உள்ளடக்கத்துக்குச் செல்

கொள்ளைநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொள்ளைநோய்
200 முறை பெரிதாக்கப்பட்ட எர்சினியா பெசுட்டிசு நுண்ணுயிரி. உண்ணிகளால் பரப்பப்படும் இந்த நுண்ணுயிரி கொள்ளைநோயின் பல்வேறு வகைகளுக்கு காரணமாக உள்ளது.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10A20.a
ஐ.சி.டி.-9020
மெரிசின்பிளசு000596
ஈமெடிசின்med/3381
பேசியண்ட் ஐ.இகொள்ளைநோய்
ம.பா.தD010930

கொள்ளைநோய் (Plague) குடலிய நுண்ணுயிரி வகையான எர்சினியா பெசுட்டிசால் ஏற்படும் கொடிய நோய்த்தொற்று ஆகும். இந்த பாக்டீரியாவினால் கொள்ளைநோய் ஏற்படுகின்றது என்பதை பிரான்சிய-சுவிசு மருத்துவரான அலெக்சாண்டர் எர்சினும் சப்பானின் ஷிபாசாபுரோ கிடசாட்டோவும் 1894இல் ஹாங்காங்கில் கண்டறிந்து அறிவித்தனர். இந்த நோயைப் பரப்பும் நோய்ப்பரப்பி உயிரினமாக (vector) இறந்த எலிகளின் உடலில் வாழும் உண்ணிகளை அடையாளம் கண்டவர் பவுல்-லூயி சைமண்டு ஆகும்.

சூன் 2007 வரை உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட வேண்டிய மூன்று நோய்களில் ஒன்றாக கொள்ளைநோய் இருந்தது; வாந்திபேதியும் மஞ்சள் காய்ச்சலும் மற்ற இரு நோய்களாகும்.[1]

நுரையீரல் தொற்றால் ஏற்பட்டதா அல்லது அசுத்தம் காரணமாக ஏற்பட்டதா என்பதைப் பொறுத்து கொள்ளைநோய் காற்று மூலமாகவோ நேரடித் தொடர்பு மூலமாகவோ சரியாக சமைக்கப்படாத மாசுமிகு உணவாலோ பரவலாம். ஒவ்வொரு நபரின் பாதிக்கப்பட்ட உடற்பகுதியைப் பொறுத்து கொள்ளைநோயின் அறிகுறிகள் அமைந்திருக்கும்: அரையாப்பு பிளேக்கு நிணநீர்க் கணுக்களிலும், குருதிநச்சு பிளேக்கு குருதி நாளங்களிலும், வளியிய பிளேக்கு நுரையீரல்களிலும் ஏற்படும். துவக்கத்திலேயே சிகிட்சை அளிக்கப்பட்டால் இது குணமாகக் கூடிய நோய். உலகின் சிலபகுதிகளில் கொள்ளைநோய் இன்னமும் தொற்றுநோயாக உள்ளது.

பெயர்

[தொகு]

நோய் தோன்றுவழி ஆய்வு பயன்பாட்டில் "கொள்ளைநோய்" தற்போது அரையாப்புகளில் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுக்களைக் குறிக்கின்றது; இருப்பினும் முற்காலங்களில் உலகம்பரவுநோய்களுக்கு பொதுவாக "கொள்ளைநோய்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. கொள்ளைநோய் என்று பெரும்பாலும் "அரையாப்பு பிளேக்கேக்" குறிப்பிடப்பட்டாலும் இது இதன் ஒரு வெளிப்பாடே ஆகும்; மற்ற இரு வகைகளாக குருதிநச்சு பிளேக்கும் வளியிய பிளேக்கும் உள்ளன. இந்த நோய் "கருப்பு பிளேக்கு" என்றும் "கறுப்புச் சாவு" என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இச்சொல்லின் சொற்பிறப்பியல்: பிளேக் இலத்தீன சொல்லான plāga ("அடி, காயம்") என்பதிலிருந்தும் plangere (“அடித்தல், தாக்குதல்”) என்பதிலிருந்தும் வந்திருக்கலாம்.

