வீழ்ச்சி படைப்புழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீழ்ச்சி படைப்புழு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. frugiperda
இருசொற் பெயரீடு
Spodoptera frugiperda
(J.E. Smith, 1797)
வீழ்ச்சி படைப்புழு

வீழ்ச்சி படைப்புழு அல்லது வரத்துப் படைப்புழு, வெளிநாட்டு ராணுவப் படைப்புழு ( fall armyworm) (Spodoptera frugiperda) என்பது லெபிடோப்டர் வரிசையைச் சேர்ந்த ஒரு இனம் மற்றும் வீழ்ச்சி படைப்புழு அந்துப்பூச்சியின் லார்வா என்னும் குடம்பி வாழ்க்கை நிலை ஆகும். "படைப்புழு" என்ற சொல்லானது பல இனங்களைக் குறிப்பதாக இருக்கலாம். வீழ்ச்சிப் படைப்புழுவானது ஒரு தீங்குயிர் ஆகும். இது பலவகையான பயிர்களைத் தாக்கி, பெருமளவிலான பொருளாதார சேதத்தை வேளாண் மக்களுக்கு ஏற்படுத்த்கூடியது. இதன் அறிவியல் பெயரானது ஃப்ரூஜ்பெர்டாடா (frugiperda) என்ற இலத்தீன் சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருள் இலத்தீன் மொழியில் இழந்த பழம் என்பது ஆகும், ஏனென்றால் இது பயிர்களை அழிப்பதால் இப்பெயர் சூட்டப்பட்டது.[1]

விளக்கம்[தொகு]

விளக்கம்

வயதுக்கு வந்த இந்த அந்துப்பூசிகளானது ஒரு இறகு முனையில் இருந்து மறு இறகு முனைவரை 32 முதல் 40 மிமீ இருக்கும். இந்தப் பூச்சிகள் பால் ஈருருமை தோற்றம் கொண்டவை. ஆண் பூச்சிகள் அரக்கு நிற முன் இறக்கைகளின் நுனிப் பகுதியில் முக்கோண வடிவ வெள்ளைப் புள்ளிகளுடன் இருக்கும். பெண் பூச்சிகளுக்கு முக்கோண வடிவ வெள்ளைப் புள்ளி இருக்காது. பின் இறக்கையில் அரக்கு நிறம் ஓரமாகக் காணப்படும்.[2]

நடத்தை[தொகு]

இந்தப் புழுக்களின் வாழ்நாள் முப்பது நாட்கள்தாம். இது, தாய் அந்துப்பூச்சியாக மாறும் போது, 500 முதல் 2,000 முட்டைகள்வரை பயிரின் இலைகளில் இட்டு, அவற்றை வெள்ளை இழைகளால் மூடிவிடுகின்றன. ஓரிரு நாட்களில் முட்டைகளில் இருந்து பச்சை நிற இளம்புழுக்கள் வெளிவந்து, இலைகளில் உள்ள பச்சையத்தை உண்ணும். அதன்பின்னர் அப்புழுக்கள் 14-20 நாட்களில் முதிர்ச்சியடைந்து, மண்ணுக்குள் சென்று கூட்டுப்புழுக்களாக மாறிவிடும். அவை 8, 9 நாட்களில் தாய் அந்துப்புழுக்களாக மாறி 10, 15 நாட்கள் வரை முட்டையிடும். இந்த அந்துப்பூச்சி, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பறக்கும் ஆற்றல் வாய்ந்தது.

பாதிப்பு காலம்[தொகு]

தமிழகத்தில் பருவமழை பெய்யும் காலத்தில் ஏற்படும் குளிர்ச்சியான பருவநிலையில் இந்த ராணுவப் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரிக்கும் சாத்தியமுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர், விழுப்புரம், திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பயிரப்படும் வீரிய ஒட்டு மக்காச்சோள இரக பயிர்களைத் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகளில் இந்த வீழ்ச்சி படைப்புழுவின் தாக்குதலானது மிகுதியாகும்.[3]

பாதிப்புகள்[தொகு]

