உள்ளடக்கத்துக்குச் செல்

சிறி கிருட்டிணா சின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறி கிருட்டிணா சின்கா (Shri Krishna Sinha ) (1887 அக்டோபர் 21 - 1961 சனவரி 31) இவர் இந்திய பீகார் மாநிலத்தின் முதல் முதலமைச்சராக இருந்தார் (1946-61). இரண்டாம் உலகப் போரின் காலத்தைத் தவிர, சிறி கிருட்டிணா சின்கா 1937 முதல் காங்கிரசு அமைச்சகத்தின் காலத்திலிருந்து 1961 இல் தான் இறக்கும் வரை பீகார் முதல்வராக இருந்தார். [1] தேச ரத்னா இராஜேந்திர பிரசாத் [2] மற்றும் பீகார் விபூதி அனுக்ரா நாராயண சின்கா ஆகியோருடன், கிருட்டிணா ' நவீன பீகாரை உருவாக்கிய கலைஞர்கள் ' எனக் கருதப்படுகிறார். தேவ்கர், வைத்தியநாதர் கோயிலுக்குள் தலித்துகள் நுழைவதற்கு இவர் தலைமை தாங்கினார். இது தலித்துகளின் முன்னேற்றம் மற்றும் சமூக வலுவூட்டலுக்கான இவரது உறுதிப்பாட்டை பிரதிபலித்தது. [3] ஜமீந்தாரி முறையை ஒழித்த நாட்டின் முதல் முதல்வர் இவராவார். [4] இவர் பிரிட்டிசு இந்தியாவில் மொத்தம் சுமார் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். கிருட்டிணா சின்காவின் பேச்சைக் கேட்க வெகுஜனங்கள் அதிக அளவில் கூடினர். இவர் மக்களிடம் உரையாற்றும்போது சிங்கம் போன்ற கர்ஜனைகளுக்காக பீகார் கேசரி என்றும் அழைக்கப்பட்டார். இவரது நெருங்கிய நண்பரும் புகழ்பெற்ற காந்தியவாதியுமான பீகார் விபூதி முனைவர் அனுக்ரா நாராயண சின்கா தனது கட்டுரையில் இவறைப்பற்றி , "1921 முதல் பீகார் வரலாறு என்பது சிறி கிருட்டிணா சின்காவின் வாழ்க்கையின் வரலாறாகும்" என்று எழுதினார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டில், சிறி கிருட்டிணா சின்காவிற்கும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கும் இடையிலான பரிமாற்றக் கடிதங்கள் குறித்து பிரீடம் அன்ட் பியான்ட் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். சுதந்திரத்தின் ஆரம்ப ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம், மைய-மாநில உறவுகள், ஆளுநரின் பங்கு, நேபாளத்தில் கொந்தளிப்பு, ஜமீந்தாரி ஒழிப்பு மற்றும் கல்விச் சூழ்நிலை போன்ற விஷயங்களில் நேரு மற்றும் சின்கா இடையேயான கடித தொடர்பு பேசுகிறது. சின்கா தனது கல்வி மற்றும் குறிப்பிட்ட சிக்கல்களைத் தீர்க்கும் அறிவாற்றலால் அறியப்பட்டார். மேலும் இவர் 1959 ஆம் ஆண்டில் முங்கரில் உள்ள பொது நூலகத்திற்கு தனது 17,000 புத்தகங்களின் தனிப்பட்ட தொகுப்பைக் கொடுத்திருந்தார். இப்போது இதற்கு சிறி கிருட்டிணா சேவா சதன் என்று பெயரிடப்பட்டுள்ளது. [5]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்

[தொகு]

சிறி கிருட்டிணா சின்கா ஒரு பூமிகார்பிராமண குடும்பத்தில் 1887 அக்டோபர் 21 அன்று வங்காள மாகாணத்தின் முங்கேர் மாவட்டத்திலுள்ள பார்பிகா என்ற மௌர் கிராமத்தில் பிறந்தார். [6] அப்போதைய முங்கர் மாவட்டத்தில் பார்பிகாவுக்கு அருகிலுள்ள அவரது தந்தை கிராமமான மௌர் ஷேக்புரா மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அமைதியானவரும் மற்றும் மத எண்ணம் கொண்டவருமான இவரது தாயார், இவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது பிளேக் நோயால் இறந்து போனார். கிராமப் பள்ளியிலும், முங்கரில் உள்ள சிலா பள்ளியிலும் கல்வி கற்றார். 1906 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இணை நிறுவனமாக இருந்த பாட்னா கல்லூரியில் சேர்ந்தார். முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் பாட்னா பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றார். மேலும் 1915 முதல் முங்கரில் சட்டப்பயிற்சி மேற்கொண்டார். இதற்கிடையில், இவர் திருமணம் செய்து கொண்டார், சிவசங்கர் சிங் மற்றும் பாந்திசங்கர் சிங் (பொதுவாக சுவராஜ் பாபு என்று அழைக்கப்படுபவர்) ஆகிய இரு மகன்களைப் பெற்றார். பின்னர் பாந்திசங்கர் சிங் மாநில அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். [7]

