விக்கிப்பீடியா:உரை திருத்தும் திட்டம்
விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை இயற்றுவது போலவே, ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, தகவல் பிழை களைந்து அவற்றின் குறைந்தபட்ச தரத்தை உறுதி செய்வது முக்கியமாகிறது. ஒரு கட்டுரை இல்லாமல் இருப்பதை விட பிழைகள் மலிந்து இருப்பது விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் என்பதால், இது குறித்து நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். உரை திருத்தும் பணிகளை ஒருங்கிணைக்க, மேம்படுத்த இந்தத் திட்டம் உதவும். இங்கு உரை திருத்தத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கான குறிப்புகள் தரப்படும்.
உரை திருத்தம் தொடர்பான வழிகாட்டல்கள்
[தொகு]- நடைக் கையேடு
- கலைச் சொல் கையேடு
- மொழிபெயர்ப்புக் கையேடு
- எழுத்துப்பெயர்ப்புக் கையேடு
- தமிழ் இலக்கணக் கையேடு
- தமிழ் உச்சரிப்புக் கையேடு
- வாழ்க்கை வரலாறு எழுதுதல் கையேடு
- பெயரிடல் மரபு
- பக்க வடிவமைப்பு கையேடு
- தகவல் அட்டவணையாக்கக் கையேடு
- எழுத்துப் பிழைகள் கொண்ட சொற்களின் பட்டியல்
முன்னுரிமை தர வேண்டிய கட்டுரைகள்
[தொகு]- குறுந்தட்டுக் கட்டுரைகள்
- முதற்பக்கத்தில் இருந்து இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள்
- புதிய பயனர்கள் உருவாக்கும் கட்டுரைகள்
- கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
- துப்புரவாக்க வேண்டிய கட்டுரைகள்
உரை திருத்தம் தொடர்பான வார்ப்புருக்கள்
[தொகு]உரை திருத்தும் முயற்சிகள்
[தொகு]தானியக்க உரை திருத்தும் முயற்சிகள்
[தொகு]- பயனர்:Sodabot
- விக்கிப்பீடியா:AutoWikiBrowser/Typos
- பயனர்:SundarBot - கூகுள் கட்டுரைகளில் சிகப்பு இணைப்புகள் நீக்கம்
உரை திருத்தத்தில் கவனிக்க வேண்டியவை
[தொகு]- விக்கியாக்கம்
- எழுத்து, இலக்கணப் பிழைகள் களைதல்
- தகவல் ஆதாரங்கள் வேண்டுதல்
- கிரந்தம், பிற மொழிச் சொல் தவிர்த்தல்
- படங்கள் சேர்த்தல்
- உரைநடையை எளிமையாக்கல்.
விக்கியாக்கம்
[தொகு]விக்கியாக்கத்தில் கவனிக்க வேண்டியவை:
- தலைப்பைத் தடித்த எழுத்துகளில் எழுதுதல்
- விக்கியிடைத் தொடுப்புகள் தருதல்.
- நூல்கள், ஆக்கங்கள் பெயர்களை சாய்வெழுத்துகளில் எழுதுதல்.
- நிறுத்தற்குறிகளுக்கு அடுத்து ஒரு இடம் மட்டும் விடுதல்.
- பத்திகளுக்கு இடையே ஒரு வரி இடம் விடுதல்.
- பகுப்புகள் சேர்த்தல்
- திரும்பத் திரும்பச் செய்யும் பணிகளுக்கு AWB, தானியங்கிகள் பயன்படுத்துதல். உதவிக்கு, சுந்தர், தெரன்சு, வினோத்தை அணுகலாம்.
- உள்ளிணைப்புகள் தருதல்.
எளிய உரைநடை
[தொகு]- செயப்பாட்டு வினை தவிர்த்தல்
- சிறு சிறு சொற்றொடர்களாக எழுதுதல். முடிவில்லாமல் காற்புள்ளி இட்டுக்கொண்டே போக வேண்டாம்.
- இயன்ற அளவு சொற் புணர்ச்சிகளைத் தவிர்த்தல். புணர்ந்தாலும் இடைவெளி விட்டு எழுதுதல்.
- அடைப்புக்குறி விளக்கங்கள் தவிர்த்தல்.
- புழக்கத்தில் உள்ள எளிய சொற்களைப் பயன்படுத்துதல்.
- சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுதலைத் தவிர்த்தல்.
