விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 5, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோளப்பொரி மக்காச்சோள மணிகளைப் பொரிக்கையில் அவை விரிந்து, காற்றடைத்து உருவாவது ஆகும். கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றைப் போலவே மக்காச்சோளத்தின் மணிகளும் அடர்ந்த மாவுப்பொருளையும் உறுதியான புறப்பகுதியையும் கொண்டுள்ளதால் இவற்றைச் சுடும்போது உள்ளே அழுத்தம் வளர்ந்து பட்டென்ற ஒலியுடன் வெடிக்கின்றன. சிலவகை மக்காச்சோளங்களை சோளப்பொரி செய்வதற்காகவே பயிரிடுகின்றனர். பெரும்பாலும் உண்ணுவதற்காகவே செய்யப்படும் சோளப்பொரியைச் சில வேளைகளில் அணி செய்யவும் வேறு தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். கடைகளில் பெரிய அளவில் இவற்றைப் பொரிக்கும் இயந்திரத்தை சார்லசு கிரிட்டோர்சு என்பவர் முதலில் உருவாக்கினார். இவற்றைச் சமைக்கும் முறையைப் பொருத்து இவற்றை உடல்நலத்துக்கேற்ற உணவுகள் என்றோ தவிர்க்கப்பட வேண்டியவை என்றோ கருதுகின்றனர். சோளப்பொரியை ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்கப் பழங்குடியினர் கண்டு பிடித்துள்ளனர். 16ம் நூற்றாண்டுவாக்கில் அமெரிக்கக் கண்டத்துக்கு வந்த ஆங்கிலேயர், பழங்குடியினரிடம் இருந்து இதைப்பற்றி அறிந்தனர். இரண்டாம் உலகப்போருக்குமுன் ஏற்பட்ட பெரும் பொருளியல் வீழ்ச்சியின்போது பிற உணவுகளைக் காட்டிலும் சோளப்பொரி மலிவாக இருந்ததால் வெகுவாகப் பரவியது. மேலும்..


பெரியசாமி தூரன் (1908-1987) நாட்டுப்பற்றாளர், தமிழ் புலவர், ஆசிரியர் மற்றும் கருநாடக இசை வல்லுனர். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழின் முதலாவது விரிவான பல்துறைக் கலைக்களஞ்சியமான தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை வெளியிட்டார். குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும் வெளியிட்டார். பிறவியிலேயே கவி உள்ளம் படைத்த பெ. தூரன் தமிழில் கீர்த்தனைகள் புனையத் தொடங்கினார். பிற்காலத்தில் இவரது கீர்த்தனைகள், சுவர, தாள இசைக் குறிப்புகளுடன் தொகுதிகளாக வந்துள்ளன. ஈரோட்டைச் சேர்ந்தவர். கொங்கு நாட்டவரின் வரலாற்று நாயகர்களான பொன்னர் சங்கர் இருவரும் பெரியசாமி, சின்னச்சாமி என்று அழைக்கப்பட்டனர். மேழிப்பள்ளி பொன்னர் நினைவால் இவருக்குப் பெரியசாமி என்று பெயர் வைக்கப்பட்டது. கொங்கு வேளாளரில் இவர் "தூரன்" குலம் சார்ந்தவர் ஆனதால் "தூரன்" என்று பெயரில் இணைத்துக் கொண்டார். சென்னை மாநிலக் கல்லூரியில், கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று ஆசிரியப் பயிற்சியும் பெற்றார். சென்னையில் கல்வி கற்கும்போதே சக மாணவர்களுடன் இணைந்து "பித்தன்" என்ற மாத இதழை நடத்தத் தூரன் காரணமாக இருந்தார். மேலும்..