கொங்கு வேளாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொங்கு வேளாளர்
வகைப்பாடுபிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
மதங்கள்இந்து
மொழிகள்தமிழ் (கொங்குத் தமிழ்)
நாடுஇந்தியா
மூல மாநிலம்தமிழ்நாடு
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
தமிழ்நாடு[1]
பகுதிகொங்கு நாடு

கொங்கு வேளாளர் (Kongu Vellalar) எனப்படுவோர் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். பொதுவாக இவர்களை கவுண்டர் என்றும் கொங்கு சமுதாயம் என்றும் அழைப்பர்.[2] கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ள இவர்கள் முற்படுத்தப்பட்ட வகுப்பினராய் இருந்து, 1975இல் தங்களின் கோரிக்கைக்கேற்ப பிற்படுத்தப்பட்டவர்களாய் அறிவிக்கப்பட்டார்கள்.[3] கவுண்டர் என்ற சொல்லுக்கு நிலத்தை, மக்களை, நாட்டை காப்பவன் என்பது பொருளென்று புலவர் ராசு கூறுகின்றார் .[4]

கவுண்டர்கள் இன்று பெருமளவு உழவிலும், தொழிற்துறையிலும் ஈடுபட்டு வருவதோடு தமிழக அரசியலிலும் முதன்மைப் பங்கு வகிக்கின்றனர். இவர்கள் திண்டுக்கல், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.[5]

கவுண்டர்கள் வரலாறு

கரூர் வளநாட்டை ஆண்ட அண்ணமாரை சேரர் என வரலாற்று ஆதாரங்களை திரட்டி வரும் கே. ராஜா குறிப்பிடுவதால், கவுண்டர்கள் சேரர்களின் வழி வந்தவர்களாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.[6][7] தகடூரை ஆண்ட சத்யபுத்திர அதியமான்கள் கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி குறிப்பிடுகிறார்.[8] 13ஆம் நூற்றாண்டில் கொங்கு பகுதியை ஆட்சி செய்த காளிங்கராயர் எனப்படும் லிங்கைய கவுண்டர், கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் ஆவார்.[9][10][11] [12] காளிங்கராயர் ஈரோடு பகுதியில் பாயும் பவானி நதியையும், கோவை பகுதியில் பாயும் நொய்யல் நதியையும் இணைத்து, கொங்கு நாட்டை வளப்படுத்தினார்.[13][14] விஜயநகர அரசிற்கு பிறகு, பதினாறாம் நூற்றாண்டில், தமிழகம் பல்வேறு பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மேற்கு தமிழக பகுதியில் பல்வேறு பாளையங்களை கவுண்டர்கள் ஆண்டு வந்திருக்கின்றனர்.[சான்று தேவை][15][16] அவற்றுட் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சரித்திர வீரர்கள்

தீரன் சின்னமலை - இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர் என்பதாகும். காங்கேய பகுதி பாளையக்காரரான இவர், இரண்டாவது பாளையப் போரில், பல்வேறு பாளையங்களுக்கு தலைமை தாங்கி ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்தார். மைசூர் அரசன் திப்பு சுல்தானுக்கு, தனது படைகளுடன் உதவி புரிந்தார். ஓடாநிலையில் கோட்டை கட்டி கொங்கு நாட்டை ஆண்டார்.[17][18] 1801இல் காவேரி கரையில் நடந்த போரிலும், 1802இல் ஓடாநிலையில் நடந்த போரிலும், 1804இல் அரச்சலூரில் நடந்த போரிலும், ஆங்கிலேயரை தோற்கடித்து வெற்றி கொண்டார். பழனி பகுதியில் கொரில்லாப் போர் மேற்கொண்டிருந்த போது, சமையல்காரனால் காட்டி கொடுக்கப்பட்டு, சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.[19]

அரசியல் செல்வாக்கு

கொங்கு மண்டல அரசியலில், கவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தமிழக அரசியலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு பெரும் கட்சிகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர். தற்போதைய தமிழக அமைச்சரவையில் 4 பேர் கொங்கு வேளாளர்கள். தமிழக அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் கொண்ட சாதியினர் இவர்களே.[20][21] இந்திய மத்திய அரசிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில், திமுகவைச் சேர்ந்த ஒரு கொங்கு வேளாளர் அமைச்சராக உள்ளார். கொங்கு வேளாளர் நலனுக்காக தமிழ்நாட்டில் இரு சிறிய கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அவை ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு முன்னேற்ற கழகமும் மற்றும் உ. தனியரசு தலைமையில் செயல்படும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகும்.[22] தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இச்சமூகத்தை சேர்ந்தவர்.