- ஐந்தாம் வகுப்பு மாணவன் தடையின்றி வாசிக்கக் கூடியதாகவும், பத்தாம் வகுப்பு மாணவனுக்காவது புரியக்கூடியதாகவும் இருத்தல் நலம்.
- ஆங்கில சொற்றொடர் அமைப்புகளின் தமிழாக்கமாக இருக்கக்கூடாது. தமிழ்ச் சொற்றொடர் அமைப்பைப் பின்பற்றுதல்.
பொதுவான உரைநடைப் பிழைகள்
[தொகு]பல கட்டுரைகளை உரை திருத்தும் போது சில உரைநடைப் பிழைகளைப் பரவலாகக் காண இயல்கிறது. இது பற்றி ஏற்கனவே சுட்டி இருந்தாலும் நினைவூட்டலுக்காக இன்னொரு முறை:
- அதுவோ அல்லது இதுவோ என்று எழுதுவது பிழை. அதுவோ இதுவோ என்று எழுதுவது தான் சரி. ஆங்கிலத்தில் உள்ள orஐ மனதில் கொண்டு அல்லது என்ற சொல்லை ஆள்வதனால் இந்தப் பிழை வருகிறது. பேச்சுவழக்கில் "அதுனாலும் சரி இதுனாலும் சரி; மாம்பழமோ கொய்யாவோ ஏதாச்சும் வாங்கி வா" என்று சொல்வதை நினைவில் கொள்ளலாம்.
- ஆங்கிலத்தில் உள்ள andக்கு ஈடாகப் பல இடங்களிலும் மற்றும் என்று எழுதப்படுகிறது. இந்த மற்றும் தேவையில்லை. வரிசையாக காற்புள்ளிகள் இட்டு எழுதினாலே போதுமானது. "அக்கா, அம்மா, அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க" என்று தான் பேச்சு வழக்கில் கேட்கிறோம். "அக்கா, அம்மா மற்றும் அப்பா எப்படி இருக்காங்க" என்று கேட்பதில்லை என்பதை நினைவில் கொள்ளலாம். இரண்டு, மூன்று பொருள்களை மட்டும் குறிப்பிடுவது என்றால், உம் சேர்த்து எழுதலாம். எடுத்துக்காட்டு: குயில் மற்றும் மயில் என்று எழுதத் தேவை இல்லை. குயிலும் மயிலும் என்று எழுதினால் போதும்.
- அசர அடிக்கும் அளவுக்கு எல்லா கட்டுரைகளிலும் தேவை இல்லாமல் பல இடங்களில் செயப்பாட்டு வினை வருகிறது. 1970ல் இந்நூல் வெளியானது என்று எழுதினாலே போதும். 1970ல் இந்நூல் வெளியிடப்பட்டது என்று சொல்லத் தேவை இல்லை. இதுவும் ஆங்கிலச் சொற்றொடர் அமைப்புகளை மனதில் கொண்டு தமிழாக்குவதால் வருவது.
- ஆங்கிலத்தில் இருந்து நேரடியாகத் தமிழாக்குவதைத் தவிர்க்க வேண்டும். எடுத்துக்காட்டு: நீர்வீழ்ச்சி - > அருவி, மூத்த சகோதரன் - > அண்ணன், மூத்த பெண் குழந்தை - > மூத்த மகள்.
- பொதுவான சொற்களுக்குப் பதில் சிறப்பான சொற்களைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு: சகோதரன், சகோதரி என்பதற்குப் பதில் அண்ணனா தம்பியா, அக்காவா தங்கையா என்பதைக் குறிப்பிடலாம்.
- கட்டுரை முழுவதும் ஒரு சொல்லைச் சீராகப் பயன்படுத்த வேண்டும். ஒரே கட்டுரைக்குள் ஒரே பொருளுக்கு வெவ்வேறு கலைசொற்கள் பயன்படுத்துவது, ஒரே ஆள் / இடம் / பொருளின் பெயரை வெவ்வேறு எழுத்துக்கூட்டல்களுடன் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- அல்ல, அன்று தொடர்பான பிழைகளைத் தவிர்க்க வேண்டும். அல்ல பன்மைக்குகம் அன்று ஒருமைக்கும் வரும்.