தொற்றும் பரவுகையும்

[தொகு]
குருதி உண்ட கிழக்கத்திய எலித்தெள்ளு (Xenopsylla cheopsis) குருதியால் விரிந்திருத்தல். ஆசியா, ஆபிரிக்கா, தென்னமெரிக்காவில் பரவும் பெரும்பான்மையான கொள்ளைநோய்களுக்கு காரணமான எர்சினியா பெசுட்டிசு பாக்டீரியா பரவ முதன்மை நோய்க்காவியாக இந்த தெள்ளு இனம் உள்ளன. ஆண், பெண் தெள்ளு இரண்டுமே குருதி குடித்து தொற்றைப் பரப்புகின்றன.
எர்சினியா பெசுட்டிசு பாக்டீரியா தொற்றிய தெள்ளுப்பூச்சியால் கடிக்கப்பட்ட குழந்தை. பாக்டீரியா கடிக்காயத்தை சீழ்ப்புண்ணாக்குகின்றது.

இதுவரை தொற்று ஏற்படாத ஒருவருக்கு கீழ்கண்ட வகைகளில் எ. பெசுட்டிசு பாக்டீரியா பரவுகின்றது.[2]

  • திவலை தொடர்பு – மற்றொருவரின் இருமல் அல்லது தும்மல்
  • நேரடி உடல் தொடர்பு – தொற்றுள்ளவரை தொடுவதாலோ பாலுறவு கொள்வதாலோ
  • மறைமுகத் தொடர்பு – பெரும்பாலும் மாசடைந்த மண்ணையோ பிற மாசடைந்த பரப்பையோ தொடுதல்
  • காற்றுவழி பரவுகை – காற்றில் வெகுநேரம் நுண்ணுயிர் இருத்தல்
  • மல-வாய்வழி பரவுகை – பொதுவாக நுண்ணுயிரியின் கழிவு கலந்த உணவையோ நீரையோ உட்கொள்வதால்
  • நோய்க்காவி வழியான பரவுகை – பூச்சிகளாலும் பிற விலங்குகளாலும் பரவுதல்.

எர்சினியா பெசுட்டிசு விலங்குகளில், குறிப்பாக கொறித்துண்ணிகளில், வாழ்கின்றன; தொற்றுக்கான இயற்கையான குவியமாக இவை ஆத்திரேலியா தவிர்த்த அனைத்து கண்டங்களிலும் உள்ளன. கொள்ளைநோயின் முதன்மைக் குவிய பகுதியாக வெப்பமண்டல, அயனவயற் பிரதேச படுகையில் வெப்பமிகுந்த பரப்பெல்லைகளில் உள்ளது.[2]

பரவலான நம்பிக்கைகளுக்கு எதிராக எலிகள் அரையாப்பு கொள்ளைநோய்க்கான காரணமல்ல; முதன்மையாக தெள்ளுப் பூச்சிகளே (Xenopsylla cheopis) கொள்ளைநோய்க்ற்கு காரணமாகும்; இவை எலிகளைத் தொற்றுவதால் எலிகளே முதலில் கொள்ளைநோய்க்கு ஆளாகின்றன. இந்த நோய் தாக்கப்பட்ட கொறித்துண்ணியை கடித்த தெள்ளுப்பூச்சி மனிதரைக் கடிப்பதன் மூலம் இத்தொற்று பரவுகிறது. தெள்ளுப்பூச்சிக்குள் சென்ற பாக்டீரியா அங்குப் பெருகி வயிற்றை அடைக்கிறது; இதனால் பூச்சி பசியால் வாடுகிறது. இதனால் நோய்க்காவியை கடிக்கிறது; எத்தனை குருதி குடித்தாலும் பசி அடங்காது குடித்த இரத்தத்தை வாந்தி எடுக்கிறது; வெளிவந்த இரத்தத்தில் பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால் கடிபட்ட புண்ணை சீழாக்குக்கின்றன. கொள்ளைநோய் பாக்டீரியா இப்பொது புதிய விலங்கு/மனிதருக்குப் பரவுகிறது. தெள்ளுப்பூச்சி இறுதியில் உணவின்றி இறக்கிறது. எலிகள் தொகை கூடும்போதோ அல்லது அவற்றிற்கு பிற நோய்கள் உண்டாகும்போதோ கொள்ளைநோய் தொற்று தோன்றுகின்றது.