தொழில்கள்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொங்கு மாவட்டங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.[23] கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், சேலம் மற்றும் நாமக்கல் போன்ற கொங்கு மாவட்டங்களில் பல்வேறு தொழில்களில் கவுண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் உள்ள பெரும்பாலான நூற்பாலைகள், சாயப்பட்டறைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் கொங்கு வேளாளர்களுக்கு சொந்தமானவை. நாமக்கல் பகுதியில் லாரி பாடி பில்டிங் தொழிற்கூடங்கள், கோழிப் பண்ணைகள் போன்ற தொழில்கள் கவுண்டர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. ஜவுளித்துறை, பின்னலாடை, கனரக மற்றும் ஆட்டோமொபைல் பாகங்கள், கல்வி நிறுவனங்கள், முட்டை மற்றும் மஞ்சள் ஏற்றுமதி போன்ற துறைகளில் கொங்கு வேளாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.[5]

சமூக நிலை

இந்திய சுதந்திரத்தின் போது கவுண்டர்கள், முன்னேறிய வகுப்பினராக வரையறுக்கப்பட்டிருந்தனர். 1970களின் ஆரம்பங்களில் மாநாடுகள் நடத்தி, தங்களை பிற்பட்ட வகுப்பினராக வரையறுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அவர்களை பிற்பட்ட வகுப்பினராக அறிவித்தது.[24] கிராமபுறங்களில் இன்னும் கல்லூரி வசதி இல்லாததால், ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கொங்கு வேளாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.[25]

பண்பாடு மற்றும் கலாசார பழக்க வழக்கங்கள்

கொங்கு வேளாளரின் சமயம்

கவுண்டர்கள் பாரம்பரிய சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் சைவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். முந்தைய காலங்களில் கணிசமான மக்கள் சமணத்தைப் பின்பற்றியதாகத் தெரிகிறது அதுக்கு ஆதாரமாக இன்றும் விஜயமங்கலம், சீனாபுரம், வெள்ளோடு, பெருந்துறை, பழனி, ஐவர்மலை மற்றும் பூந்துறை ஆகிய இடங்களில் சமண கோவில்கள் காணப்படுகின்றன. பின்னர் சித்தர் மரபுகளால், அவர்கள் மீண்டும் சைவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். கவுண்டர்கள் கோத்திரம் என்ற முறையைப் பின்பற்றுகிறார்கள், இது கூட்டம் என்று அழைக்கப்படுகிறது, அதில் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்களாகக் கருதப்படுவதால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.ஒவ்வொரு குலத்திற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குலதெய்வங்கள் உள்ளன.[26][27][28][29]

குலதெய்வ வழிபாடு, கூட்டம் மற்றும் பங்காளி முறை

கொங்கு வேளாள கவுண்டர்கள் தனது குலத் தொழிலான விவசாயத்தை பெருக்க பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டி இருந்தது, ஆகையால் அண்ணன் தம்பி மற்றும் அக்காள் தங்கை உறவுகள் மாறிவிடாமல் இருக்க அதாவது உறவு மாறி தனது தங்கையை அல்லது அண்ணன் போன்ற உறவு முறை உள்ளவர்களை திருமணம் செய்யாமல் இருக்கவும் உரிய உறவுமுறை அடையாளம் தெரிந்து கொள்வதற்கும் கூட்ட முறையை உருவாக்கினர். இதற்கு தங்களது தந்தையர் பெயரை வைத்தனர். அதாவது செல்லன் கூட்டத்தார் செல்லன் வழிவந்தவர்கள். உலகத்தில் உள்ள அனைத்து செல்லன் கூட்டத்தை சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் செல்லன் என்ற ஒருவரின் வழிதோன்றல் ஆகும். ஆகவே ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். ஒரே கூட்டத்தை சேர்த்தவர்களே பங்காளிகள் ஆவர். கவுண்டர்கள் மற்ற இனத்தினரைப் போல் பொதுவான தெய்வத்தை மட்டும் வணங்காமல் தாங்கள் எவ்வழி வந்தனரோ - அதாவது தங்கள் ஆதி தாய் தந்தையரை மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர். இதுவே இவர்களுக்கு குலதெய்வமாகும். இங்கு வருடம் ஒருமுறையேனும், ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள், தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வந்து ஆதி தாய் தந்தையரை வணங்குவதுடன் தமது உறவுகளை சந்தித்து செல்கிறார்கள்.

திருமண முறை

கவுண்டர்களின் திருமணங்கள் விமர்சையாக நடக்கும். பிறமொழிக் கலப்பு இன்றியே கொங்கு வேளாளர் மணவினைகள் காலங்காலமாய் நிகழுகின்றன. இந்தச் சிறப்பைத் தமிழகத்தின் பிறபகுதித் திருமணங்களில் காணுதல் அருமை. கொங்கு வேளாள இனத்தை சேர்ந்த 'அருமைப்பெரியவர்' என்பவர் திருமணத்தை நடத்துவார். இவரை அருமைக்காரர் என்றும் அழைப்பர். அருமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும். அவரவர் தேவைக்கேற்ப கொங்கு சிவபிராமணர்களையும், குலகுருக்களையும் மங்கிலியம் என்ற தாலிபூட்டும் பொழுது வைப்பதாக கொங்கு மங்கல வாழ்த்திலுள்ளது.

கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.

என்று அப்பாடல் தொடங்கும். கொங்கு வேளாளரின் திருமணம் மூன்று நாட்களும், பெண் வீட்டிலும் நடக்கும்.

முதல் நாள் (நாள் விருந்து) - இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள்.

இரண்டாம் நாள் (கலியாண நாள் அல்லது முகூர்த்த கால்) - இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழை, தென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர். அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர். முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும். பொதுவாக ஆல மரம், அரச மரம், பாலை மரங்களில் இது வெட்டப்படும். காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும். ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர்.

இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர். இரவு விருந்துக்குப் பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலை நடுவார்கள். நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்து, மஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர். முகூர்த்தக்காலிட்டப்பின்னரே மற்ற சடங்குகளை செய்வர்.

இரண்டாம் நாள் (கங்கணம் கட்டுதல் ) - அருமைப்பெரியவர் கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார்.

இரண்டாம் நாள் (நிறைநாழி செய்தல்) - வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்து, நூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர். இது நிறைநாழி எனப்படும். இதனை ஒரு பேழையில் வைப்பர், அருமைக்காரர் செய்யும் ஒவ்வொரு பூசையின் போதும் இதனை எடுத்து சுற்றிக்காட்டுவார்.

இரண்டாம் நாள் (இணைச்சீர்) - இது மணமகன் வீட்டில் மட்டும் நடைபெறும் முக்கியச் சடங்காகும். மணமகனின் சகோதரி இதில் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருப்பார், இவர் சும்மாட்டின் மீது மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியை சுமந்து வருவார். இதனுள் தாலியும் குழவிக்கல்லும் இருக்கும். சொம்பு நீரைக் கொடுத்து அருமைக்காரி இவரை அழைத்து வருவார். அருமைக்காரர் வெற்றிலை பாக்கு கொடுத்து மடியில் கட்டிக்க சொல்லுவார். பின் கூறைச்சேலையை கொசுவ மடிப்பில் மடித்து ஒரு புறத்தை மணமகன் கக்கத்திலும் மறுபுறத்தை சகோதரி கையிலும் அருமைக்காரர் கொடுப்பார். இணைச்சீரின் போது இணைச்சீர்காரி (சகோதரி) கொண்டு வரும் கூறைப்புடவையைத் தான் முகூர்த்தத்தின் போது மணப்பெண் அணிந்து வரவேண்டும்.

மணமகன் மணமகள் வீடு செல்லும் முன் நாட்டார் கல்லை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து மரியாதை செலுத்துவார். தாயை வணங்கி சீர் கூடையுடன் சுற்றம் சூழ ஊர்வலமாக மணமகள் ஊரை அடைந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர். மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் சுற்றம் சூழ மேள தாளங்களுடன் சென்று மணமகன் வீட்டாரை வரவேற்று, மணவீடு அருகே அமைந்துள்ள மணமகன் அறையில் மணமகனை தங்க வைப்பர்.

மூன்றாம் நாள் (முகூர்த்தம்) - இதை தாலி கட்டு என்றும் அழைப்பர். அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க, மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல நாணைக் கட்டுவார்.[30]

குலம் அல்லது கூட்டம் பட்டியல்

கொங்கு வேளாளர் கூட்டப் பிரிவுகள் (அல்லது குலப்பிரிவுகள்) நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளது. ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது.

