வெண்சங்கு (திரைப்படம்)
வெண்சங்கு | |
---|---|
இயக்கம் | டபிள்யூ. எம். எஸ். தம்பு |
தயாரிப்பு | டபிள்யூ. எம். எஸ். தம்பு |
கதை | டபிள்யூ. எம். எஸ். தம்பு |
திரைக்கதை | சிறில் ஜே பெர்ணாண்டோ, சந்திரா கணேசானந்தன், பரமானந்தன் |
இசை | ஆர். முத்துசாமி, டி. ஆர். பாப்பா |
நடிப்பு | அராலியூர் புவனேஸ்வரன், குமாரி ராஜம், லடிஸ் வீரமணி, ஏ. எஸ். ராஜா, ரொசாரியோ பீரிஸ், நமசிவாயம், எம். ஏ. ஜப்பார், ஜி. பீட்டர், தேவன், ஒ. நாகூர், ரீ. எஸ். பிச்சையப்பா, சுந்தர்ராஜ், தம்பிராஜ், சாமுவேல், தங்கராசா, தியாகராஜா, சிஸ்மத், எம்.பாயிஸ், பி. இந்திராணி, சுப்புலட்சுமி காசிநாதன், நூர்ஜஹான், ருத்ராணி, வனஜா, மேரி, கமலா, சந்திரா, மஞ்சுளா, பேபிராணி, தேவி கணேசானந்தன் |
ஒளிப்பதிவு | எஸ்.தெய்வேந்திரா, ஏ.எஸ்.பத்மநாதன் |
வெளியீடு | சூலை 31, 1970 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
வெண்சங்கு 1970 ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். அப்போது இலங்கையில் பிரபலமாக இருந்த சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர் டபிள்யூ. எம். எஸ். தம்பு இத்திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியிருந்தார்.
நடிகர்கள்
[தொகு]அராலியூர் சங்கரப்பிள்ளை புவனேஸ்வரன் (இறப்பு: 24 மே 2023) கதாநாயகனாகவும், குமாரி ராஜம் கதாநாயகியாகவும் நடித்தனர். பிரபல நாடகக் கலைஞர் லடீஸ் வீரமணி வில்லன் பாத்திரத்தில் நடித்தார். இவர்களுடன் ஏ. எஸ். ராஜா, ரொசாரியோ பீரிஸ், நமசிவாயம், எம்.ஏ.ஜபார், ஜி.பீட்டர், தேவன், ஒ.நாகூர், ரீ.எஸ்.பிச்சையப்பா, சுந்தர்ராஜ், தம்பிராஜ், சாமுவேல், தங்கராசா, தியாகராஜா, சிஸ்மத், எம்.பாயிஸ் போன்றோரும், பி. இந்திராணி, சுப்புலட்சுமி காசிநாதன், நூர்ஜஹான், ருத்ராணி, வனஜா, மேரி, கமலா, சந்திரா, மஞ்சுளா, பேபிராணி, தேவி கணேசானந்தன் போன்றோரும் நடித்தனர்.
கதைச் சுருக்கம்
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
நமசிவாய முதலியார் (ஏ. எஸ். ராஜா) என்பவருக்கு ஒரு மகள், ஒரு மகன். தம்பலகாமம் தம்பிமுத்து (லடீஸ் வீரமணி) முதலியாரின் மகனைக் கடத்திச் சென்று பணம் கேட்கின்றனர். தம்பிமுத்துவின் மகன் காவல்துறை அதிகாரி ராஜன் (அராலியூர் புவனேந்திரன்) சிறுவனைக் கண்டுபிடித்து முதலியாரிடம் ஒப்படைக்கிறான். முதலியாரின் மகள் ராஜிக்கும் ராஜனுக்கும் காதல் ஏற்படுகிறது. முதலியார் இக்காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையில், முதலியார் கொலை செய்யப்பட ராஜன் கைது செய்யப்படுகிறான். ராஜி தம்பலகாமத்தில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள். தம்பிமுத்து ராஜியைக் கெடுக்க முயலுகிறான். முதலியாரைக் கொன்றவன் தான் என்றும் தன் ஆசைக்குச் சம்மதிக்காவிட்டால் அவளையும் கொலை செய்து விடப்போவதாகப் பயமுறுத்துகிறான். விடுதலை பெற்று வீடு திரும்பும் ராஜன் இச்சம்பவத்தை மறைந்து நின்று பார்க்கிறான். தந்தையைக் காவல்துறையிடம் ஒப்படைக்கிறான். தம்பிமுத்து நஞ்சருந்துகிறான். அவன் இறக்கும் தருவாயில் மகன் ராஜனையும் ராஜியையும் ஒன்று சேர்த்து வைக்கிறான்.
பாடல்கள்
[தொகு]பாடல்கள் சென்னையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. பிரபல இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பாவின் உதவியுடன் ஆர். முத்துசாமி பாடல்களுக்கு இசையமைத்தார். பாப்பாவின் இசைக்குழுவில் இருந்த பாடகர்கள் எம். எஸ். ராஜு, கெளசல்யா ஆகியோர் பாடல்களைப் பாடினர். வெண்சங்கு பாடல்களின் இசைத்தட்டுகளும் சென்னையிலேயே உருவாக்கப்பட்டன. மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றன.
- கமோன் கமோன் ஜங் மேன்
- மீனைப்பிடிக்க வந்ததும் வந்தாய்
- நீயும் யாரோ நான் யாரோ
வெளியீடு
[தொகு]வெண்சங்கு திரைப்படம் 1970 சூலை 31 இல் வெளியிடப்பட்டது. கொழும்பில் செல்லமஹால், ஈரோஸ் திரையரங்குகள் உட்பட இலங்கையின் 6 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ஒரே நேரத்தில் இலங்கையில் திரையிடப்பட்ட கே. பாலச்சந்தரின் இரு கோடுகள், தேவரின் துணைவன்’, எம்.ஜி.ஆரின் ‘நம்நாடு’ போன்ற படங்களுடன் போட்டி போட்டு ‘வெண்சங்கு’ திரைப்படமும் சுமாராக ஓடியது.
துணுக்குச் செய்திகள்
[தொகு]1970 ஆரம்பத்தில் யாழ்ப்பாண மேடைகளில் நடத்தப்பட்டு வந்த சுண்டிக்குளி நாடக மன்றத்தின் "அடங்காப்பிடாரி" என்ற நாடகத்தின் சில நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தின் இடையில் புகுத்தப்பட்டன. இந்நாடகத்தில் நடித்த வி. பரமானந்தராஜா, எஸ். கே. நடராஜன், கனகையா, சிவநேசன், கீத பொன்கலன் ஆகியோரும் பின்னர் வெண்சங்கு திரைப்படத்தில் நடித்தனர்.
- சிங்கள நடிகர்கள் அலெக்சாண்டர் பெர்னாண்டோ, ரொபின் பெர்னாண்டோ ஆகியோர் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்தனர். ருத்ராணி நடனக் காட்சிகளை அமைத்தார்.
- கதிர்காமம், கீரிமலை, நல்லூர், காரைநகர் போன்ற இடங்களில் படப்பிடிப்புகள் இடம்பெற்றன.
- பாடல் காட்சிகள் யாழ்ப்பாணம் பொது நூலகம், காரைநகர் கசூரினா கடற்கரை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டன.
உசாத்துணை
[தொகு]- தம்பிஐயா தேவதாஸ், "பொன்விழாக் காணும் இலங்கைத் தமிழ்ச் சினிமா", வீரகேசரி, சூன் 2, 2013