விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச்சு 31, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரெஞ்சுப் புரட்சி (1789–1799) என்பது பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாக பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலபிரப்புத்துவ, கிறித்தவத் திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு அறிவொளிக்கால கருத்துகளான குடியுரிமை, மாற்றவியலாத உரிமைகள் போன்றவை பரவின. இடதுசாரி அரசியல் அமைப்புகளும், வீதியில் இறங்கிப் போராடிய சாதாரண மக்களும் இம்மாற்றங்களுக்குக் காரணமாக இருந்தனர். 1789 இல் பிரெஞ்சு நாடாளுமன்றம் கூட்டப்பட்டதுடன் பிரெஞ்சு புரட்சி துவங்கியது. பெரும் வன்முறைச் செயல்கள், படுகொலைகள், கும்பலாட்சி, அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் என பிரான்சில் பெரும் குழப்பம் நிலவியது. செப்டம்பர் 1792 இல் பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியும் அவரது மனைவி மரீ அண்டோனெட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கில்லோட்டின் தலைவெட்டு எந்திரம் மூலம் கொல்லப்பட்டனர். மேலும்...


நோவாவின் பேழை அல்லது நோவாவின் கப்பல் என்பது யூதம், கிறித்தவம், இசுலாம் போன்ற ஆபிரகாமிய மதங்களின் புனித நூல்களில் உள்ள நோவாவின் பேரழிவு தொடர்பான குறிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுத்து ஆங்காங்கில், புதிய கட்டுப்பாட்டகம், மா வான் எனும் குட்டித் தீவில், சிங் மா பாலத்திற்கு அடியில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகக் கட்டப்பட்ட ஒரு பிரமாண்டமான கப்பலாகும். சிறப்புடன் நோவாவின் பேழை குறித்து விவிலியத்தில் கூறப்பட்டுள்ள அதே அளவுகளுடன் உருவாக்கப்பட்ட உலகின் ஒரே நோவாவின் பேழை இதுவாகும். பழைய ஏற்பாட்டில், யெனிசசில், 6 மற்றும் 7 அதிகாரங்களில் இந்த நோவாவின் பேழை குறித்த குறிப்புகள் வருகின்றன. அக்கதையின் படி மனிதனது பாவச் செயல்கள் பூமியில் அதிகரித்ததால், கோபமுற்றக் கடவுள் எல்லோரையும் அழிக்க வேண்டும் என பிரளயத்தை உண்டு பண்ணுகிறார். ஆனால் நீதி தவறாத ஒரே மனிதனான நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் மட்டும் எப்படியாவது காப்பாற்றக் கடவுள் எண்ணுகிறார். அதனால் கடவுள் நோவாவிற்கு ஒரு கட்டளையிடுகிறார். அந்தக் கட்டளையின் படி நோவாவால் கட்டப்படுவதே இப்பேழை ஆகும். கடல் முகப்பில் ஐந்து நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டது. மேலும்...