கொங்க வெள்ளாள கவுண்டர் உட்பிரிவுகள்

கொங்கு வெள்ளாள கவுண்டர்களில் பல சாதிய உட்பிரிவுகள் இருப்பினும் அவற்றில் முக்கியமானவை சில இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னராகவே தனி சாதியினராய் பிரிந்த வரலாறும் செப்பேடுகளில் பதியப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் உரிய சான்றுகளுடன் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

 • நாட்டு கவுண்டர் / நாட்டு வெள்ளாள கவுண்டர்
 • வடகரை வெள்ளாள கவுண்டர் / நரம்புகட்டி கவுண்டர் / நார்முடி வெள்ளாள கவுண்டர்
 • பவளங்கட்டி வெள்ளாள கவுண்டர்
 • செந்தலை / தென்கரை வெள்ளாள கவுண்டர் (பெரும்பான்மையினர்)
 • பால வெள்ளாள கவுண்டர் (சங்கு வெள்ளாளர் உட்பட)
 • படைத்தலை கவுண்டர்

நாட்டு கவுண்டர்

நாட்டு கவுண்டர்கள் கொங்குநாட்டின் 24 நாடுகளுக்கும் தலைமையான நாட்டாச்சி நடத்துபவர்கள் ஆவார்கள். இவர்கள் குடகொங்கு எனப்படும் காவிரிக்கு மேற்கு & தெற்கு கரைகளில் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் அங்கமாகவும், மழகொங்கு எனப்படும் காவிரிக்கு கிழக்கு & வடக்கு கரைகளில் நாட்டு வெள்ளாள கவுண்டர் என்று வழங்கப்படும் தனித்த சாதியினராய் இன்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்களைப்பற்றிய கல்வெட்டுகள் ஏராளமாய் கிடைக்கின்றன. மழகொங்கில் இவர்கள் பெரும்பாலும் சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம் பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். மழகொங்கில் இருக்கும் நாட்டார் மட்டுமே நாட்டு கவுண்டர் என்ற தவறான புரிதலும் சமூகத்தில் இருந்து வருகின்றது. 13ஆம் நூற்றாண்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஹரூர் பகுதிகளில் இருந்த நாட்டு கவுண்டர்கள் அனைவரும் பெரும்பாலையை கடந்து காவிரிக்கரைக்கே வந்துவிட்டனர் என்ற கூற்று இருப்பினும் இன்றும் அப்பகுதிகளில் நாட்டு கவுண்டர் சிலர் இருக்கவே செய்கின்றனர். நாட்டாரில் இருந்து பிரிந்து வேறு இடத்தில் காணி வாங்கி ஆட்சி அமைப்பவர்கள் காணியாளர் எனப்பட்டார்கள். இவர்கள் காணியாட்சி நடத்துவார்கள். உதாரணமாக மோகனூர் மணியன் கூட்டத்தினர் மோகனூர் நாட்டாரில் ஒருவர். இவர்களில் இருந்து பிரிந்து முத்தூரில் முத்தன் குல பெண்ணை மணந்து சீதனமாக முத்தூர் காணியை வாங்கிய மணியன் கூட்டத்தார் முத்தூர் மணியன் எனப்பட்டனர். இவர்கள் காணியாளர்கள். பின்னர் கொங்கு நாட்டை கைப்பற்றிய வீரபாண்டியன் முத்தூர் மணியன் கூட்டத்தாரின் ஒரு குடும்பத்தை சேலம் அருகே வீரபாண்டி என்ற ஊரை உருவாக்கி அதன் நாட்டாச்சியை அவர்களிடம் பாண்டியன் ஒப்படைக்கிறார். இதனை புலவர் இராசு கொங்கு வேளாளர் குல வரலாறு எனும் நூலில் ஆதாரங்களுடன் பதித்துள்ளார். இன்றும் அவர்கள் வீரபாண்டி மணியன் என்று வழங்கப்படுகின்றனர். அவர்கள் மணவினை கொள்கைகள் மழகொங்கு நாட்டார்களுடன் மட்டுமே கொள்கின்றனர்.

கொங்கு 24 நாட்டின் நாட்டார் பிரிவுகள்:

பூந்துறை நாட்டார் - பூந்துறை நாடு:
 • பூந்துறை காடை (சாகாடை) கோத்திரம்
 • வெள்ளோடு பயிர கோத்திரம்
 • வெள்ளோடு சாத்தந்தை கோத்திரம்
 • நசியனூர் கன்ன கோத்திரம்
 • நசியனூர் பூச்சந்தை கோத்திரம்
 • நசியனூர் செம்ப கோத்திரம்
 • நசியனூர் கூரை கோத்திரம்
 • எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம்
தென்கரை நாட்டார்:
 • கொத்தனூர் பெரிய கோத்திரம்
 • மூலனூர் பூச கோத்திரம்
காங்கய நாட்டார்:
 • காங்கயம் செங்கண்ண கோத்திரம்
 • காடையூர் பெறழந்தை (முழுக்காத) கோத்திரம்
 • ஆனூர் பயிர கோத்திரம்
 • வள்ளியறச்சல் பில்ல கோத்திரம்
பொங்கலூர் நாட்டார்:
 • கொடுவாய் ஓதாள கோத்திரம்
 • பொங்கலூர் பொன்ன கோத்திரம்
 • புத்தரச்சல் குழாய கோத்திரம்
 • உகாயானுர் சாத்தந்தை கோத்திரம்
வையாபுரி நாட்டார்:
 • பழனி ஈஞ்ச கோத்திரம்
மண நாட்டார்:
 • கூடலூர் வெண்டுவ கோத்திரம்
தலைய நாட்டார்:
 • கன்னிவாடி கன்ன கோத்திரம்
கிழங்கு நாட்டார் & வாழவந்தி நாட்டார்:
 • வாங்கல் பெருங்குடி கோத்திரம்
 • மோகனூர் மணிய கோத்திரம்
தட்டய நாட்டார்:
 • புலியூர் பெருங்குடி கோத்திரம்
அரைய நாட்டார்:
 • தலையநல்லூர் (சிவகிரி) கூரை கோத்திரம்
அண்ட நாட்டார்:
 • பொருளூர் பூச கோத்திரம்
காவிடிக்கா நாட்டார்:
 • ஊத்துக்குளி அகத்தூரம்மன் சாத்தந்தை கோத்திரம்
காஞ்சிகோயில் நாட்டார்:
 • காஞ்சிகோயில் செம்ப கோத்திரம்
 • காஞ்சிகோயில் கன்ன கோத்திரம்
 • காஞ்சிகோயில் மொளசி கன்ன கோத்திரம்
நல்லுருக்கா நாட்டார் & தென் பொங்கலூர் நாட்டார்:
 • கீரனூர் பவள கோத்திரம்

எழுகரை (அக்கரை, மழகொங்க) நாட்டார் கோத்திரங்கள்: இவர்கள் இன்று தனி சாதியாய் உள்ளார்கள். ஆயினும் இவர்கள் தென்திசை வெள்ளாள கவுண்டர் / செந்தலைக் கவுண்டர்களே ஆவர். சோழர் காலத்தில் மழகொங்கின் நாட்டாட்சி நிர்வாகத்திற்காக இவர்கள் சோழர்களால் முடிசூட்டிவைக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள் என்பது வரலாறு [31]. இவர்களுக்கும் மழகொங்கை பூர்வீகமாகக்கொண்ட வடகரை வெள்ளாள கவுண்டர்களுக்கும் அவர்களின் நாட்டார் பிரிவினருக்கும் சம்பந்தம் கிடையாது.

கீழக்கரை பூந்துறை நாட்டார்:
 • மோரூர் கன்ன கோத்திரம்
 • மொளசி கன்ன கோத்திரம்
 • பருத்திப்பள்ளி செல்ல கோத்திரம்
 • ஏழூர் பண்ணை கோத்திரம்
 • மல்லசமுத்திரம் விழிய கோத்திரம்
ராசிபுர நாடு:
 • ராசிபுரம் விழிய கோத்திரம்
சேல நாடு:
 • வெண்ணந்தூர் காடை கோத்திரம்
 • கலியாணி ஏழூர் பண்ணை கோத்திரம்
 • வீரபாண்டி மணிய கோத்திரம்
 • திண்டமங்கலம் ஆந்தை கோத்திரம்

பால வெள்ளாள கவுண்டர் நாட்டார்கள்: இவர்களும் இன்று தனி சாதியாய் உள்ளார்கள். இரட்டை சங்கு கோத்திரங்களில் 5, ஒற்றை சங்கு பிரிவில் 18 கோத்திரங்கள் என 23 கோத்திரங்கள் இவர்களில் உண்டு

ஆறை நாட்டார்:
 • சேவூர் பைத்தலை / பயிசலி கோத்திர சோழியாண்டார் (இரட்டை சங்கு)
 • சர்க்கார் சாமக்குளம் (கோவில்பாளையம்) மசக்காளி மன்றாடியார் - பொருளந்தை கோத்திரம் - (ஒற்றை சங்கு பிரிவு - பதவி இழந்தவர்கள்)