- ஒருமை, பன்மை குழப்பங்களைத் தவிர்க்க வேண்டும். இது தமிழ் பதிப்புலகில் மிகக் கூடுதலாகக் காணப்படும் பிழை. எடுத்துக்காட்டு: "பல வகையான பறவைகள் பறந்து சென்றது" என்பது பிழை. "பல வகையான பறவைகள் பறந்து சென்றன" என்பது சரி. "எங்களிடம் நிறைய பழங்கால அணிகலன்கள் உள்ளது" என்பது பிழை. "எங்களிடம் நிறைய பழங்கால அணிகலன்கள் உள்ளன" என்பது சரி.
- தமிழ் மரபுக்கு ஏற்ற சொற்றொடர் அமைப்பு வேண்டும். "இராமன் மரத்தை வெட்டினான்" என்பது "மரத்தை இராமன் வெட்டினான்" என்பதை விட இயல்பாக இருக்கும். ஒரே சொற்றொடரில், பெயர், இடம், ஆண்டு முதலிய பல விவரங்களைத் தரும் போதும் இயல்பான சொற்றொடர் அமைப்பாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். இந்தக் குறிப்பு பல விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கும் பொருந்தும்.
கிரந்தம் தவிர்க்க எளிய வழிமுறைகள்
[தொகு]- கிரந்தம் தேவைப்படும் பிற மொழிச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் இருந்தால் ஆளலாம்.
இஷ்டம் -> விருப்பம்.
சந்தோஷம் - > மகிழ்ச்சி
கஷ்டம் - > துன்பம், முடை, இடர், இடர்ப்பாடு, இன்னல், தடை, இடைஞ்சல்
ஸ்மைல் - > புன்னகை
- ஜ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றுக்குப் பதிலாகத் தமிழில் வழமையாக ஈடு கொடுக்கப்படும் எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.
வருஷம் - > வருடம்; வருசம். ஆண்டு (ஆண்டுவிழா, ஆண்டுநிறைவு என்னும் வழக்குகள் நோக்குக)
விஷயம் - > விசயம், விதயம், விடயம். (இது இன்னதென்று பொருள் புரியாது பயன் படுத்தும் ஒரு சொல். பெரும்பாலான இடங்களில் செய்தி ("சேதி",) குறிப்பு, நிகழ்வு என்று பொருள்படும்
விசேஷம் - > விசேசம், விசேடம், சிறப்பு, கொண்டாட்டம்
விஷம் - > விசம், விடம் (விசம், விடம் என்று ஒலிப்பைத் திரித்துச் சொன்னாலும் பாம்பு கொத்தினால் உயிர் போவது உறுதி :) ) நஞ்சு
ஷாந்தி -> சாந்தி
ஷங்கர் - > சங்கர்
ஹனுமான், ஹிந்தி, ஹிந்து, ஹோட்டல், ஹொகேனக்கல் - > அனுமான், இந்தி, இந்து, ஓட்டல், ஒகேனக்கல் (ஹகரத்தை விடுத்து அதை அடுத்து வரும் உயிர் ஒலியைக் கொள்ள வேண்டும்)
ராஜா, ரோஜா, ஜாதி, ஜோதிடம், ஜோதி - > ராசு, ராசா, ரோசா, சாதி, சோதிடம், சோதி. (முதல் சகரத்தை வல்லினமாக பலுக்கினால், ஒலித்திரிபு குறைவே)
மேல் உள்ள எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே என அறியலாம். சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.
- பொருளுள்ள பெயர்ச்சொற்களுக்கு சீனம், சப்பானிய மொழி போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் முற்காட்டு இருந்தால், நாமும் சொற்களை மொழிபெயர்த்து பொருள் விளங்குமாறு வழங்கத் தயங்கக்கூடாது.
- இடுகுறிப் பெயர்ச்சொற்களை இயன்ற வரை தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதி அடைப்புக்குறிகளில் ஆங்கிலம், மூல மொழியின் எழுத்துகளைக் கொண்டு எழுதிக் காட்டலாம். ஒலிக்கோப்புகள் தரலாம்.
ஆர்வலர்கள்
[தொகு]உதவி தேவைப்படும் பங்களிப்பாளர்கள்
[தொகு]எல்லா பங்களிப்பாளர்களின் எத்தகைய பங்களிப்பும் நன்றிக்குரியதே. எனினும், சிலரின் பங்களிப்புகளில் கூடுதல் உரை திருத்தக் கவனம் தேவைப்படுகிறது. அத்தகைய பங்களிப்புகள் நோக்கிய கவன ஈர்ப்புக்காக இந்தப் பட்டியல்: