உள்ளடக்கத்துக்குச் செல்

இலாகூரில் இந்துக்களின் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலாகூரில் இந்துக்களின் காலம் (Hindu period in Lahore) என்பது லாகூர் நகரத்தில் இந்துக்கள் இருந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆரம்பகால இளவரசர்கள் குசராத்து மற்றும் மேவாரில் ஆட்சி செய்த அதே குடும்பத்தைச் சேர்ந்த அயோத்தியைச் சேர்ந்த ராஜபுத்திரர்கள் என்று கூறப்பட்டது. கி.பி 630இல் பஞ்சாப் பகுதிக்கு வருகை புரிந்த சீனப் பயணியான சுவான்சாங், ஒரு பெரிய நகரத்தைப் பற்றி கூறியுள்ளார். இதில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருந்தன எனவும், முக்கியமாக பிராமணர்கள், சேகா இராச்சியத்தின் கிழக்கு எல்லையில் வசித்து வந்தனர் எனவும், இது சிந்து ஆறு முதல் பியாஸ் நகரம் வரை நீட்டித்திருந்தது என்றும் கூறுகிறார்.

இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் செய்தி என்ற பத்திரிக்கையில் வெளியான பஞ்சாபின் சவுகான் ராஜ்புத்திரர்கள் வேலை செய்வது தொடர்பான ஒரு படம்- 1876

பழைய இந்து-நகரம்

[தொகு]

பல வரலாற்றாசிரியர்கள் லாகூர் நகரமானது முதல் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஒரு பண்டைய ராஜபுத்திர குடியிருப்பாக நிறுவப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அநேகமாக இரண்டாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே அது விரைவில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும், பிற குடியிருப்புகளின் தாயகமாகவும், இறுதியில் ஒரு சக்திவாய்ந்த தலைவரின் தலைநகராகவும் உயர்ந்து, அதற்கு அது அதன் பெயரைக் கொடுத்தது. பழைய இந்து நகரமான லாகூர் நவீன நகரத்தின் இடத்தை சரியாக ஆக்கிரமிக்கவில்லை என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. பாரம்பரியம் பழைய லாகூரின் இடத்தை இக்ராவின் அருகே சுட்டிக்காட்டுகிறது - இது இப்போது லாகூர் நகரத்தின் ஒரு பகுதியாகும் - ஆனால் அது மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமமாக இருந்தது. இந்த கிராமத்தின் பெயர் முன்பு இக்ரா லாகூர் என இருந்தது. மேலும், இந்த வட்டாரத்திற்குள் மிகப் பழமையான மற்றும் புனிதமான சில இந்து ஆலயங்கள் உள்ளன. அதாவது பைரோ கா ஸ்தாஹின் மற்றும் சந்திரத் என்ற பெயரில் அறியப்படுகிறது. தற்போதைய நகரத்தின் நுழைவாயில், லஹோரி அல்லது லோஹரி நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது, இது காஷ்மீர் நுழைவாயில் காஷ்மீரை நோக்கி இருப்பது போலவே லோஹவர் அல்லது பழைய லாகூரின் திசையை பார்க்கும் நுழைவாயில் என்றும், பண்டைய நகரமான தில்லியின் தில்லி நுழைவாயில் இருப்பது போல. [1]

படையெடுப்புகள்

[தொகு]

முதல் முகமதியப் படையெடுப்பின் காலத்தில், லாகூர் அஜ்மீர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சௌகான் இளவரசனின் வசம் இருந்தது. ஆட்சி மாற்றத்தின் காரணமாகவோ, அல்லது ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் சாலையில் லாகூரின் பாதுகாப்பற்ற நிலையாக இருந்ததாலோ, அது பின்னர் வெறிச்சோடி, அரசாங்கத்தின் இருக்கை சியால்கோட் அல்லது அதன் அருகிலேயே மாற்றப்பட்டது, அங்கு கசினியின் மகுமூது படையெடுக்கும் காலம் வரை அது நிலைத்திருந்தது. பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மகுமூது வெறிச்சோடிய நகரத்தை மீண்டும் ஆக்கிரமித்து, கோட்டையில் ஒரு படைப்பிரிவை நிறுவினார். இது தில்லியில் உள்ள பழைய கோட்டையைப் போல, பழைய ராஜ்புத் கோட்டையின் இடிபாடுகளின் மேல் கட்டப்பட்டது.

கி.பி 682 இல், பெரிஷ்தாவின் கூற்றுப்படி, ஆரம்ப காலத்திலேயெ, இசுலாத்தை ஏற்றுக்கொண்ட கெர்மான் மற்றும் பெசாவரின் ஆப்கானியர்கள், இந்து இளவரசரிடமிருந்து சில உடைமைகளை கைப்பற்றினர். ஒரு போர் பரவியது. பலவிதமான வெற்றிகளுடன் எழுபது போர்கள் ஏற்பட்டன. ஆப்கானியர்கள், கக்கார்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி, பஞ்சாபின் உப்புத் தொடரில் வசிக்கும் ஒரு காட்டு பழங்குடி, ராஜாவை அவரது பிரதேசத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்க கட்டாயப்படுத்தினர். லாகூரைப் பற்றிய அடுத்த குறிப்பு ராஜ்புதன நாளேடுகளில் உள்ளது. அங்கு ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முஸ்லிம் படைகளால் முற்றுகையிடப்பட்டபோது, ஒரு ராஜ்புத் பழங்குடியினரான லாகூரின் புஸ்ஸாக்கள், சித்தோர்காரைப் பாதுகாக்க அணிவகுத்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபுக்களும், சீமாட்டிகளும் கூடியிருந்த மகுமூதுவின் அரசவையின் படம்.

கி.பி. 975 இல், குராசானின் ஆளுநரும் புகழ்பெற்ற மகுமூதுவின் தந்தையுமான சபக்தாகின் சிந்துவுக்கு அப்பால் முன்னேறினார். லாகூரின் மன்னனான ஜீபால் அவரைப் போரில் சந்தித்தார். அவரின் ஆதிக்கம் சிர்இந்த்-பதேகர்லிருந்து லக்மான் வரையிலும், காஷ்மீரிலிருந்து முல்தான் வரையிலும் பரவியதாகக் கூறப்படுகிறது.

பாட்டி பழங்குடியினரின் ஆலோசனையால், ராஜா ஜீபால் ஆப்கானியர்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார். மேலும் அவர்களின் உதவியுடன் முதல் படையெடுப்பைத் தடுக்க முடிந்தது. இருப்பினும், சபக்தாகின் பின்னர் காசுனியின் சிம்மாசனத்தின் மீது அடுத்தடுத்து தனது படையெடுப்பைத் தொடுத்தார். லக்மானுக்கு அருகிலேயே நடைபெற்ற ஒரு போர் தோல்வியுடன் முடிவடைந்து சமாதானம் செய்யப்பட்டது. சப்தாகினின் விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட மீட்புத் தொகையை பெற அவரது தரப்பில் நபர்கள் அனுப்பப்பட்டனர். லாகூரை அடைந்ததும், ஜீபால் அவர்களை சிறையில் அடைத்தார். [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Temple wrought with stories by Haroon Khalid
  2. "Muslim Rajputs". Archived from the original on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-10-09.