வாஸ்து புருஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாஸ்து புருஷன் பற்றிய எண்ணக்கரு வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியமான ஒரு அம்சமாகும். இந்துக்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் கட்டிடத்துக்குரிய நிலம் அல்லது மனை ஒரு சடப் பொருளாக அன்றி உயிர்ப்புச் சக்தி கொண்ட ஒன்றாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு ஒரு கட்டிட நிலத்தின் உயிர்ப்புச் சக்தியே வாஸ்து புருஷனாக குறியீடாக உருவகப் படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இக்குறியீடு வாஸ்து புருஷனை ஆண் பால், மனித உருவம் கொண்டவனாகச் சித்தரிக்கின்றது. வாஸ்து புருஷ மண்டலத்தில் முழு இடத்தையும் பிடித்துக்கொண்டு, வடகிழக்கில் தலையையும், தென்மேற்கில் காலையும் வைத்துக்கொண்டு வாஸ்து புருஷன் குப்புறக் கிடப்பதாகச் சொல்லப்படுகின்றது (படிமம் 1).

தோற்றம்[தொகு]

படிமம்-1 வாஸ்துவும் வாஸ்து புருஷ மண்டலமும்

வாஸ்து புருஷனுடைய தோற்றம் பற்றிக் கூறும் பழங்கதை ஒன்று வாஸ்து நூல்களிலே காணப்படுகின்றது. இதன்படி, பூமியையும், வான் வெளியும் தன்னுடைய உடம்பினால் வியாபித்துக்கொண்டு பூதமொன்று உருவானது. இதனைக் கண்ட பிரம்மா முதலிய தேவர்கள் பயந்து, எல்லோரும் கூடி அப் பூதத்தை முகம் குப்புறப் படுத்த நிலையில் அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். இவ்வாறு செய்யும்போது எந்தெந்தத் தேவர்கள் அப் பூதத்தின் எப் பகுதியைப் பிடித்துக் கொண்டார்களோ அவர்களே உடலின் அப்பகுதிக்கு அதிபதிகளாகக் கருதப்படுகிறார்கள். இக்கதை, வாஸ்து புருஷ மண்டலத்தில் பல்வேறு கட்டங்கள் 45 தேவர்களுக்கு அதிபதித் தானங்களாகக் கருதப்படுவதற்கான காரணத் தொடர்பையும் விளக்குகிறது.

கட்டிட மனையும், வாஸ்து புருஷனும்[தொகு]

கட்டிட நிலம் அல்லது மனைக்கும், வாஸ்து புருஷனுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கூறும் சிற்பநூல்கள், ஒவ்வொரு மாதத்திலும் வெவ்வேறு திசைகளில் தலையை வைத்துக்கொண்டு, இடது கை மேலாகவும், வலது கை கீழேயும் இருக்கப் படுத்து இருப்பதாக உருவகப்படுத்துகின்றன.

இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டும் பொழுது வாஸ்து பார்த்து அந்த வாஸ்து நேரத்தில் கட்டிடப் பணிகளைத் தொடங்குகின்றனர்.

வாஸ்து புருசன்[தொகு]

வாஸ்து புருசன் இடது கையைக் கீழேயும், வலது கையை மேலாகவும் வைத்துப் படுத்திருப்பார். ஒவ்வொரு மாதமும் விழிப்பது இல்லை. குறிப்பிட்ட எட்டு மாதங்களில் விழித்திருப்பார். அந்த நாட்களிலும் 3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) விழித்திருப்பார். அதில் 2 1/4 நாழிகைக்கு மேல் 3 3/4 நாழிகையில்தான் (36 நிமிடம்) வாஸ்து செய்வது சிறந்தது என்கிறார்கள்.

வாஸ்து புருசன் பணிகள்[தொகு]

வாஸ்து புருசன் விழித்திருக்கும் நேரங்களில் அவர் செய்யக்கூடிய பணிகள்

  1. பல் துலக்குகிறார்.
  2. நீராடுகிறார்
  3. பூஜை செய்கிறார்
  4. உணவு உண்கிறார்
  5. தாம்பூலம் தரிக்கிறார்.

இதில் கடைசி 36 நிமிடங்களில் வாஸ்து செய்தால் வீடு சிறப்புடன் நிலைத்து நிற்கும்

வாஸ்து நேரம்[தொகு]

வாஸ்து வருடத்தில் எட்டு மாதங்களில் கீழ்காணும் அட்டவணைப்படி உள்ள நாள், நேரத்தில் வாஸ்து புருசன் விழித்திருக்கும் நேரம் வாஸ்து நேரம் எனப்படுகிறது.

வ,எண் மாதம் நாள் நேரம்
1 சித்திரை 10 காலை மணி 8.54 முதல் 9.30 வரை
2 வைகாசி 21 காலை மணி 10.06 முதல் 10.42 வரை
3 ஆடி 11 காலை மணி 7.42 முதல் 8.18 வரை
4 ஆவணி 6 பகல் மணி 3.18 முதல் 3.54 வரை
5 ஐப்பசி 11 காலை மணி 7.42 முதல் 8.18 வரை
6 கார்த்திகை 8 காலை மணி 10.54 முதல் 11.30 வரை
7 தை 12 காலை மணி 10.06 முதல் 10.42 வரை
8 மாசி 22 காலை மணி 10.06 முதல் 10.42 வரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாஸ்து_புருஷன்&oldid=2946101" இலிருந்து மீள்விக்கப்பட்டது