தம்பிஐயா தேவதாஸ்
தம்பிஐயா தேவதாஸ் | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 24, 1951 புங்குடுதீவு யாழ்ப்பாணம் |
அறியப்படுவது | எழுத்தாளர், ஊடகவியலாளர், |
பெற்றோர் | தம்பிஐயா, ஐஸ்வரி |
தம்பிஐயா தேவதாஸ் (பி. ஏப்ரல் 24, 1951,புங்குடுதீவு யாழ்ப்பாணம்) மொழிபெயர்ப்பு மற்றும் திரைப்படத் துறைகளில் பங்களித்து வரும் ஈழத்து எழுத்தாளராவார். திரைப்படத்துறை, மொழிபெயர்ப்புத் துறை, ஊர் வரலாறு, கல்வித் துறை பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்[1].
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தில் தம்பிஐயா - ஐஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வராகப் பிறந்த இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டமும் மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் ‘பிஈடி’ பட்டமும் பெற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகவியலில் டிப்புளோமா பட்டமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊடகவியலில் முதுமாணிப் பட்டமும் பெற்றார்[1].
இப்பொழுது கொழும்பு கணபதி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியராகவும், இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகவும், இலங்கைத் தேசிய தொலைக்காட்சியில் நேர்காண்பவராகவும், கொழும்பு பல்கலைக்கழக பத்திரிகைத்துறையில் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.
ஆரம்பத்தில் சிங்கள நாவல்களை தமிழுக்குக் கொண்டுவருவதில் உழைத்த இவர் இப்பொழுது சினிமா தொடர்பான ஆவணப்படுத்தற் பணிகளில் ஈடுபட்டுள்ளார். பட்டதாரி ஆசிரியரான இவர் பாட நூல்களையும் எழுதியுள்ளார்.
சென்னை பல்கலைக் கழக கௌரவம்
[தொகு]தம்பிஐயா தேவதாஸ் எழுதி இலங்கையில் வெளியிடப்பட்ட "இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்" என்ற நூல் 2016 ஏப்ரல் 11-ஆம் நாள் சென்னையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழக இதழியல், தொடர்பியல் துறையின் தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு தொடர்பான கருத்தரங்கின் போது இந்த நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
துறைத்தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன், தம்பிஐயா தேவதாஸ் ஆகியோருடன் இலங்கை வானொலி மூத்த ஒலிபரப்பாளர் கே. எஸ். சிவகுமாரன், தொழிலதிபரும் சென்னை பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான வி. கே. டி. பாலன், மூத்த ஒலிபரப்பாளரும், ஊடகவியலாளருமான அப்துல் ஜப்பார் ஆகியோர் நூலை அறிமுகம் செய்வதைப் படத்தில் காணலாம்.
தம்பிஐயா தேவதாஸ் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வானொலியின் பல்வேறு சேவைகள், இலங்கை தொலைக்காட்சி சேவைகள் ஆகியவற்றில் ஆற்றிய பணிகளுக்காகவும், அவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டியும் அவருக்கு ஒரு நினைவுக் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
துறைத்தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் அவர்கள் தம்பிஐயா தேவதாசுக்கு சால்வை அணிவித்து நினைவுக் கேடயம் பரிசளிப்பதை இரண்டாவது படத்தில் காணலாம்.
இவருடைய ஆக்கங்கள்
[தொகு]மொழிபெயர்ப்பு நாவல்கள்
[தொகு]- நெஞ்சில் ஓர் இரகசியம் (கருணாசேன ஜயலத் எழுதிய "கொளு ஹதவத்த", சிங்களப் புதினம், 1975)
- இறைவன் வருத்த வழி (1976)
- மூன்று பாத்திரங்கள் (ஜே. ஜயதிலக எழுதிஅய் சிங்கள புதினம், 1977)
சினிமா தொடர்பான நூல்கள்
[தொகு]- இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை (1994, 2000)
- பொன் விழாக் கண்ட சிங்கள சினிமா (1999, வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டல விருது)
- இலங்கைத் திரையுலக முன்னோடிகள் (2001)
- இலங்கை திரை உலக சாதனையாளர்கள்
- குத்துவிளக்கு - மீள்வாசிப்பு (2011)
- இலங்கை திரை இசையின் கதை (2012)
- இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் (2015)
பிற நூல்கள்
[தொகு]- தேர்ந்த சிறுகதைகளும் நாகம்மாள் நாவலும் (1998)
- சிங்களப் பழமொழிகள் (2005)
- இணைப்பழமொழிகள்... சிங்களம் தமிழ்
- புங்குடுதீவு வாழ்வும் வளமும் (2006)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 ஈழத்துச் சினிமா வரலாற்றை விரல் நுனியில் விபரிக்கும் ஆற்றல் படைத்த தம்பிஐயா தேவதாஸ்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன் வாரமஞ்சரி, பெப்ரவரி 12, 2012