விஷ்ணு வாசுதேவ் நர்லிகர்
விஷ்ணு வாசுதேவ் நர்லிகர் | |
---|---|
தலைவர், இராசத்தான் அரசுப்பணியாளர் தேர்வாணையம்[1] | |
பதவியில் 1 ஆகத்து 1960[1] – 31 சூலை 1966[1] | |
நிறுவனம் | பனாரசு இந்து பல்கலைக்கழகம் சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் |
முன்னையவர் | எல். எல். ஜோசி[1] |
பின்னவர் | ஆர். சி. சொளத்ரி[1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | விஷ்ணு வாசுதேவ் நர்லிகர் 26 செப்டம்பர் 1908[2] கோலாப்பூர், பம்பாய் மாகாணம், இந்தியா |
இறப்பு | 1 ஏப்ரல் 1991[2] | (அகவை 82)
தேசியம் | இந்தியர் |
முன்னாள் கல்லூரி | மும்பை பல்கலைக்கழகம் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
விஷ்ணு வாசுதேவ் நர்லிகர் (Vishnu Vasudev Narlikar)(26 செப்டம்பர் 1908-1 ஏப்ரல் 1991) பொது சார்பியலில் நிபுணத்துவம் பெற்ற இந்திய இயற்பியலாளர் ஆவார். ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் செயல்படும் கோட்பாட்டு இயற்பியல் மையம், இவரது நினைவாக வருடாந்திர "வி. வி. நர்லிகர் நினைவு சொற்பொழிவை" நிறுவியுள்ளது.[3]
வாழ்க்கை
[தொகு]நர்லிகர் இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் கோலாப்பூரில் 1908 செப்டம்பர் 26 அன்று பிறந்தார். இவரது தந்தை வாசுதேவசாசுதிரி நார்லிகர் சமசுகிருதத்தில் பண்டிட் மற்றும் பிரசங்கங்களை வழங்கினார். மூன்று சகோதரர்களில் விஷ்ணு இளையவர். இவர் கோலாப்பூரில் உள்ள வித்யாபீட உயர்நிலைப் பள்ளியிலும் இராஜாராம் கல்லூரியிலும் படித்தார்.[4] விஷ்ணுவின் இளமைக் காலத்தில் அவரது தந்தை இயற்கை எய்தினார். இருப்பினும் தனது கல்வியைத் தொடர்ந்த விஷ்ணு பல்கலைக்கழக நுழைவுத் தகுதித் தேர்வில் நான்காவது இடத்தைப் பெற்றார். இவர் கல்வி உதவித்தொகை பெற்று மும்பையில் உள்ள எல்பின்சுடோன் கல்லூரியிலும் மும்பையின் அறிவியல் நிறுவனத்திலும் படித்தார். இளநிலை அறிவியல் பாடத்தில் முதலிடம் பெற்றார்.[4] இதன் பின்னர் 1928-ல் மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நர்லிகர், இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். இங்கு 1930-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இறுதிப்பட்டத்தினை கணிதத்தில் பெற்றார்.
கேம்பிரிச்சில் இவரது கல்விக்கு ஜே. என். டாட்டா அறக்கட்டளை நிதியுதவி அளித்தது. இவர் இந்தியாவுக்குத் திரும்பியதும் கோலாப்பூர் மாநிலத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோலாப்பூர் மாநிலத்திலிருந்தும் கடன் பெற்றார்.[5] கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பட்டத்தினை நட்சத்திரத் தகுதியில் முடித்த பெருமையினைப் பெற்றார் விஷ்ணு நர்லிகர். இவர் ஐசக் நியூட்டன் மாணவ உதவித்தொகையினையும் ரேலே பரிசினையும் பெற்றவர்.[5]
1932ஆம் ஆண்டில், நர்லிகர் மும்பையினைச் சேர்ந்த சிறீதேவி நவாரேவை மணந்தார். ஆனால் சில ஆண்டுகளுக்குள் உடல்நிலை சரியில்லாமல் சிறீதேவி இறந்தார். பின்னர் 1937-ல் வி. எசு. ஹுசுர்பசாரின் சகோதரியான கிருஷ்ணாவை மணந்தார்.[6][7]
இந்த இணையருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்களில் ஜெயந்த் வானியற்பியலாளராகவும், அனந்த் விஞ்ஞானியாகவும் இருந்தனர்.[8]
தொழில்
[தொகு]நர்லிகர் 1932இல் இந்தியா திரும்பியதும், தனது 24 வயதில் வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், கணிதத் துறைத் தலைவராகவும் ஆனார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மதன் மோகன் மாளவியா, நர்லிகர் கோலாப்பூர் மாநிலத்திற்குச் செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தினார். இதன் மூலம் நர்லிகர் பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற முடிந்தது.[5] இதன் பின்னர் 1966-ல் புனா பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கிய நர்லிகர் 1973-ல் கணிதப் பேராசிரியராக ஓய்வு பெற்றார். 1960 முதல் 1966 வரை, இவர் இராசத்தான் அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவராகப் பணியாற்றினார். நர்லிகர் 1931-ல் அரச வானியல் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1981 முதல் 1982 வரை இந்தியக் கணிதச் சங்கத்தின் தலைவரானார்.[3]
இந்தியாவில் முதல் தலைமுறை பொது சார்புவாதிகளுக்கு இவர் பயிற்சி அளித்தார். இவரது முனைவர் பட்ட மாணவர்களில் பிரகலாத் சுன்னிலால் வைத்யா, அமல் குமார் ராய்சவுதுரி, நரேஷ் தாதிச் மற்றும் அரகம் ஆர். பிரசன்னா ஆகியோர் அடங்குவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "RPSC | Hon'ble Chairpersons (Past)". rpsc.rajasthan.gov.in. Archived from the original on 4 September 2018. பார்க்கப்பட்ட நாள் 15 January 2022.
- ↑ 2.0 2.1 Vaidya, P. C. (1992). "Obituary — Narlikar, V.V. 1908-1991". Quarterly Journal of the Royal Astronomical Society 33 (1): 33–34. Bibcode: 1992QJRAS..33...33V. http://adsabs.harvard.edu/full/1992QJRAS..33...33V.
- ↑ 3.0 3.1 "V.V. Narikar Memorial Lecture". Jamia Millia Islamia.
- ↑ 4.0 4.1 Narlikar, Jayant Vishnu (2012). Chaar Nagaraantale Maajhe Vishwa(चार नगरांतले माझे विश्व). Mouj Prakashan Gruha, Khatau Wadi, Girgaon, Mumbai. p. 5.
- ↑ 5.0 5.1 5.2 Narlikar, Jayant Vishnu (2012). Chaar Nagaraantale Maajhe Vishwa(चार नगरांतले माझे विश्व). Mouj Prakashan Gruha, Khatau Wadi, Girgaon, Mumbai. p. 6.
- ↑ Narlikar, Jayant Vishnu (2012). Chaar Nagaraantale Maajhe Vishwa(चार नगरांतले माझे विश्व). Mouj Prakashan Gruha, Khatau Wadi, Girgaon, Mumbai. p. 7.
- ↑ Narlikar, Jayant Vishnu (2012). Chaar Nagaraantale Maajhe Vishwa(चार नगरांतले माझे विश्व). Mouj Prakashan Gruha, Khatau Wadi, Girgaon, Mumbai. p. 29.
- ↑ "Professor Anant V. Narlikar". www.narlikar.com. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.