விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 21, 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் நகர்பேசி என்று அழைக்கப் படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு சுவற்றிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப் படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசியின் இன்னொரு பெயர் செல்பேசி (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச இயல்வதால்).


முதனி (Primate) என்பது உயிரினத்தில் பாலூட்டிகளின் பெரும்பிரிவில் மனிதர்கள் உட்பட, கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான், கி்ப்பன், லெமூர், பலவகையான குரங்குகள், தென் அமெரிக்க அரிங்குகள், தேவாங்கு, புதர்ச்சேய், முதலியன சேர்ந்த ஒரு பேரினம். இந்த முதனி இனத்தில் 52 உள் இனங்களும் அவற்றில் மொத்தம் 180க்கும் அதிகமான தனி விலங்கு வகைகளும் உள்ளன என முதனியறிஞர்கள் (primatalogists) கருதுகின்றனர். உயிரின வளர்ச்சி வரலாற்றின் மிக அண்மைக் காலத்திலே கிளைத்துப் பெருகியதாக கருதப்படும் இனம் இந்த முதனி இனம்.