ஆறை நாட்டாரான சோழியாண்டார் கிடாரம் மேல் மணியன் கோத்திரம் & குண்டடம் சுற்றத்தில் உள்ள கீரனூர் கழஞ்சியர் கோத்திரத்தாரிடம் மட்டுமே மணவினை கொள்வர். தொரவலூர் வெள்ளத்தலை / வைத்தலை கோத்திரம், ஆதவூர் குந்தலை கோத்திரம் இவர்களுக்கு பங்காளிகலாவர். துடியலூர் வீரபாண்டி அருகே உள்ள இடிகரை சுற்றத்தில் மதிப்பானல்லூர் கொற்றந்தை / கொட்டந்தை கோத்திரத்தார் இவர்களுக்கு நெருங்கியவர்கள் ஆவர். 23 நாடுகளுக்கு நாட்டார் உண்டு என கல்வெட்டிகள் கிடைப்பதாக கொங்கு சோழர் எனும் நூலில் புவனேஸ்வரி குறிபிட்டுள்ளார்.

வெள்ளாள படைத்தலை கவுண்டர் நாட்டார்கள்:

வடகரை நாட்டார் & ஒடுவங்க நாட்டார்

அந்தியூர் காணியாளரான பொன்னாளிக் கவுண்டர் மரபினர்

குறுப்பு நாட்டார்
 • இரண்டாம் பட்டம்: படைத்தலை கவுண்டர்களில் பிறழந்தை கோத்திரத்தார்.
 • மூன்றாம் பட்டம்: விஜயாபுரி அம்மனுக்குச் சேர்ந்த ஐந்து முப்பாட்டு படைத்தலை கவுண்டர்கள்.

வடகரை வெள்ளாள கவுண்டர் /பவளங்கட்டி வெள்ளாள கவுண்டர் / நரம்புகட்டி கவுண்டர்/

பவளங்கட்டி வெள்ளாளக் கவுண்டர்கள் இவர்கள் பெரும்பாலும் சேலம் மாவட்டத்தின் ஓமலூர், மேச்சேரி, தாரமங்கலம், மேட்டூர், எடப்பாடி மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலை ஆகிய பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர், இவர்களின் பழக்கவழக்கம் கலாச்சார முறைகள் ஒன்று இரண்டை தவிர பெரும்பாலும் செந்தலை கவுண்டர்கள் எனப்படும் தெற்கத்தி கவுண்டர்களின் அதே கலாச்சார முறைகள் பின்பற்றப்படுகின்றன. காவிரியின் கிழக்கு & வடக்கு பகுதிகளில் இன்றைய பவானி, சத்தியமங்கலம், தாரமங்கலம், மேட்டூர், சேலம், சேலத்து ஆத்தூர், ஊத்தங்கரை, தர்மபுரி, கிருஷ்ணகிரியில் பரவலாக தொன்றுதொட்டு வாழ்கிறார்கள்.[32] [33] [34] [35]. இவர்களை வடக்கத்தி கவுண்டர் எனவும், நரம்புகட்டி கவுண்டர் எனவும், நார்முடி வேளாளர் எனவும் வழங்குவர். இவர்கள் மழகொங்கின் பூர்வீக குடிகளாவர்[36] [37] [38]. செந்தலை வெள்ளாள கவுண்டர்களின் பழக்கவழக்கங்கலுக்கும், வடகரையாரின் வழக்கங்களுக்கும் மாறுபாடுகள் உள்ளன. ஆநிரை சார்ந்த வாழ்க்கை அமைப்பு இவர்களுடையது. பசு மட்டுமின்றி ஆடு வளர்ப்பும் இவர்களிடம் மிகுதியாக உண்டு. தருமபுரியில் இவர்களை வடக்கத்தி கவுண்டர் எனவும், செந்தலை வெள்ளாள கவுண்டர்களை தெக்கத்திக் கவுண்டர் எனவும் பிரித்து வழங்குகின்றனர் [39] [40] க இவர்களுக்கும் அதியர்களுக்கும் உள்ள நெருக்கத்தை முன்னாள் தமிழக தொல்லியல் துறை & A.S.I யின் தலைவராகவும் இருந்த டாக்டர் நாகசாமி அவர்கள் தன் இணையத்தில் குறிபிட்டுள்ளது நோக்கத்தக்கதாகும் [41] [42]. இவர்களை பற்றி பல நூல்களும் வெளியாகியுள்ளன.

