பது ஒரு தெய்வீக ஆவியாகும், இது அதன் வழிபாட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பதாகவும் மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. பூத கோலமானது உறுதியான மற்றும் அருவமான உலகங்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறது. குறைந்தது 350 வகையான பூதங்கள் உள்ளன, அவை டோட்டெமிக் தோற்றம் கொண்டவை அல்லது இந்து கடவுள்கள் அல்லது அவர்களின் மரணத்திற்குப் பிறகு புனிதர்களாக மாறிய மனித கதாநாயர்களிடமிருந்து பெறப்பட்டவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பூத கணங்களை பின்பற்றுபவர்கள் மற்றும் சிவனின் பக்தர்களின் பிரிவைச் சேர்ந்தவர்கள் என நம்புகிறார்கள்.
இந்த பூதங்களின் கட்டளைகளை எடுத்துரைப்பவர்கள் தெய்வ வாக்கு கூறும் பூசாரிகள் ஆவார். நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து பூத கோலங்கள் நீதி வழங்குவதற்கான ஒரு தளமாக செயல்பட்டது. அங்கு குடும்ப தகராறுகள் மற்றும் சொத்துப் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்தல் மற்றும் நீதியை வழங்குவதற்கான ஆவிகள் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த வழிபாட்டு சடங்குகளின் போது சாமியாடிகள் அல்லது பூசாரிகள் மிகவும் விரிவான வண்ண உடைகளால் அலங்காரம் செய்திருப்பர். மேலும் தலையின் அணியும் ஆண் பன்றித் தலை உலோக முகமூடி பிரபலமானவை ஆகும் இவை இந்த புனிதக் காட்டுப் பன்றியின் ஆவிகளின் பிரதிநிதிகளாக பஞ்சூர்லி நடனம் ஆடுபவர்கள் கிராம மக்களால் வணங்கப்படுகின்றனர்.[1]