சிகிச்சை

[தொகு]

இந்தியாவின் மும்பையில் பணியாற்றிய மருத்துவர் வால்டெமர் ஆஃப்கின் கொள்ளைநோய்க்கான முதல் தடுப்பூசியை கண்டுபிடித்தவராவார். இவர் 1987இல் அரையாப்பு கொள்ளைநோய்க்கான தடுப்பு மருந்தை கண்டறிந்து சோதித்தார்.[3]

நேரத்தே இனம் காணப்பட்டால் பல்வேறு கொள்ளைநோய் வகைகளையும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொண்டு குணப்படுத்தலாம். பெரும்பாலும் இசுட்ரெப்டோமைசின், குளோராம்பெனிகோல், டெட்ராசைக்ளின் ஆகிய நுண்ணுயிர்க்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. புதியத் தலைமுறை மருந்துகளாக ஜென்டமைசின், டாக்சிசைக்ளின் ஆகியன உள்ளன.[4]

நாட்டார் வழிபாட்டில்

[தொகு]

கொள்ளைநோய் நோயின் மீது ஏற்பட்ட அச்சத்தினால் நாட்டார் வழிபாட்டில் பிளேக் மாரியம்மன் வழிபாடு இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு,[5]கருநாடகம், ஆந்திரப் பிரதேசம்[6] போன்ற தென்னிந்திய மாநிலங்களில் பிளேக் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. பிளேக் மாரியம்மன் சில கோயில்களில் முதன்மை தெய்வமாகவும், சில கோயில்களில் உபதெய்வமாகவும் வழிபடப்படுகிறார். பிளேக் மாரியம்மனுக்கான கோயில்கள் சில ; சௌரிபாளையம் சக்திமாரியம்மன் பிளேக் மாரியம்மன் கோயில், பாப்பநாயக்கன்பாளையம் ஜகன்மாதா பிளேக் மாரியம்மன் கோயில், இராமநாதபுரம் அங்காளம்மன் பிளேக் மாரியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் ஆற்காட்ட மாரியம்மன் பிளேக் மாரியம்மன் மதுரைவீரன் கோயில்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "WHO IHR Brief No. 2. Notification and other reporting requirements under the IHR (2005)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  2. 2.0 2.1 Plague Manual: Epidemiology, Distribution, Surveillance and Control, pp. 9 and 11. WHO/CDS/CSR/EDC/99.2
  3. Haffkine, W. M. 1897. Remarks on the plague prophylactic fluid. Br. Med. J. 1:1461
  4. Mwengee W; Butler, Thomas; Mgema, Samuel; Mhina, George; Almasi, Yusuf; Bradley, Charles; Formanik, James B.; Rochester, C. George (2006). "Treatment of Plague with Genamicin or Doxycycline in a Randomized Clinical Trial in Tanzania". Clin Infect Dis 42 (5): 614–621. doi:10.1086/500137. பப்மெட்:16447105. 
  5. 100010509524078 (2020-08-13). "தீராத நோய்களை தீர்க்கும் பிளேக் மாரியம்மன் கோவில்". Maalaimalar (in English). Archived from the original on 2022-05-04. பார்க்கப்பட்ட நாள் 2022-05-04. {{cite web}}: |last= has numeric name (help); Cite has empty unknown parameter: |3= (help); Text "Mariamman Temple" ignored (help)CS1 maint: unrecognized language (link)
  6. "இப்போ கொரோனா தேவி, அப்போ பிளேக் மாரியம்மன்.. கோவையில் மட்டுமே கோவில் இருக்கிறதா ?". You Turn (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-21. பார்க்கப்பட்ட நாள் 2022-05-04.

உசாத்துணைகள்

[தொகு]
  1. Pedro N. Acha , Zoonoses and Communicable Diseases Common to Man and Animals , Second Ed . P 132 .
  2. Parks Text book of Preventive and Social Medicine, 2007, 19th ed, Bhanot, Jabalpur
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளைநோய்&oldid=4142952" இலிருந்து மீள்விக்கப்பட்டது