விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூலை 14, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் 'கலம்செய் கம்மியர்' எனப்பட்டனர். சங்க இலக்கியங்களும் பெரிப்புளுசின் எரித்திரியக் கடற்செலவு, தாலமியின் நிலவியல் கையேடு, பிளினியின் இயற்கை வரலாறு ஆகிய நூல்களும் தமிழகத் துறைமுகங்கள், கடற்கரை வணிக மையங்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன.சங்ககால தமிழர் கலங்கள் வேந்தர்களால் வணிக நோக்கத்துக்கு பயன்படுத்தப் பட்டதோடு நில்லாமல் இலங்கையை போரில் வெல்லுவதற்கும் பயன்படுத்திக் கொண்டனர். முதலாம் பாண்டியப் பேரரசு (கி.பி. 550 - 950), சோழப் பேரரசு (கி.பி. 850 - 1250), இரண்டாம் பாண்டியர் பேரரசு (கி.பி. 1150 - 1350) போன்ற காலங்களில் தமிழர் கப்பல்கள் வணிகத்தில் சிறப்புற்றதோடு நில்லாமல் கடல் கடந்து இலங்கை, கிழக்குப் பகுதிகளில் உள்ள பல நாடுகளின் மீது படை எடுத்து வென்றனர். மேலும்...


கத்தேரி தேக்கக்விதா, (1656–1680), (திருமுழுக்கு பெயர்: கேத்ரின் தேக்கக்விதா) என்றும் 'மோகாக்கியரின் லில்லி மலர்' என்றும் அறியப்படுபவர் ஒரு அல்கோன்குயின்-மோகாக்கிய கத்தோலிக்க கன்னியரும், பொது நிலைத்துறவியும் ஆவார். இவர் தற்போது நியூயார்க் மாநிலம் அமைந்துள்ள இடத்தில் பிறந்தவர். சிறுவயதில் பெரியம்மையால் தாக்கப்பட்டு பிழைத்தவர். இளமையிலேயே பெற்றோரை இழந்தவர். தனது 19ஆம் அகவையில் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறி திருமுழுக்குப் பெற்றார். இதன்பின் தனது வாழ்நாளை இயேசு சபை மறைபணி தளமான மொண்ட்ரியாலில் உள்ள கானாவாக்கே கிராமத்தில் கழித்தார். இவர் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறியதால் தனது சொந்த குடும்பத்தாலும், இனத்தாலும் ஒதுக்கப்பட்டார். அமெரிக்க முதற்குடிமக்களுள் திருச்சபையின் பீட மகிமை அளிக்கப்பட்ட முதல் பெண் இவர் ஆவார். இவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 1980இல் அருளாளர் பட்டம் அளித்தார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 2012 அக்டோபர் 21, இல் புனித பேதுரு பேராலயத்தில் இவருக்கு புனிதர் பட்டம் அளித்தார். பல்வேறு அதிசயங்களும் இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளும் இவரது மரணத்திற்கு பின்னர் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும்...