ஆந்திரேய் இலிந்தே
ஆந்திரேய் இலிந்தே Andrei Linde | |
---|---|
2018 இல் இலிந்தே | |
பிறப்பு | மார்ச்சு 2, 1948 மாஸ்கோ, உருசியா, சோவியத் ஒன்றியம் |
துறை | கோட்பாட்டு இயற்பியல் அண்டக் கட்டமைப்பியல் |
பணியிடங்கள் | இலேபெதேவ் இயற்பியல் கல்வி நிலையம் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | தாவீது கிர்சினித்சு |
அறியப்படுவது | அண்ட உப்பல் |
விருதுகள் | 2018 காமோவ் பரிசு 2014 காவ்லி பரிசு 2012 அடிப்படை இயற்பியல் பரிசு 2004 குரூபர் பரிசு 2002 திராக் பதக்கம் 2002 ஆசுக்கர் கிளெயின் பதக்கம் |
துணைவர் | இரேனாத்தா கல்லோழ்சு |
ஆந்திரேய் திமித்ரியேவிச் இலிந்தே (Andrei Dmitriyevich Linde; (உருசியம்: Андре́й Дми́триевич Ли́нде, ஆந்திரேய் திமீத்திரியெவிச் இலிந்தே; பிறப்பு: மார்ச்சு 2, 1948) ஓர் உருசிய-அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இவர் சுடேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அரால்டு டிரேப் ஃபிரிலிசு இயற்பியல் அறக்கட்டளைப் பேராசிரியர் ஆவார். இலிந்தே அண்ட உப்பல் கோட்பாட்டளர்களில் ஒருவர். இவர் தொடர்து விரிவடைந்துவரும் பல்லண்டக் கோட்பாளரும் ஆவார். இவர் தன் அறிவியல் இளவல் பட்டத்தை மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பெற்றார்.இவர் மாஸ்கோ இலெபிதேவ் இயற்பியல் நிறுவனத்தில் 1975 இல் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1989 இல் இருந்து ஐரோப்பிய அணுக்கரு ஆராய்ச்சி நிறுவனத்தில் (செர்ன்) பணிபுரிந்தார். பின்னர் இவர் 1990 இல் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து சுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியரானார். இவர் அண்ட உப்பல் கோட்பாட்டுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2002 இல் இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆலன் குத், பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் பவுல் சுட்டீன்கார்த் ஆகிய இருவருடன் இணைந்து டிரேக் பதக்கத்தைப் பெற்றார். இவர் 2004 இல் ஆலன் குத்துடன் இணைந்து உப்பல் அண்டக் கோட்பாட்டு உருவாக்கத்துக்காகக் குரூபர் அண்டவியல் பரிசைப் பெற்றார். இவர் 2012 இல், ஆலன் குத்துடன் இணைந்து முதலடிப்படை அறிவியல் பரிசைப் பெற்றார். அண்ட உப்பல் கோட்பாட்டை முன்னோடியாக உருவாக்கியதற்காகக் காவ்லி வானியற்பியல் பரிசை 2014 இல் ஆலன் குத்துடனும் அலெக்சிய் சுதாரோபின்சுகியுடனும் இணைந்து பெற்றார்.
அண்டவியல் கட்டப் பெயர்நிலைகளும் பழைய உப்புதலும்
[தொகு]அண்டவியல் கட்டப் பெயர்வுநிலைகள் குறித்த கோட்பாட்டை 1972 முதல் 1976 வரையிலான கால இடைவெளியில் ஆந்திரேயும் கிர்ழ்னித்சும் உருவாக்கினர். இக்கோட்பாட்டின்படி, மெல்விசை, வல்விசை, மின்காந்த ஊடாட்டம் இவற்றுக்கு இடையே பெரிய வேறுபாடு எதுவும் புடவியின் மிக முந்தைய காலவரிசையில் இல்லை. இந்த ஊடாட்டங்கள், புடவி விரிவடைந்து குளிர்ந்தபோது, இவை ஒன்றில் இருந்து மற்றொன்று படிப்படியாக ஏற்பட்ட அண்டவியல் கட்டப் பெயர்வுநிலைகளுக்குப் பின்னரே உருபெற்றன. இலிந்தே வேறுபட்ட உடாட்டங்களுக்கு இடையே உள்ள சீரொருமையைக் குலைக்கும் அல்லது முறிக்கும் அளவன்புலங்களின் ஆற்ற அடர்த்தி, அய்ன்சுட்டைனின் சமன்பாடுகளில் அமையும் அண்டவியல் மாறிலி குறிக்கும் வெற்றிட ஆற்றலின் பாத்திரத்தை வகிக்கும் எனக் கண்டறிந்தார். 1976 முதல் 1978 வரையிலான கால இடைவெளியில், இலிந்தே அண்டவியல் கட்டங்களில் வெளியிடப்படும் இந்தவகை ஆற்றலே புடவியை சூடேற்ற போதுமானதெனச் செயல்முறை விளக்கம் வழியாக நிறுவினார்.
