வ. கோ. சண்முகம்
வ. கோ. சண்முகம் | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 20, 1924 திருவாரூர் |
இறப்பு | சூலை 23, 1983 தளத்தெரு கிராமம், காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி | (அகவை 59)
தொழில் | கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் |
இலக்கிய இயக்கம் | திராவிட இயக்கம் |
பெற்றோர் | கோதண்டபாணி, மீனாட்சியம்மாள் |
வ. கோ. சண்முகம் (புனை பெயர்கள்: மாவெண்கோ, செம்மல், வயலூர் சண்முகம்) (1924 - 1983) ஒரு தமிழ்க் கவிஞர். திருவாரூர் மாவட்டம், மாவூருக்கு கிழக்கே திருக்குவளை, எட்டுக்குடி சாலையை ஒட்டியுள்ள வயலூர் என்னும் குக்கிராமத்தில் கோதண்டபாணி-மீனாட்சியம்மாள் தம்பதியினரின் இரண்டாவது மகனாக 20-2-1924-பிறந்தவர்.[1]
கல்வி[தொகு]
திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் உயர்கல்வியும் பயின்றவர்.
இலக்கியப்பணி[தொகு]
பள்ளிக்கல்வி பயிலும் பருவத்தில் இவருடன் ஒரு சாலை மாணாக்கராக பயின்றவர் தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி. அப்போது கருணாநிதியுடன் இணைந்து மாணவர் நேசன், மாணவர் பொழில் ஆகிய கையெழுத்து இதழ்களை இவர் நடத்தியுள்ளார். இவரைப் பற்றி தனது சுயவரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதியில் இவற்றை கருணாநிதி பதிவுசெய்துள்ளார்.
கவிதை,சிறுகதை,கட்டுரை ஆகிய வடிவங்களில் அன்றைய தமிழ் அச்சு இதழ்களான முரசொலி, திராவிடநாடு, அறப்போர், கலைக்கதிர், பிரசண்டவிகடன், கண்ணன், விஜயா, ஆனந்த விகடன், கல்கி, தமிழ்சினிமா, கோகுலம், மாதஜோதிடம், பால்யன் ஆகியவற்றில். இவருடன் தமிழார்ந்த நட்புடன் பழகிய கலை-இலக்கியக் களம் சார்ந்தவர்கள் - மு.கருணாநிதி, சுரதா, கா. மு. ஷெரீஃப், திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ், திரைப்படத் தயாரிப்பாளர் இராம. அரங்கண்ணல், டார்ஃபிடோ ஜனார்த்தனன், அரசியல் விமர்சகர் சின்னக்குத்தூசி தியாகராஜன் ஆகியோர் ஆவர்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
சண்முகம் தன் மனைவி வைதேகி அம்மாளின் வீட்டில் (தளத்தெரு கிராமம்-காரைக்கால் மாவட்டம்-புதுச்சேரி மாநிலம்) 23-07-1983 ல் காலமானார். தமிழக அரசு, தமிழறிஞர்கள் நூல் நாட்டுடமைத் திட்டத்தின் கீழ் கடந்த 2007-ஆம் ஆண்டு, எழுச்சிக்கவிஞர் வ. கோ. சண்முகத்தின் நூல்கள் நாட்டுடமை செய்துள்ளது. எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் எஸ். ராஜகுமாரன், வ. கோ. சண்முகத்தின் ஒரே மகன். சென்னை தமிழ்க்கூடம், மற்றும் நிவேதிதா புத்தகப்பூங்கா ஆகிய பதிப்பகங்கள் வ. கோ. சண்முகத்தின் நூல்களை வெளியிட்டுள்ளன.
எழுதியுள்ள கவிதை நூல்கள்[தொகு]
- தைப்பாவாய்
- எதைத் தேடுகிறாய்?
- டானா முத்து
- தெற்கு ஜன்னலும் நானும்
- சின்னப் பூவே மெல்லப் பாடு
- நடந்து கொண்டே இரு
- மெழுகுச் சிறகுகள்
- புதிய தெய்வம்
- அஷ்டலட்சுமி காவியம்
- உப்பு மண்டித் தெரு
- வென்றார்கள் நின்றார்கள்
- பாருக்கெல்லாம் பாரதம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ‘எழுச்சிக் கவிஞர்’ வ.கோ. சண்முகம் வாழ்க்கைக் குறிப்பு (2007). தைப்பாவாய். சென்னை: தமிழ்க்கூடம். பக். 6. https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.