நோவாவின் பேழை (ஹொங்கொங்)
நோவாவின் பேழை அல்லது நோவாவின் கப்பல் (Noah's Ark in Hong Kong) என்பது யூதம், கிறித்தவம், இசுலாம் போன்ற ஆபிரகாமிய சமயங்களின் புனித நூல்களில் உள்ள நோவாவின் வெள்ளம் தொடர்பான குறிப்புகளுக்குச் செயல் வடிவம் கொடுத்து ஹொங்கொங்கில், புதிய கட்டுப்பாட்டகம், மா வான் எனும் தீவில், சிங் மா பாலத்திற்கு அடியில், ஹொங்கொங் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகக் கட்டப்பட்ட ஒரு பிரமாண்டமானக் கப்பலாகும். நோவாவின் பேழையினைக் குறித்து விவிலியத்தில் கூறிப்பிடப்பட்டுள்ள அளவுகளுடன் உருவாக்கப்பட்ட உலகின் ஒரே நோவாவின் பேழை இதுவாகும்.[1] இந்தக் கேளிக்கைப் பூங்காவின் மைய்யக்கரு கிறுத்தவ படைப்புவாதம் என்பது குறிக்கத்தக்கது.
வரலாறு
[தொகு]"கிறித்தவர்களின் புனித நூலாகிய விவிலியத்தில், பழைய ஏற்பாட்டில், ஆதியாகமத்தில், 6 மற்றும் 7 அதிகாரங்களில் இந்த நோவாவின் பேழை குறித்தக் குறிப்புகள் வருகின்றன. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் அதிகாரம் 6-7 களில், நோவாவின் கதை வருகிறது. அக்கதையின் படி மனிதனது பாவச் செயல்கள் பூமியில் அதிகரித்ததால், கோபமுற்றக் கடவுள் எல்லோரையும் அழிக்க வேண்டும் எனப் பிரளயத்தை உண்டுப்பன்னுகிறார். ஆனால் நீதித்தவறாத ஒரே மனிதனான நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் மட்டும் எப்படியாவது காப்பாற்ற கடவுள் எண்ணுகிறார். அதனால் கடவுள் நோவாவிற்கு ஒரு கட்டளையிடுகிறார். அந்தக்கட்டளையின் படி நோவாவால் கட்டப்படுவதே "நோவாவின் கப்பல் அல்லது நோவாவின் பேழை என்பதாகும். கப்பலை நோவா கட்டியவுடன் நோவாவையும், நோவாவின் குடும்பத்தாரையும், உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடி விலங்குகள், பறவைகள், ஊர்வன என நோவாவின் கப்பலுக்குள் ஏற்றிக்கொண்டு மூடிக்கொள்ளும் படி கடவுள் கட்டளை இடுகிறார். அதனைத் தொடர்ந்து 40 நாட்கள் இடைவிடாத கடும் மழை, கடல் நீர் மட்டம் மலை முகடுகளுக்கும் மேலாக உயர்கின்றது. அந்த வெள்ளப்பெருக்கில் உலகில் உள்ள உயிரிணங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. ஆனால் நோவாவும், அவரது குடும்பத்தாரும், கப்பலில் ஏற்றப்பட்ட விலங்குகளும் மட்டுமே உலகில் மிஞ்சுகின்றது. மீண்டும் கடல் நீர் மட்டம் வடிந்து இயல்பு நிலை தோன்றுகிறது. நோவாவின் குடும்பத்தாருடன், மிருகங்களும், பறவைகளும் கப்பலை விட்டுச் சோடி சோடிகளாக வெளியேறுகின்றன." என்பது பைபில் கூறும் கதையாகும்.
இக்கதையை உண்மை வரலாறு என்று கூறுவோரும், கற்பனை என்று கூறுவோரும் ஒரு புறம் இருக்க, இந்தக் கதைக்குச் செயல் வடிவம் கொடுத்து, ஹொங்கொங் வரும் உல்லாசப் பயணிகளை ஈர்த்தெடுக்கும் திட்டம் ஒன்றை வகுத்து, நோவாவின் கப்பலை ஹொங்கொங்கில் ஒரு அழகிய இடமான மா வான் எனும் குட்டித்தீவில், சிங் மா பாலத்தின் அடியில், கடல் முகப்பில் ஹொங்கொங் வை.எம்.சி நிறுவனம் உட்பட மற்றும் ஐந்து நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டது. இதனை 2009 பெப்ரவரி 15 ஆம் திகதி பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
நோவாவின் கப்பலின் தோற்றம்
[தொகு]விவிலியத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போன்றே நோவாவின் பேழையை, பார்வைக்கு மரப்பலகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. நோவாவின் கதையில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே, வெள்ளப் பெருக்கிலிருந்து தப்பிய ஒவ்வொரு சோடி மிருகங்களையும் பறவைகளையும், ஊர்வனவைகளையும் தத்ரூபச் சிற்ப விலங்குகளாக உருவாக்கியுள்ளனர். இந்த விலங்குச் சிற்பங்கள் உயிருள்ளவை போன்றே காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட சோடி விலங்கினங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு விலங்குகளும் அதனதற்கே உரிய உருவ அளவில், அதனதற்கே உரிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்ப விலங்குப் பூங்காவைச் சுற்றி 1000 திற்கும் அதிகமான மரங்களை நட்டு இயற்கையைப் போலவே செயற்கையாய் உருவாக்கியிருக்கின்றனர். இவ்வாறான சிற்ப விலங்குப் பூங்கா இதுவே உலகில் முதன்மையானது ஆகும்.
மேலதிகத் தகவல்கள்
[தொகு]இந்த நோவாவின் கப்பல் ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது. நிலத்தளமும், நிலத்தலத்திற்கு மேல் மூன்று தளங்களும், நிலத்தடியில் ஒரு தளமுமாக, மொத்தம் ஐந்து தளங்களாகும். நில மட்டத்தளத்தில் நோவாவின் மண்டபம் இருக்கின்றது. இதில் நோவாவின் கப்பல் வெள்ளப் பெருக்கின் போது சிக்குண்டு கரைச்சேர்வது போன்ற திரைப்படம், 180 டிக்ரி அகன்ற திரையில் காண்பிக்கப்படுகின்றது. உலகச் சுகாதார கேடுகளினால் விளையும் பாதிப்புகளை விவரிக்கும் 4D திரைப்படம் ஒன்றும் காண்பிக்கப்படுகின்றது. மேலும் பல்வேறு காட்சிகள் உள்ளன. அரங்கின் உள்ளே உள்ளன. காலை சென்றால் மாலை வரை பார்க்கக்கூடிய விடயங்கள் உள்ளே உள்ளன. உள்ளே நிழல்படம், ஒளிப்படம் எடுப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.
நோவாவின் பேழைக்கு செல்லும் உல்லாசப் பயணிகளுக்கு விவரித்துக் கூறும், நோவாவின் பேழை பணியாளர்கள் உள்ளனர். ஆங்கிலம், மற்றும் கண்டோனிசு மொழிகளில் விவரிப்பாளர்கள் உள்ளனர்.
பண்டையச் சீனாவின் பழங்காலத் தொல்பொருள் சின்னங்கள் ஆய்வாளர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்ட 10 இடங்களில், இந்த மா வான் தீவும் ஒன்று எனப்படுகின்றது. உள்ளே அவைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சந்திரனின் இறங்கிய எட்டாவது வின்வெளி வீரர், சந்திரனின் இறங்கும் போது உடுத்தியிருந்த உடை மற்றும் உபகரணங்கள் போன்றனவும் இங்கே காட்சிப்படுத்தியுள்ளனர். இதைத் தவிர உணவகப் பகுதி, திருமணப் பதிவகம் போன்றனவும் உள்ளே உள்ளன. நோவாவின் பேழையின் மூன்றாம் தளம் உல்லாசப் பயணிகளுக்கான தங்குமிடமாக அமைக்கப்பட்டுள்ளது.
செல்லும் வழி
[தொகு]நோவாவின் பேழை அமைக்கப்பட்டிருக்கும் மா வான் தீவுக்கு. சென்டரலில் இருந்து பேருந்து மற்றும் தொடருந்து போன்றவற்றில் பயணிக்க முடியாது. கடல் வழியாக மட்டுமே பயணிக்கலாம். ஒன்று ஹொங்கொங் தீவில், ஐ.எப்.சி கட்டடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் தீவுகளுக்கான வள்ளச் சேவையின் ஊடாகப் பயணிக்க முடியும். அந்த இடத்தில் பாக் தீவு (மா வான் தீவு) எனும் தீவுக்குச் செல்லும் வள்ளத்தினை எடுக்க வேண்டும். விமானத்தின் வசதிகளுக்கு இணையான சொகுசு, அதிவேக படகுகள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. சுன் வான் நகரிலிருந்து கடல்வழியாகவும் பயணிக்கலாம். சுன் வானிலிருந்து செல்லும் வள்ளம் சற்று வசதி குறைந்தது.
ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இந்த நோவாவின் பூங்காவிற்கு பேருந்து போக்குவரத்து உள்ளது. அத்துட்டன் கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பின் மொங் கொக் எனும் இடத்தில் இருந்தும் பேருந்து போக்குவரத்து சேவை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.[2]
கடல் வழிப் பயணம்:
- சென்ட்ரல் <-> மா வான் தீவு (பாக் தீவு)
- சுன் வான் <-> மா வான் தீவு (பாக் தீவு)
தரை வழிப் பயணம்:
- விமான நிலையம் <-> மா வான் தீவு (பாக் தீவு)
- மொங் கொக் (சிறப்பு நூற்றாண்டுக் கட்டடம்) <-> மா வான் தீவு (பாக் தீவு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The world's only full-sized replica of Noah's Ark". Archived from the original on 2011-05-18. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10.
- ↑ "நோவாவின் பேழை செல்லுவதற்கான வழிப்பாதை வரைப்படம்". Archived from the original on 2011-01-18. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10.