உள்ளடக்கத்துக்குச் செல்

ஞாநி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஞாநி
ஞாநி சங்கரன்
பிறப்புவே. சங்கரன்
(1954-01-04)சனவரி 4, 1954
செங்கல்பட்டு, தமிழ்நாடு
இறப்பு15 சனவரி 2018(2018-01-15) (அகவை 64)
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்ஓ பக்கங்கள் ஞாநி, பரீக்‌ஷா ஞாநி
கல்விபி.ஏ.
பணிபத்திரிகையாளர்
பணியகம்இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, ஆனந்த விகடன், முரசொலி, தீம்தரிகிட
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்மத நம்பிக்கையற்றவர்
பெற்றோர்வேம்புசாமி, பங்காரு
வாழ்க்கைத்
துணை
பத்மா
பிள்ளைகள்மகன்: மனுஷ் நந்தன்

ஞாநி என்றும் ஞாநி சங்கரன் என்றும் அறியப்படுபவர் (4 சனவரி 1954 - 15 சனவரி 2018) தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர்; இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன்.

சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தி வந்தவர். பரீக்‌ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். தீம்தரிகிட என்ற பத்திரிகையை நடத்தியவர்.[1] இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை; பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு எளிய மக்கள் கட்சியின் சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 2014 சூன் 28 அன்று எளிய மக்கள் கட்சியிலிருந்து விலகினார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

அப்பா வேம்புசாமி (1907-1997) சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்; அம்மாவின் பெயர் பங்காரு. செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் அவரை பேச்சு, எழுத்து, நடிப்புத் துறைகளில் ஈடுபடுத்தியது. பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தபோது 1971 தேர்தலில் காமராஜ்-ராஜாஜி-சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி-கருணாநிதியின் அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸில் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார் (1973-74). பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார் (1974). அதன் பின்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார் (1975).

மறைவு

[தொகு]

சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த ஞாநி சென்னை கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் 2018 சனவரி 15 திங்கட்கிழமை அன்று காலமானார்.[2]

ஆக்கங்கள்

[தொகு]

கட்டுரைத் தொகுப்புகள்

[தொகு]
  • பழைய பேப்பர்
  • மறுபடியும்
  • கண்டதைச் சொல்லுகிறேன்
  • கேள்விகள்
  • மனிதன் பதில்கள்
  • நெருப்பு மலர்கள்
  • பேய் அரசு செய்தால்
  • அயோக்யர்களும்முட்டாள்களும்
  • கேள்விக் குறியாகும் அரசியல்
  • அறிந்தும் அறியாமலும்
  • ஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்)[3]
  • என் வாழ்க்கை என் கையில் (இணையாசிரியர்: மா)
  • ஆப்பிள் தேசம் (தினமணி கதிர்-ல் வெளிவந்த பயணக் கட்டுரைத் தொடர்)

நாடகங்கள்

[தொகு]
  • பலூன்
  • வட்டம்
  • எண் மகன்
  • விசாரணை
  • சண்டைக்காரிகள்

புதினங்கள்

[தொகு]
  • தவிப்பு

திரைக்கதை

[தொகு]
  • அய்யா (பெரியார் வாழ்க்கை)

குறும்படங்கள்

[தொகு]
  • அய்யா
  • ஜேம்ஸ் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? (ஒரு ரீல் இயக்கத்தின் சார்பில் ஒரே ரீலில், ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது)

மேற்சான்றுகள்

[தொகு]
  1. செல்வ புவியரசன் (12 மே 2018). "தீம்தரிகிட: ஓங்கி ஒலித்த ஒற்றைக் குரல்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 மே 2018.
  2. "எழுத்தாளர் ஞாநி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்".
  3. ஓ! பக்கங்கள் (பாகம் 1)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞாநி&oldid=4145661" இலிருந்து மீள்விக்கப்பட்டது