விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூன் 2, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. இலக்குவனார் (நவம்பர் 17, 1909- செப்டம்பர் 3, 1973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். திருவள்ளுவராண்டு 1930, கார்த்திகைத் திங்கள், முதல் நாள் தமிழ்நாட்டின் அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டிணம் மாவட்டம்), திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மைமேடு என்னும் சிற்றூரில், சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாம் புதல்வராகப் பிறந்தார். தமது நான்கு வயதிலேயே தந்தையை இழந்தார். குறுநிலக்கிழாராகவும் ஒரு மளிகைக்கடை உரிமையாளராகவும் விளங்கிய இவரது தந்தையார் மறைவுக்குப் பின் திண்ணைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. தன் பிள்ளை படிக்கவேண்டும் என்று அவரது தாயார் விழைந்தமையால் இராசாமடம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களில் நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று தமது ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார். இவர் எட்டாம் வகுப்புப் படித்தபொழுது இலட்சுமணன் என இவரது பெயரை, இவரது தமிழாசிரியர் சாமி சிதம்பரனார், "இலக்குவன்" என மாற்றச் செய்தார். மேலும்...


2013 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 6 அல்லது 2013 ஐபிஎல்), ஆறாவது இந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) 2007இல் தொடங்கியது. இந்தப் போட்டியில் ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் 3, 2013 முதல் மே 26, 2013 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதன் துவக்க விழா ஏப்ரல் 2, 2013 அன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் அரங்கத்தில் நடந்தது. குளிர்பான நிறுவனமான பெப்சி புரக்கும் முதல் பருவமாக இது அமைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் முதல் பருவமாகவும் இது அமைந்துள்ளது. முந்தைய பருவ வெற்றியாளர்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை தக்க வைத்துக்கொள்ள விளையாடினர். 2013ஆம் ஆண்டிலிருந்து இதுவரை புரவலராக இருந்த டிஎல்எப் நிறுவனத்திற்கு மாற்றாக பெப்சி நிறுவனம் ஏற்றுக்கொண்டது. ஐந்தாண்டுகளுக்கு 250 கோடிக்கு ஏலம் எடுத்திருந்த டிஎல்எப் நிறுவனம் சென்ற ஆண்டுடன் முடிவடைந்த தனது ஒப்பந்தப்புள்ளியை புதுப்பிக்காதநிலையில் பெப்சி நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, 2017 வரை, 396.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. மேலும்...