உள்ளடக்கத்துக்குச் செல்

விளாதிமிர் விசொட்சுக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளாதிமிர் விசொட்சுக்கி
Vladimir Vysotsky
விளாதிமிர் வைசொட்சுக்கி, 1972.
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1938-01-25)சனவரி 25, 1938
பிறப்பிடம்மாசுக்கோ, சோவியத் ஒன்றியம்
இறப்பு(1980-07-25)சூலை 25, 1980
மாசுக்கோ, சோவியத் ஒன்றியம்
தொழில்(கள்)பாடகர், பாடலாசிரியர், நடிகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு, கிட்டார்
இசைத்துறையில்1959-1980

விளாதிமிர் செமியனோவிச் விசொட்சுக்கி (உருசியம்: Влади́мир Семёнович Высо́цкий, விளஜீமிர் சிமியோனவிச் விசோத்ஸ்க்கி, சனவரி 25 1938சூலை 25 1980) என்னும் முழுப் பெயர் கொண்ட விளாதிமிர் விசொட்சுக்கி புகழ் பெற்ற சோவியத், உருசியப் பாடகரும், பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார். தனது கலை மூலம் உருசியப் பண்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இவர் ஒரு யூத, உருசியக் கலப்பு இனத்தவர். பல்துறைத் திறமைகளைக் கொண்ட இவரை உருசியாவில் "பார்ட்" என்னும் சொல்லால் குறித்தனர். இச் சொல் சோவியத் ஒன்றியத்தில் சிறப்புப் பொருளைக் கொண்டதாக விளங்கியது. சோவியத் ஒன்றிய அமைப்புக்கு வெளியே பாடல்களை எழுதிப் பாடுபவர்களையே பொதுவாக "பார்ட்" என அழைத்தனர். எனினும் விளாதிமிர் வைசொட்சுக்கி இப்பெயரையிட்டு உற்சாகம் அடையவில்லை. தான் ஒரு நடிகனும் எழுத்தாளனும் மட்டுமே என்று கூறிக்கொண்ட அவர் மக்கள் குறிப்பிடுவதைப் போன்ற வகைப்பாடுகளுக்குள் தான் அடங்கவில்லை எனவும் குறிப்பிட்டார். சோவியத் கலாச்சார அமைப்பு இவரைக் கண்டுகொள்ளாத போதிலும், இவர் தனது வாழ்க்கைக் காலத்திலேயே புகழுடன் விளங்கினார். அத்துடன் இன்றுவரை உருசியாவின் பல நடிகர்களும், இசைக்கலைஞர்களும் இவரது செல்வாக்குக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

தொடக்க காலம்[தொகு]

விளாதிமிர் வைசொட்சுக்கி, மாசுக்கோவில் பிறந்தார். இவரது தந்தையார் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு படைத்துறை அதிகாரியாகப் பணியாற்றிவந்தார். இவரது தாய் ஒரு உருசியர் செருமன் மொழி மொழிபெயர்ப்பாளராக இருந்தார். இவர் பிறந்து சிறிது காலத்துக்கு உள்ளாகவே இவரது தந்தையும் தாயும் மணமுறிவு செய்துகொண்டனர். இவர் தனது தந்தையுடனும் தந்தையின் இரண்டாவது மனைவியுடனும் வளர்ந்தார். இவரது சிற்றன்னை ஆர்மேனிய இனத்தவர். இவ்வாறு இரண்டு ஆண்டுகள் தனது தந்தையுடனும், சிற்றன்னையுடனும், இரண்டாம் உலகப் போருக்கு முந்திய செருமனியில் சோவியத் ஆக்கிரமித்திருந்த பகுதிக்குள் அடங்கியிருந்த எபர்சுவால்டே என்னும் இடத்திலிருந்த படைத்துறை முகாமில் வாழ்ந்தார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

1955 ஆம் ஆண்டில் இவர் மாசுக்கோ குடிசார் பொறியியல் நிறுவனத்தில் கல்வி கற்பதற்காகச் சேர்ந்து கொண்டார்.ஆனால், சில மாதங்களுக்கு உள்ளாகவே நடிப்புத் தொழிலை மேற்கொள்வதற்காக அதிலிருந்து விலகினார். 1959 ஆம் ஆண்டில் இவர் அலெக்சாண்டர் புசுக்கின் அரங்கில், பெரும்பாலும் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

உருசிய அஞ்சல் தலையில் விளாதிமிர் விசோட்சுக்கி, 1999

1964 ஆம் ஆண்டில், இயக்குனர் யூரி லியுபிமோவ் இவரைத் தகன்கா சதுக்கத்தில் அமைந்திருந்த நாடகத்துக்கும் நகைச்சுவைக்குமான மாசுக்கோ அரங்கில் சேருமாறு அழைத்தார். பிற்காலத்தில் யூரி லியுபிமோவ், விளாடிமிரின் நெருங்கிய தோழரும் ஆலோசகரும் ஆனார். இந்த அரங்கில் விளாதிமிர் முக்கிய பாகம் ஏற்று நடித்தார். சேக்சுப்பியரின் அம்லெட், பிரெக்ட்டின் கலிலியோவின் வாழ்க்கை போன்ற நாடகங்களில் இவர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்துப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளிலும் இடம் பெறலானார். தகன்கா அரங்க நிறுவனம், அரசியல் விசுவாசமின்மை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் அடிக்கடி விசாரணைகளுக்கு உள்ளானது. இக் காலப்பகுதியில் இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருந்ததுடன் அப்படங்கள் சிலவற்றில் இவரது பாடல்களும் இடம்பெற்றிருந்தன. மலையேறுதலைப் பற்றிய திரைப்படமான "த வேர்ட்டிக்கல்" இத்தமைய ஒரு படம் ஆகும். இக் காலத்திலிருந்து வைசோட்சுக்கியின் படைப்புக்கள் எதற்கும் அரச ஆதரவு கிடைக்காததோடு, தனியுரிமை கொண்ட சோவியத்தின் மெலோடியா என்னும் பாடல் பதிவுத்துறையும் இவருக்கு எந்த ஒப்பந்தமும் கொடுக்கவில்லை. எனினும் இவரது புகழ் நாட்டில் பெருகி வந்தது. அக்காலத்தில் நாடாப்பதிவுக் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதனால், இவரது பாடல்களை மக்கள் தாமாகவே பதிவு செய்து கேட்டு ரசித்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]