சுதந்திர இயக்கம்

[தொகு]

சிறி கிருட்டிணா சின்கா முதன்முதலில் மகாத்மா காந்தியை 1916 ஆம் ஆண்டில் வாரணாசி, மத்திய இந்து கல்லூரியிலும், பின்னர் 1920 திசம்பரில் ஷா முகம்மது சுபைர் இல்லத்திலும் சந்தித்தார். முங்கரில், பிரிட்டிசு ஆட்சியில் இருந்து இந்தியாவை விடுவிக்க அயராது உழைப்பதாக சபதம் மேற்கொண்டார். [8] காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க 1921இல் சட்ட பயிற்சி செய்வதை இவர் கைவிட்டார்.

இவர் முதல் முறையாக 1922 ஆம் ஆண்டில் சுபைர் வீட்டில் கைது செய்யப்பட்டார். காங்கிரசு சேவா தளம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது. பின்னர்,இவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 1923 மற்றும் துளசி ஜெயந்தி நாளில் கரக்பூரின் மத்தியப் பள்ளியில் பாரத தரிசனம் என்ற நாடகத்தை நிகழ்த்தினார். அதே ஆண்டில் இவர் அகில இந்திய காங்கிரசு குழுவில் உறுப்பினரானார். [9]

1927 ஆம் ஆண்டில், சிறி கிருட்டிணா சின்கா சட்டமன்றக் குழுவில் உறுப்பினரானார். 1929 இல் பீகார் பிரதேச காங்கிரசு கமிட்டியின் பொதுச் செயலாளரானார். 1930 ஆம் ஆண்டில், கர்பூராவில் உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தார். கைது செய்யப்பட்டபோது இவரது கைகளிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது, ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தி-இர்வின் ஒப்பந்த்தத்திற்குப் பின்னர் இவர் விடுவிக்கப்பட்டார். மீண்டும் தனது தேசியவாதப் பணி மற்றும் விவசாயிகள் சபையுடன் பணிபுரிந்தார். 1932 சனவரி 9, அன்று அவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இவர் 1933 அக்டோபரில் ஹசாரிபாக் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 1934 நேபாளம்-பீகார் நிலநடுக்கத்திற்குப் பிறகு இவர் நிவாரணப்பணியில் ஈடுபட்டார். இவர் 1934 முதல் 1937 வரை முங்கர் ஜில்லாவின் தலைவராக இருந்தார். 1935 இல், இவர் பீகார் சட்டமன்றத்தில் உறுப்பினரானார் .

குறிப்புகள்

[தொகு]
  1. Walter Hauser (February 1997). "Changing images of caste and politics". http://www.lib.virginia.edu/area-studies/SouthAsia/Misc/Sss/whcastep.htm. 
  2. Late Sri Krishna Singh. jamui.bih.nic.in
  3. Arun Kumar (25 January 2005). "Bhumihars rooted to the ground in caste politics". http://timesofindia.indiatimes.com/Cities/Patna/Bhumihars_rooted_to_the_ground_in_caste_politics/articleshow/msid-1001601,curpg-2.cms. 
  4. Abhay Singh (6 July 2004). "BJP, Cong eye Bhumihars as Rabri drops ministers". http://timesofindia.indiatimes.com/articleshow/767453.cms. 
  5. "Archived copy". Archived from the original on 23 April 2009. பார்க்கப்பட்ட நாள் 16 October 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. Ramachandra Prasad; Ashok Kumar Sinha (1987). Shri Krishna Sinha: a biography. N.K. Enterprises.
  7. Prasad (1987). Shri Krishna Sinha: A Biography. N.K.Enterprises, New Delhi.
  8. Prasad, R.C. (1987). Shri Krishna Sinha: A Biography. N.K.Enterprises, New Delhi. p. 186.
  9. Prasad, R.C. (1987). Shri Krishna Sinha: A Biography. N.K.Enterprises, New Delhi. p. 186.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறி_கிருட்டிணா_சின்கா&oldid=2986661" இலிருந்து மீள்விக்கப்பட்டது