பயிர் சாகுபடி செய்த 15ஆம் நாளில் இப்புழு தோன்றி குருத்துப் பகுதியை உண்ணத் தொடங்கும். இலைகளில் சிறிய, பெரிய வட்ட வடிவத் துளைகள் இந்தப் புழுத் தாக்குதலின் விளைவால் தோன்றும். இவை வடிவற்ற துளைகளாகவும் இருக்கும். சில செடிகளில் இலைகளின் மேல்பாகம் முற்றிலும் உண்ணப்பட்ட நிலையில் காணப்படும். இதனால் இலைகள் மடிந்த நிலையில் காணப்படும். இந்நப் இப்புழுக்கள் செடியின் தண்டுப் பகுதியைத் துளைப்பதில்லை. பயிர்களில் கதிர்களின் நுனியில் உள்ள காம்புப் பகுதியையே பெரும்பாலும் உண்கின்றன.

கட்டுப்படுத்தும் முறைகள்[தொகு]

ஒரு எக்டேருக்கு ஓர் விளக்குப்பொறி என்ற அளவில் வைத்து அந்துப்புழுக்களைக் கவர்ந்து அழிக்கவேண்டும், பயிர்களில் உள்ள முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிக்க வேண்டும், வயலில் மக்காச்சோளம் போன்ற ஒரே பயிரை மீண்டும் மீண்டும் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட பூச்சிக் கொல்லிகள் இல்லை. ஆனால், பருத்தி, மிளகாய்ப் பயிரைத் தாக்கும் ‘புரோடினியா’ புழுவைக் கட்டுப்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லிகள் மூலம், இராணுவப் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சோதனை செய்தது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக பரிந்துரைக்கப்பட்ட பூச்சி மருந்துகளைச் சுழற்சி முறையில் தெளிக்க வேண்டும். ஒரே மருந்தைத் தொடர்ந்து தெளிக்கக் கூடாது. மருந்தை பயிரின் குருத்துப் பகுதியில் படுமாறு தெளிக்க வேண்டும்.[4]

இந்தப் புழுவைப் பூச்சிக்கொல்லிகளால் அழிக்க முடியாது என்ற கருத்தும் உள்ளது. காரணம் இது மக்காச்சோளத்தின் குருத்துப்பகுதிக்குள் சென்று, தண்டைத் தின்று தின்று கழிவுகளை வெளியே தள்ளும். அந்தக் கழிவுகள், புழு இருக்கும் ஓட்டைகளை அடைத்துக் கொள்வதால், பூச்சிக்கொல்லி தெளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது எனப்படுகிறது. மேலும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையில் மட்டுமே இதனைக் கட்டுப்படுத்த முடியும். மக்காச்சோளம், சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுள்ள நிலங்களின் வரப்புகளில், கோ.எப்.எஸ் 29 தீவன சோளத்தையும், கம்பு நேப்பியர் புல்லையும் பயிரிட வேண்டும். இதன்மூலம் வயலில் இருக்கும் முதன்மைப் பயிரில் தாய் அந்துப்பூச்சி முட்டையிடுவதைத் தவிர்க்கலாம். அத்துடன், மஞ்சள்நிறப் பூக்கள் கொண்ட செடிகள், தட்டைப் பயறு, ஆமணக்கு போன்ற பயிர்கள் வரப்புகளில் இருந்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Species Spodoptera frugiperda – Fall Armyworm Moth – Hodges#9666". பார்க்கப்பட்ட நாள் 25 May 2017.
  2. "fall armyworm, Spodoptera frugiperda (J.E. Smith)". entnemdept.ufl.edu. பார்க்கப்பட்ட நாள் 2017-10-01.
  3. "மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் கண்டுபிடிப்பு". செய்தி. தினமலர். 18 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2018.
  4. த.சத்தியசீலன் (13 அக்டோபர் 2018). "படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2018.
  5. ரமேஷ் கருப்பையா (7 திசம்பர் 2018). "பஞ்சத்தை விளைவிக்கக் கூடிய படைப்புழுக்கள்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீழ்ச்சி_படைப்புழு&oldid=3578285" இலிருந்து மீள்விக்கப்பட்டது