விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டெம்பர் 30, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோழி வளர்ப்பு ஒரு குறிப்பிடத்தக்க தொழிற் துறையாகும். சிறிய அளவில் குடிசைக் கைத்தொழில் முதல் மிகப் பெரும் பண்ணைகள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. கோழிகள் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் நோய்க் காரணமாக கோழிவளர்ப்பு பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.

கோழியானது பண்ணை மூலமாகவும் பண்ணை இல்லாமலும் வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காக பயன்படுகிறது.


கணிதத்தில் வரிசைமாற்றம், சேர்மானம் என்ற இரண்டு அடிப்படைக் கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன. ஒரு கணத்தின் உறுப்புக்களை ஒரு வரிசையில் வைத்து அவ்வரிசையை மாற்றி அமைத்தால் இம்ம்மாறுதல் ஒரு வரிசைமாற்றம் அல்லது வரிசை மாற்றல் எனப்படும். மாற்றிக்கிடைத்த வரிசைக்கும் வரிசைமாற்றம் என்றே பெயர். வரிசை என்ற கருத்தையே கொண்டு வராமல் கணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்புக்களைத் தேர்ந்தெடுத்தால் இச்செயல் ஒரு சேர்வு எனப்படும். இச்செயலினால் கிடைக்கும் உட்கணத்திற்கும் சேர்வு என்றே பெயர். இவ்விரண்டு கருத்துக்களாகிற விதைகளிலிருந்து சிறுசிறு செடிகளாகப் பல வேறுபட்ட இடங்களில் வேரூன்றி முளைத்து 19ம் நூற்றாண்டில் பெரிய ஆலமரமாகப் பரவி அதன் விழுதுகள் புள்ளியியல், இயற்பியல், வேதியியல், இயலறிவியல்கள் எனப் பல அறிவியல் பிரிவுகளிலும் இன்றியமையாத கணிதக் கரணமாகப் பயன்படத் தொடங்கின. 20ம் நூற்றாண்டில் அவ்விழுதுகளும் எல்லா பயன்பாடுகளும் ஒன்றுசேர்க்கப்பட்டு இன்று கணிதத்தில் சேர்வியல் என்ற ஒரு மிகப்பெரிய பிரிவாகத் திகழ்கிறது. இக்கட்டுரையில் வரிசைமாற்றம் என்ற அடிக்கருத்தைப் பார்ப்போம்.