வாகனக் காப்பீடு (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாகன காப்பீடு மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு (அ) அவரது வாகனம் காப்பீடு செய்யப்பட்ட அபாயத்தால் சேதமடைதல், உபயோகமற்றதாகல், திருடப்படல் போன்ற நிலைமைக்கு தள்ளப்படுவதற்கு எதிரான பாதுகாப்பும் (ஆ) சட்டப்படி வாகன உரிமையாளர் ஏதேனும் மூன்றாவது தரப்பு பொறுப்புக்கு ஆளாக நேர்ந்தால் அதற்கான ஈட்டுத் தொகையும், செலுத்தி பாதுகாப்பை வழங்குகிறது. மூன்றாம் தரப்பு காப்பீடு என்பது சட்டப்பூர்வமான தேவை. ஒரு பொது இடத்தில் வாகனத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அல்லது எழும் மூன்றாம் தரப்பினரின் உயிர் அல்லது சொத்துக்களுக்கு ஏதேனும் காயம், அபாயம், அல்லது சேதத்திற்கு வாகனத்தின் உரிமையாளர் சட்டப்பூர்வமாக பொறுப்பாவார். பொது இடத்தில் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்[1]

சட்டக் கட்டமைப்பு[தொகு]

இந்தியாவில் பின்வரும் சட்டக் கட்டமைப்பின் விதிகளால் வாகன காப்பீடு நிர்வகிக்கப்படுகிறது. இவையில் முக்கியமானவை வருமாறு:

 • மோட்டார் வாகனச் சட்டம், 1988 (2019 வரையிலான திருத்தங்களுடன்)[2]
 • காப்பீட்டுச் சட்டம், 1938 (2019 வரையிலான திருத்தங்களுடன்)[3]
 • இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 (2018 வரையிலான திருத்தங்களுடன்)[4]
 • சொத்து பரிமாற்ற சட்டம், 1882 (2019 வரையிலான திருத்தங்களுடன்)[5]
 • சாலை வழி பண்டம் நகர்த்தல் சட்டம்[6], சாலை போக்குவரத்து கழகங்கள் சட்டம்[7], போன்ற பிற சட்டங்கள்

மோட்டார் வாகனச் சட்டம், 1988 ன்படி சாலையில் செல்லும் வாகனங்கள் ஒவ்வொன்றும் காப்பீடு செய்யப்பட்டிருப்பதைக் குறிக்கும். மேலும், அதற்கான நகல் / சான்று வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.

வாகனக் காப்பீடு வகைகள்[தொகு]

பொதுவாக, வாகனக் காப்பீடு வழங்கும் இரண்டு வகையான காப்பீட்டு ஆவணங்கள் உள்ளன.

 1. வாகனத்தால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் காயம், பொருட்சேதம், உயிரிழப்பு போன்றவைக்கான காப்பீட்டுப் பொறுப்பை மட்டுமே ஈட்டுறுதி செய்யும் ஆவணம் (பொதுவாக மூன்றாம் நபர் காப்பீடு என அழைக்கப்படும் இது சட்டரீதியான தேவையும் கூட)
 2. காப்பீட்டுத் தொகுப்பு ஆவணம் (காப்பீட்டு பொறுப்புடன் உரிமையாளரின் வாகனத்துக்கு சேதம் உள்ளிட்ட ஆபத்துகளுக்கு ஈட்டுறுதி வழங்குகிறது. இதை விரிவான காப்பீட்டு ஆவணம் என்றும் கூறுவர்)

முதலில் குறிப்பிட்ட வகையான வாகனக் காப்பீடு வாங்கும் ஒருவர் அந்த ஆவணம் சட்டரீதியான மூன்றாம் தரப்பு பொறுப்புக்கு மட்டுமே ஈட்டுறுதி வழங்கும் என்றும் உரிமையாளரின் வாகனத்திற்கு ஏற்படும் சேதம் உள்ளிட்ட ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு அளிக்காது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எனவே, உங்கள் வாகனத்திற்கான ஈட்டுறுதி உட்பட, விரிவான காப்பீடு வழங்கும் ஒரு தொகுப்பு காப்பீட்டு ஆவணத்தை வாங்குவதே விவேகமானதாக இருக்கும்.

விரிவான காப்பீட்டு ஆவணம் அளிக்கும் ஈட்டுறுதி[தொகு]

பின்வரும் ஆபத்துகளால் (perils) காப்பீடு வழங்கப்பட்ட வாகனங்களுக்கு ஏற்படக்கூடிய சேதம் உள்ளிட்ட இழப்புகளை ஈடுசெய்ய விரிவான காப்பீட்டு ஆவணம் ஈட்டுறுதி வழங்குகிறது.

இந்தியாவில் ஒரு வாகனக் காப்பீட்டுச் சான்றிதழ்

காப்பீட்டு ஆவணத்தில் காணப்படும் பொதுவான விலக்கல் வாசகம்[தொகு]

வாகனக் காப்பீட்டு ஆவணத்தில் காணப்படும் பொதுவான விலக்கல் வாசகத்தின்படி (general exclusions clause) பின்வரும் சூழ்நிலைகளில் ஈட்டுத்தொகை கோரிக்கை மறுக்கப்படக்கூடும்.

 • ஏற்கத்தக்க ஓட்டுநர் உரிமமின்மை
 • போதையூட்டும் மதுபானம்/மருந்துகள் விளைவுக்காரணியாயிருத்தல்
 • புவியியல் எல்லைக்கு (geographical limits) அப்பால் ஏற்படும் விபத்து
 • வாகனம் சட்டவிரோத நோக்கங்களுக்காக பயன்படுத்தல்
 • மின்/இயந்திர பழுதடைதல் (Electrical/Mechanical Breakdown)

ஏற்கத்தக்க ஓட்டுநர் உரிமம்[தொகு]

மேலே குறிப்பிட்டுள்ள பொதுவான விலக்கல் வாசகத்தின்படி முதலாவது விலக்கலுக்கான சூழ்நிலை ஏற்கத்தக்க ஓட்டுநர் உரிமமின்மை என்பதால் ஓட்டுநர் உரிமம் (driving licence) தொடர்பான சில சட்டப் பிரிவுகளை பற்றி தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

 • எந்தவொரு நபரும் எந்தவொரு பொது இடத்திலும் மோட்டார் வாகனத்தை ஓட்டுவதற்கு அதிகாரம் அளிக்கும் காலாவதியாகாத ஓட்டுநர் உரிமமின்றி வாகனத்தை ஓட்டக்கூடாது.
 • பதினெட்டு வயதுக்குட்பட்ட எவரும் பொது இடத்தில் மோட்டார் வாகனம் ஓட்டக்கூடாது. ஆனால், இதற்கு விதிவிலக்காக, பல்லிணை (gear) இல்லாமல் 50 கனசதமமீற்றருக்கு (cc) அதிகமில்லாமல் பொறித் திறன் கொண்ட ஒரு விசையுந்தினை ஒரு நபர் பதினாறு வயதை அடைந்த பிறகு பொது இடத்தில் ஓட்டலாம்.
 • இருபது வயதுக்குட்பட்ட எவரும் பொது இடத்தில் போக்குவரத்து வாகனத்தை ஓட்டக்கூடாது.
 • குறிப்பிட்ட வாகன வகைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதுவரம்புக்குட்பட்டுத் தான் எந்தவொரு நபருக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படலாம்.
 • ஓட்டுநர் உரிமவிதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் அனுமதியை வாகன உரிமையாளர்கள் பிறருக்கு வழங்கலாகாது.
 • ஓட்டுநர் உரிமம் அல்லது கற்றல் உரிமம் (learner’s licence) வைத்திருப்பவர்கள் அதை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது.
 • குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு இலகுரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால் ஒழிய, போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கான கற்றல் உரிமம் எவருக்கும் வழங்கப்படாது.

மோட்டார் வாகனச் சட்டம் வாகனங்களை பல்வேறு வகைகளாகவும், தன்மைகளுடையவையாகவும் வகைப்படுத்தியுள்ளது. ஓட்டுநர் உரிமம் கூட வாகனங்களின் தன்மைகளையும் வகைகளையும் கணக்கிலெடுத்தே வழங்கப்படுகின்றன. இவற்றில் சில பின்வருமாறு:

 • ஆம்னி பேருந்து (ஆறுக்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றிச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது)
 • இலகுரக மோட்டார் வாகனம் (light motor vehicle) (மொத்த வாகன எடை 7500 கிலோகிராம்களுக்கு மேலில்லாமல் இருக்கும் வகை)
 • இழுவை வண்டி (Trailer) (மோட்டார் வாகனத்தால் இழுக்கப்படும் வாகனவகை)
 • உழவு இயந்திரம் (Tractor)
 • ஒப்பந்த வண்டி (Contract Carriage)
 • கனரக சரக்கு வாகனம் (heavy goods vehicle) (12,000 கிலோகிராம்களுக்கு மேல் உள்ள வாகனவகை)
 • கனரக பயணிகள் மோட்டார் வாகனம் (heavy passenger motor vehicle)
 • சரக்குந்து (goods carriage)
 • சுற்றுலா வாகனம்
 • தனியார் சேவை வாகனம்
 • நடுத்தர சரக்கு வாகனம்
 • நடுத்தர பயணிகள் மோட்டார் வாகனம்
 • நோயாளி வண்டி (invalid carriage) (உடல் குறைபாடு அல்லது இயலாமையால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் பயன்பாட்டிற்கான வாகனம்)
 • பயணிகள் பேருந்து
 • பொது சேவை வாகனம்

வாகனக் காப்பீட்டு நிறுவனங்களால் காப்புறுதித் தொகை கோரப்படும் வேளையில் இவ்வாறு பல்வகையான வாகனங்களை உள்ளடக்கிய மோட்டார் வாகனச் சட்ட விதிகள் உன்னிப்பாக கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வாகனக் காப்பீடு: கால அளவு[தொகு]