இந்த நோக்கீடுகளே, 1980 இல் ஆலன் குத் முதலில் முன்மொழிந்த அண்ட உப்புதல் கோட்பாட்டின் முதன்மை உட்கூறுகள் ஆயின. இப்போது இந்தக் கோட்பாடு "பழைய உப்புதல் கோட்பாடு" எனப்படுகிறது " [சான்று தேவை] இது புடவி தொடக்கத்தில் வெப்பமயமாக இருந்ததாகக் கருதுகிறது. இது பிறகு, அண்டவியல் பெயர்வுநிலைகளை அடைந்து மீக்குளிர்ந்த மாறுதிற வெற்றிட நிலையில்(போலி வெற்றிட நிலையில்) தற்காலிகமாக கட்டுண்டது. பிறகு, புடவி இயல்வளர்ச்சி முறையில் போலி வெற்றிடம் அழியும் வரையில் விரிவடைந்து மீளவும் வெப்பமய நிலையை அடைந்தது. இந்தக் கருத்து செந்தரப் பெருவெடிப்புக் கோட்பாட்டின் பல்வேறு சிக்கல்களுக்கும் தனித்தன்மை வாய்ந்த தீர்வை அளித்ததால் பரவலான கவனத்தைக் ஈர்ததது. குறிப்பாக, புடவிக் கட்டமைப்பு உருவாக்கம் மிகவும் பெரியதாகவும் சீராகவும் அமைதுள்ளது என்பதையும் விளக்கியது. என்றாலும், குத் இந்தக் காட்சி நினைத்ததைப் போல சரிவர செயல்படாததை உடனே உணரலானார்: போலி வெற்றிடத்தின் அழிவு புடவியை பலபடித்தன்மைக்கு இட்டுசெல்லும் என்பதையும் உணர்ந்தார்.
புதிய உப்புதல்
[தொகு]இலிந்தே 1981 "புதிய உப்புதல் கோட்பாடு" எனும் உப்புதல் கோட்பாட்டின் மற்றொரு வகையை உருவாக்கினார்.{{citation needed|date=February 2015}] இவர் புடவியின் இந்த வேகமான இயல்படிமுறை விரிவடைதல் போலி வெற்றிடங்களில் மட்டுமன்றி, அதற்கப்பாலான போலி வெற்றிடத்துக்கு மிகத் தொலைவில் அமையும் மெதுவான புடைபெயர்விலும் நிகழ்ந்துள்ளது என செயல்முறையில் விளாக்கி காட்டியுள்ளார். இந்தக் கோட்பாடு குத்தின் முதல் கோட்பாட்டின் சிக்கலகலை தீர்த்ததோடு, அதன் முதன்மையான இயல்களையும் உள்ளடக்கியது. சில மாத்ங்களுக்குப் பிறகு, இதையொத்த கோட்பாட்டை, இலிந்தேவின் ஆய்வுத்தாளை மேற்கோள் காட்டி, ஆந்திரியாசு ஆல்பிரெக்ட்டும் பவுல் சுட்ட்டைன்கார்த்தும் வெளியிட்டனர்.விரைவிலேயே இந்தக் கோட்பாடும் பல சிக்கல்கள் கொண்டதாக உணரப்பட்டது. இந்தச் சிக்கல்கள் அனைத்துமே, தொடக்கநிலைப் புடவி மிக உயர்வெப்பமயமாக இருந்தது; உப்புதலின்போது அண்டவியல் கட்டப் பெயர்வுநிலைகள் ஏற்பட்டன எனும் இரு கருதுகோள்களால் உருவாகின்றன.