வடகரை வெள்ளாள கவுண்டர்களின் கூட்டங்கள்:

புலவர் ராசு அவர்கள் கள ஆய்விலும், கல்வெட்டு & இலக்கிய ஆய்விலும் வடகரை வெள்ளாள கவுண்டர்களின் கூட்டப்பெயர்களை தொகுத்து கொங்கு வேளாளர் குல வரலாறு நூலில் வெளியிட்டுள்ளார். அவை,

 • ஆவ குலம்
 • ஆவரான் குலம்
 • ஊமை குலம்
 • எருமை குலம்
 • ஏறுமயில் குலம்
 • கணவாள குலம் (பெரும்பான்மையினர்)
 • கவல குலம்
 • கண்ண குலம்
 • கண்ணி குலம்
 • காடர் குலம்
 • காரியான் குலம்
 • குங்கிலியான் குலம்
 • குரியான் குலம்
 • கொன்னதியான் குலம்.
 • கோதன்டியான் / கொற்றந்தியான் குலம்
 • கோவேந்தர் குலம்
 • சாத்தந்தை குலம்
 • செல்ல குலம்
 • நரபால / நரம்பர் குலம்
 • பண்ண குலம்
 • பவள குலம்
 • பாரியூரான் குலம்
 • பால குலம்
 • பில்லை குலம்
 • புல்ல குலம்
 • பூமன் குலம்
 • பேர்வாழ குலம்
 • பேரீஞ்சியான் குலம்
 • மணியன் குலம்
 • மேனியர் குலம்
 • வக்கன்ன குலம்
 • வண்ண குலம்
 • வந்தன் குலம்
 • வாணி குலம்
 • விலாட குலம்
 • வேத குலம்
 • வேந்தன் குலம்

இவற்றில் எருமை குலம் என்பது செந்தலை வெள்ளாள கவுண்டரில் மேதி என்று வழங்கும். கல்வெட்டுகளும் மேதி என்றே வழங்குகின்றது.