தளும்பல்நிலை உப்புதல்
[தொகு]இவர் 1983 இல் பழைய, புதிய உப்புதல் கோட்பாடுகளின் முதன்மை நெறிமுறைகளைக் கைவிட்டு தளும்பல்நிலை உப்புதல் கோட்பாட்டை(பொது உப்புதல் கோட்பாட்டை) முன்மொழிந்தார். இந்தத் தளும்பல்நிலை உப்புதல், தொடக்கநிலை வெப்பச் சமனிலை கருதுகோளேதும் தேவையற்ற, மேலும் அகல்நிறைவான கோட்பாடுகளில் தோன்றுகிறது. இந்தக் காட்சியின் அடிப்படை நெறிமுறைகள் அண்மையில் நிலவும் நடப்பியலான உப்புதல் கோட்பாட்டு வகைகளில் உள்ளக்கப்படலாயின. தளும்பல்நிலை உப்புதல் கோட்பாடு, தொடக்கநிலை உப்புதலைப் பற்றி நாம் கருதிவந்தவற்றை அகற்றிவிட்டது. பின்னர் இலிந்தே கலப்பு உப்புதல் காட்சி வழியாக உப்புதலின் முடிவுபற்றிய மாற்றமொன்றையும் முன்மொழிந்தார். இதில் உப்புதலின் முடிவு அருவிவகை நிலைப்பின்மையால் நிகழ்கிறது என்றார். [தெளிவுபடுத்துக].
புடவியில் பொருள் உருவாக்கம்
[தொகு]உப்புதல் கோட்பாட்டின்படி, அனைத்து அடைப்படைத் துகள்களுமே உப்புதல் முடிந்த பிறகு மீள்வெப்பமேற்ற நிகழ்வின்போது தான் தோன்றுகின்றன. இந்த வகை மீள்வேப்பமேற்றம் அல்லது சூடேற்றம் பற்றிய முதல் கோட்பாடு, பொருள் உருவாக்கக் கோட்பாடாகவே அமைந்தது. இந்தக் கோட்பாடு 1982 இல் அலெக்சாந்தர் தோல்கோவ், இலிந்தே,ஏல். எஃப். அபாட்டு, எடுவார்டு பார்கி, மார்க்கு பி. வைசக் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்தக் கோட்பாடு 1994 இல் எல். ஏ. கோஃப்மன், இலிந்தே அலெக்சிய் சுதாரோபின்சுகி ஆகியோரால் செழுமைபடுத்தப்பட்டது. இவர்கள் உப்புதலுக்குப் பிறகான பொருண்ம(பொருள்) உருவாக்கச் செயல்முறை அண்ட அளவன்களின் ஒத்திசைவால் மிகவும் திறம்பட நிகழ்கிறது எனக் காட்டினர். [தெளிவுபடுத்துக]
உப்பும் பலபுடவிகளும் என்றுமுள்ள தளும்பல்நிலை உப்புதலும்
[தொகு]இலிந்தே நெடுநோக்கொடு முன்கணித்தது உப்பும் பலபுடவிக் கோட்பாடு அல்லது சரக்கோட்பாட்டு கிடப்புநிலைக் காட்சி எனலாம். சுட்டைன்கார்த்தும் இலிந்தேவும் அலெக்சாந்தர் விலென்கினும் 1982-1983 வாக்கில் புதிய உப்புதல் காட்சி சார்ந்த புடவியின் இயல்வளர்ச்சி(படிமுறை வளர்ச்சி) சார்ந்த காட்சி , அது தொடங்கியபோது, முடிவில்லாமல் புடவியின் சில பகுதிகளில் விரிவுற்றிருக்கும் என உணர்ந்தனர். இக்காட்சியின் அடிப்படையில் இலிந்தே பல பகுதிகள் அமைந்த தற்பெருக்க உப்புதல் அல்லது என்றுமுள்ள உப்புதல் படிமத்தை முன்மொழிந்தார். இந்தப் பகுதிகள் சீரான படிமுறை வளர்ச்சிமுறையாக மிகப் பெரியதாகவும் தொடர் உப்புதலால் அமையவேண்டும். எனவே, அனைத்துக் கண்ணோட்டத்திலும் இப்பகுதிகள் ஒவ்வொன்றும், புடவியின் மற்ற பகுதிகளைச் சாராமல், தனித்தனிச் சிறுபுடவிகளாக அமைகின்றன. புடவியின் இந்தப் பகுதிகளில் ஒன்றில் வாழ்பவர்கள், புடவி எங்கும் ஒத்தநிலையில் அமைவதாகவும் அடிப்படைத் துகள்களின் பொருண்மைகளும் அவற்றின் ஊடாட்ட இயற்பியல் விதிகளும் அப்பகுதி எங்கும் ஒத்தநிலையில் அமைவதாகவும் நினைக்கலாம். என்றாலும், உப்பும் அண்டச் சூழலில், வெவ்வேறு பகுதி புடவிகளில் அவற்றில் ஒவ்வொன்றிலும் இயங்கும் தாழ் ஆற்றல் இயற்பியல் விதிகள் வெவ்வேறாக அமைய வாய்ப்புள்ளது. எனவே, புற உலகம், தனிக்கோள வடிவச் சீரொருமையுள்ள விரிவுறும் குமிழியாக அமையாமல் மாறாக, மாபெரும் பிளந்தநிலை உப்பும் பலபுடவிக் கட்டமைப்போடு, பல வெவ்வேறு சிறுபுடவிகளாக பல்வேறு இயல்புகளோடு அமையலாகிறது. இந்நிலை அண்டவியல் மாந்த வாழ்தகவு நெறிக்கான எளிய அறிவியல்திற விளக்கத்தை அளிக்கிறது: நமது புற உலகம் பல பகுதிகளாக அமைந்தாலும் அந்தப் பல புடவிகளில் எவற்றில் உயிர்வாழ தகுதி உள்ளதோ அந்தப் பகுதிகளில் மட்டுமே நாம் வாழ முடியும்.
இந்த எண்னக்கருக்கள் அவர் காலத்தில் மக்களை மிகவும் கவனங்கொள்ளச் செய்யவில்லை; ஏனெனில், மாந்த வாழ்தகவு நெறி அப்போது பரவலாகவில்லை என்பதோடு இந்தப் புதிய உப்பும் அண்டக் கோட்பாட்டுக் காட்சி தளும்பல்நிலை அண்டக் கோட்பாட்டுக் காட்சியால் பதிலீடு செய்யப்பட்டது. என்றாலும் இலிந்தே 1986 இல் பலவகைத் தளும்பல்நிலை உப்புதல்நிலைக் காட்சிகளைக் கண்டறியலானார். அதோடு புடவியின் படிமுறை வளர்ச்சிசார் விரிவாக்க நிகழ்வும் சில சிறுபுடவிகளில் என்றும் தொடர்ந்தது. இந்நிகழ்வை இவர் என்றுமுள்ள உப்புதல் நிகழ்வு என்றார். இவ்வகை என்றுமுள உப்புதல் மிகவும் பேரளவில் நிகழ்வதால், புடவியின் வெவ்வேறு பகுதிகளை ஒரு வெற்றிட நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு உந்தி தள்ளி, அவற்றின் கால வெளிசார் விளைவுறு பருமானததன்மையையும் மாற்றும். இது மிகுந்த தறன்மிகு பலபுடவிக் கோட்பாட்டை உணர்த்தியது.
புடவி உப்புதலும் சரக் கோட்பாடும்
[தொகு]சரக் கோட்பாட்டுச் சூழலில், 2000 இல் பலபுடவி உப்புதல் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தியதும் இந்தப் புலத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. 2000 இல் இராபயேல் பவுசோவும் ஜோசப் போல்சின்சுகியும் என்றுமுள்ள உப்புதல் இடைவெளியையும் பல வேறுபட்ட வ்வெற்றிடங்களையும் சரக்கோட்பாட்டில் பயன்படுத்தி அண்டவியல் மாறிலிச் சிக்கலுக்குத் தீர்வு காணும் முன்மொழிவை அறிமுகப்படுத்தினர். அக்காலத்தில் சரக் கோட்பாட்டில் நிலைப்புள்ள அல்லது மாறுதிற நிலைப்புள்ள வெற்றிடங்கள் பற்றிய கருத்தேதும் நிலவவில்லை. ஒரு சரக் கோட்பாட்டு வெற்றிட நிலைப்பு பற்றிய இயங்கமைப்பை 2003 இல் சாமிது கச்சுரு, இரேனாட்டா கல்லோழ்சு, இலிந்தே, சந்தீப் திரிவேதி ஆகியோர் வெளியிட்டனர். இவர்கள் விரிவடையும் அண்டத்தின் இந்த வெற்றிடங்கள் அனைத்தும் மாறுதிற நிலைப்புள்ளவை எனக் கண்டுபிடித்தனர்; அதாவது இவை நாட்போகப் போக சிதைபவை எனக் கண்டுபிடித்தனர் . பிறகு மைக்கேல் டவுகிளாசும் அவரோடு இணைந்து பணிபுரிவோரும் [தெளிவுபடுத்துக] பல்வேறு சரக் கோட்பாட்டு வெற்றிடங்களின் ஒட்டுமொத்தம் 10500 அளவுக்கு பெரிதாக இருக்கும் அல்லது அதைவிட கூடுதலாக இருக்கும் என மதிப்பிட்டனர்; [vague] பல்வேறு சரக் கோட்பாட்டு வெற்றிடங்களையும் அண்டவியல் கட்டப் பெயர்வுநிலைகளையும் ஆய்வு செய்து இலியோனார்டு சுசிகிண்டு சரக்கோட்பாட்டுக் கிடப்பமைவுக் காட்சியை உருவாக்கினார்.
இந்தக் கோட்பாட்டின் முதன்மையான அறைகூவல், இது விவரிக்கும் பல்வேறு புடவிகளில் மாந்த வாழ்வு இருப்பதற்கான நிகழ்தகவே ஆகும். ஒருமுறை நாம் சரக் கோட்பாட்டை ஒப்புக்கொண்டால், முந்தைய ஒற்றைப் புடவிக் கோட்பாட்டுக்குத் திரும்பவே முடியாது. அப்படி வரமுடிவது இயலவேண்டும் என்றால் சரக் கோட்பாட்டின் பல்வேறு வெற்றிடங்களில் ஒன்று மட்டுமே உண்மையானதென நிறுவ வேண்டும். மேலும், பலபுடவி உப்புதல் கோட்பாட்டுச் சூழலில் மாந்த வாழ்வு அண்டவியல் நெறிமுறையைப் பயன்படுத்திப் பல சிக்கல்களுக்கான தீர்வொன்றை முன்மொழியவேண்டும். [தெளிவுபடுத்துக]
தற்போது, [எப்போது?] இலிந்தே பலபுடவி உப்புதல் கோட்பாட்டுக்கான ஆய்வைத் தொடர்கிறார். மேலும், இவர் சரக் கோபாட்டையும் மீஈர்ப்பையும் சார்ந்துமிக முன்னேறிய உப்புதல் கோட்பாட்டை உருவாக்க முயன்றுவருகிறார். இது பெருகிவரும் புதிய அண்ட நோக்கீடுகள் தரும் காட்சியை நெளிவு சுளிவாகவும் சரியாகவும் விளக்கவேண்டும். [யாரால் சொல்லப்பட்டது?]
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]இவர் 2012, ஜூலையில் அடிப்படை இயற்பியலில் தொடக்கநிலை விருதாளர் ஆவார்; இயற்பியலாளரும் பன்னாட்டு தொழில்முனைவாளருமான யூரி மில்னர் இந்த விருதை தோற்றுவித்தார்.[1]
இவர் 2014 இல் காவ்லி பரிசை ஆலன் குத்துடனும் அலெக்சிய் சுதாரோபின்சுகியுடனும் இணைந்து பெற்றார்; இது நார்வே அறிவியல், எழுத்துசார் கல்விக்கழகத்தால் வழங்கப்பட்டது.[2]
இலிந்தே தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் மட்டுமல்ல, அமெரிக்கக் கலை, அறிவியல் கழகத்தின் உறுப்பினருங்கூட.
சொந்த வாழ்க்கை
[தொகு]இலிந்தே இரேனாத்தா கல்லோழ்சுவை மணந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ New annual US$3 million Fundamental Physics Prize recognizes transformative advances in the field பரணிடப்பட்டது 2014-04-07 at the வந்தவழி இயந்திரம், FPP, accessed 1 August 2012.
- ↑ "Nine Scientists Share Three Kavli Prizes".
- ↑ "Renata Kallosh". UCLA. பார்க்கப்பட்ட நாள் March 17, 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- Andrei Linde's webpage at Stanford University.
- Linde, Andrei (2004) "Inflation, Quantum Cosmology and the Anthropic Principle" in John D. Barrow, Paul C W Davies, and C L Harper, eds., Science and Ultimate Reality: From Quantum to Cosmos, a volume honoring John A. Wheeler's 90th birthday. Cambridge University Press.
- Slack, Gordy (1998) "Faith in the Universe: Conversations with cosmologists," California Wild 51(3). Mentions Linde's views on religious belief.
- Andre Linde Radio Interview on Entitled Opinions
- Scientific publications of Andrei Linde on INSPIRE-HEP
- தெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள் from May 2015
- குழப்பமான நேரம் from May 2015
- All articles with specifically marked weasel-worded phrases
- Articles with specifically marked weasel-worded phrases from May 2015
- 1948 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- அமெரிக்க இயற்பியலாளர்கள்
- அண்டவியலாளர்கள்
- உருசிய இயற்பியலாளர்கள்
- சோவியத் இயற்பியலாளர்கள்
- அமெரிக்க வானியலாளர்கள்
- உருசிய வானியலாளர்கள்
- சோவியத் வானியலாளர்கள்