மேற்கோள்கள்

 1. Sivan, Jayaraj (21 May 2009). "Gounder consolidation could pose headache to major parties". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Gounder-consolidation-could-pose-headache-to-major-parties/articleshow/4557663.cms?referral=PM. பார்த்த நாள்: 22 May 2016. 
 2. "But here the vast majority were, as we have already seen, Kavun dans or Vellalas." - Indian Antiquary - Volume 44 - Page 61, Swati Publications, 1985
 3. From a Forward Caste, the Kongu Vellala Gounders and 14 sub-castes became Backward Caste in 1975. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article277921.ece
 4. http://frontlineonnet.com/fl2516/stories/20080815251611400.htm
 5. 5.0 5.1 http://articles.timesofindia.indiatimes.com/2009-05-21/chennai/28179309_1_poll-observers-assembly-polls-poll-eve
 6. http://www.hindu.com/mp/2008/12/04/stories/2008120450440400.htm
 7. http://books.google.co.in/books?id=8WNEcgMr11kC&pg=PA397#v=onepage&q&f=false
 8. http://www.tamilartsacademy.com/journals/volume8/articles/article1.xml
 9. https://books.google.co.in/books?id=J4MMAQAAMAAJ&q=kalingaraya+kavundan&dq=kalingaraya+kavundan&hl=en&sa=X&ei=k6xtVZ-NNcGIuASC_oGgCA&ved=0CCEQ6AEwAQ
 10. http://www.hindu.com/2007/01/21/stories/2007012101260300.htm
 11. http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=98
 12. http://www.deccanchronicle.com/channels/cities/regions/coimbatore/preserving-800-year-old-rich-heritage-725
 13. https://books.google.co.in/books?id=J4MMAQAAMAAJ&q=kalingaraya+kavundan&dq=kalingaraya+kavundan&hl=en&sa=X&ei=k6xtVZ-NNcGIuASC_oGgCA&ved=0CCEQ6AEwAQ
 14. http://www.hindu.com/2007/01/21/stories/2007012101260300.htm
 15. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article482113.ece
 16. http://www.hindu.com/mp/2008/10/11/stories/2008101154271000.htm
 17. ஓடாநிலையில் கோட்டை
 18. http://thannambikkai.org/2013/09/13/17379/
 19. http://www.hindu.com/2008/08/02/stories/2008080254520600.htm
 20. http://thatstamil.oneindia.in/news/2011/05/16/kongu-vellala-goundars-get-huge-share-aid0091.html
 21. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=241980
 22. http://www.dinamalar.com/News_Detail.asp?id=206419
 23. http://article.wn.com/view/WNATb665d563a67f9ca702e50389fa524a79/
 24. http://www.hindu.com/2009/05/08/stories/2009050854060500.htm
 25. http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE-002600629.html
 26. http://www.konguassociation.com/en/epages/religion.html
 27. https://www.jstor.org/stable/44147510
 28. https://books.google.co.in/books?id=pOqgYpCgCXsC&printsec=frontcover&dq=kongu+vellalar+saiva+siddhanta&hl=en&newbks=1&newbks_redir=1&sa=X&ved=2ahUKEwjekZqwx-LyAhWuzDgGHdrsDtMQ6AF6BAgFEAI
 29. https://books.google.co.in/books?id=wcWfAAAAMAAJ&q=kongu+vellalar+AND+saiva+siddhanta&dq=kongu+vellalar+AND+saiva+siddhanta&hl=en&newbks=1&newbks_redir=1&printsec=frontcover&sa=X&ved=2ahUKEwj7j427x-LyAhWnzjgGHY8kBUsQ6AF6BAgJEAI
 30. http://www.ulakaththamizh.org/JOTSpdf/006001010.pdf Meenakshisundaram, Dr. K., A Brief Study of the Marriage System of the Kongu Vellala Gounder Community, Journal of Tamil Studies Vol. 6, December 1974.
 31. நாட்டு வெள்ளாள கவுண்டர்கள் பகுதி, கொங்கு வேளாளர் குல வரலாறு - தொகுதி 2, புலவர் இராசு
 32. Madras Dstrict Gazzetter, Salem - 1818, Volume 1, page 139 The konga Vellars are divided into the following territorial groups: (1) Ten-talai (corrupted into sentalai; located in tiruchengodu taluk and in part of coimbatore) (2) Vada-talai (salem,Attur,Uttankarai), (3) palai (4) padaitalai, (5) Narambu-katti (6) pavalam-katti. To these must be added the velli-kai Vellars of the Barahmahal and the Nattans, who are said to have sprung from the Ten-talai section. The Narambu-kattis are said to be so named because they wear entrails round the neck. http://archive.org/stream/p1salemrich01richuoft#page/138/mode/2up
 33. முனைவர் இரா. கா. மாணிக்கம், கொங்கின் வடகரை, வளமார் கொங்கு - பண்பாடும் வரலாறும், டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் நூல் ஆக்கக் குழு, https://www.scribd.com/doc/267456717/
 34. டாக்டர் மணிமேகலைப்புட்பராசு, தருமபுரி மாவட்டத்தில் கொங்குவேளாளர், பாவேந்தர் நினைவு அறக்கட்டளை - http://dharmapuri.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=1272656
 35. பேராசிரியர் மாணிக்கம்.இரா.கா, கொங்கு வடகரை வேளாளர் வரலாறும் வாழ்வியலும்
 36. முனைவர் இரா.கா. மாணிக்கம், கொங்கின் வடகரை, வளமார் கொங்கு - பண்பாடும் வரலாறும், டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் நூல் ஆக்கக் குழு, https://www.scribd.com/doc/267456717/
 37. டாக்டர் மணிமேகலைப்புட்பராசு, தருமபுரி மாவட்டத்தில் கொங்குவேளாளர், பாவேந்தர் நினைவு அறக்கட்டளை - http://dharmapuri.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=1272656
 38. பேராசிரியர் மாணிக்கம்.இரா.கா, கொங்கு வடகரை வேளாளர் வரலாறும் வாழ்வியலும்
 39. பேராசிரியர் மாணிக்கம்.இரா.கா, கொங்கு வடகரை வேளாளர் வரலாறும் வாழ்வியலும்
 40. முனைவர் இரா.கா. மாணிக்கம், கொங்கின் வடகரை, வளமார் கொங்கு - பண்பாடும் வரலாறும், டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் நூல் ஆக்கக் குழு, https://www.scribd.com/doc/267456717/
 41. The Gaunders never go back on their word and are akin to “Satya-putras”, Sons of Truth. It is not with out basis that they call the ancient Atiyamaan Chieftains as a vellala. They are never tricky in their dealing but always straight forward , http://www.tamilartsacademy.com/journals/volume8/articles/article1.xml
 42. As mentioned the ancient Chieftain Atiyaman’s family is credited with the introduction of Sugar cane cultivation in the south in a Tamil sangam poem which is nearly 2000 years old. There is another group among them who call themselves “Paisalis” evidently “Vaisalis”, the Vaisali of Bihar region and remind us of many chieftains who are mentioned in Tamil inscriptions as Vesalip-peraraiyans, http://www.tamilartsacademy.com/journals/volume8/articles/article1.xml

உசாத்துணை

 • கொங்கு வேளாளர் திருமணச் சடங்குகள் – மணிமேகலை புட்பராசு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கு_வேளாளர்&oldid=3945791" இலிருந்து மீள்விக்கப்பட்டது