பொதுவாக, வாகனக் காப்பீட்டு ஆவணம் , ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும். இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு நீண்டகால மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீண்ட கால காப்பீட்டு ஆவணம் நான்கு சக்கர வாகனங்களுக்கு 3 ஆண்டுகள் என்றாலும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் ஆகும்[8]. 1999-ஆவது ஆண்டின் இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை சட்டத்தின் பிரிவு 14(2)இன் கீழ் காப்பீட்டாளர்களுக்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் வாயிலாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து செயல்படுத்தும் நோக்கத்துடன் பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 1. புதிய சிற்றுந்துகளுக்கு மூன்று வருட மூன்றாம் நபர் வாகனக் காப்பீடு மற்றும் புதிய இரு சக்கர வாகனங்களுக்கு ஐந்து வருட மூன்றாம் நபர் வாகனக் காப்பீட்டு ஆவணங்களை மட்டும் வழங்குங்கள்;
 2. காப்பீட்டின் விற்பனையின் போது முழு காலத்திற்கும் (மூன்று ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகள்) காப்பீட்டுத் தவணைத் தொகை பெற்றுக்கொள்ளப்பட வேண்டும், ஆனால் இது ஆண்டு அடிப்படையில் தான் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படும். அதாவது, ஆண்டிற்கான காப்பீட்டுத் தவணைத் தொகை மட்டுமே வருமானமாக கணக்கிடப்படும் என்றும் செலுத்தப்பட்ட மீதமுள்ள ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தவணைத் தொகை "காப்பீட்டுத் தவணைத் தொகை வைப்பு" அல்லது "முன்பற்று காப்பீட்டுத் தவணைத் தொகை" என்று கருதப்படும்;
 3. பின்வரும் காரணங்களைத் தவிர எந்த மூன்றாம் நபர் காப்பீட்டையும் காப்பீட்டாளர் அல்லது காப்பீடு செய்தவரால் ரத்து செய்ய முடியாது:
  1. இரட்டை காப்பீடு
  2. மொத்த இழப்பு அல்லது ஆக்கபூர்வமான மொத்த இழப்பு காரணமாக வாகனம் இனி பயன்பாட்டில் இல்லை
  3. வாகனம் விற்கப்படுதல் மற்றும்/அல்லது மாற்றப்படுதல்

மேலும், விரிவான காப்பீட்டு ஆவணத்தை பொறுத்தவரை, சுற்றறிக்கை இவ்வாறு கூறுகின்றது:

தற்போது, காப்பீட்டுத் தொகுப்பு ஆவணம் என அழைக்கப்படும் விரிவான காப்பீட்டு ஆவணம் காப்பீட்டு பொறுப்புடன் (மூன்றாம் நபர் காப்பீடு) உரிமையாளரின் வாகனத்துக்கு சேதம் உள்ளிட்ட ஆபத்துகளுக்கு ஈட்டுறுதி வழங்குகிறது. புதிய சிற்றுந்துகள் மற்றும் புதிய இரு சக்கர வாகனங்களுக்கான நீண்ட கால மூன்றாம் நபர் வாகனக் காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, காப்பீடு செய்யப்பட்டவருக்கு பின்வரும் இரண்டு விருப்பங்கள் வழங்கப்படலாம்:

 1. மூன்றாம் நபர் வாகனக் காப்பீடு மற்றும் உரிமையாளரின் வாகனத்துக்கு சேதம் உள்ளிட்ட ஆபத்துகளுக்கு காப்பீடு ஆகிய இரண்டையும் மூன்று ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கும் நீண்ட கால தொகுப்பு காப்புறுதி; அல்லது
 2. மூன்றாம் தரப்பு கூறுகளுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது ஐந்தாண்டுகள் (பொருந்தும் வகையில்) மற்றும் உரிமையாளரின் வாகனத்துக்கு சேதம் உள்ளிட்ட ஆபத்துகளுக்கு ஒரு வருட கால அவகாசத்துடன் கூடிய தொகுப்பு காப்புறுதி

வாகனக் காப்பீடு: காப்பீட்டுத் தவணைத் தொகை[தொகு]

ஆண்டுதோறும் காலக்கெடுவிற்கு முன் காப்பீட்டுத் தவணைத் தொகை (insurance premium) செலுத்தி புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்[9].

காப்பீட்டு நிறுவனங்கள் பொதுவாக காப்பீட்டுத் தவணைத் தொகையை செலுத்துவதற்கு நிலுவைத் தேதியில் எவ்வித சலுகைக் காலத்தையும் வழங்குவதில்லை. நிலுவையிலுள்ள 1938-ஆம் ஆண்டின் காப்பீட்டுச் சட்டத்தின் பிரிவு 64VB-யின் படி செலுத்த வேண்டிய காப்பீட்டுத் தவணைத் தொகையை பெறும் வரை அல்லது பரிந்துரைக்கப்பட்ட முறையில் முன்கூட்டியே வைப்பு செய்யப்படும் வரை, எந்தவொரு காப்பீட்டாளரும் இந்தியாவில் எந்தவொரு காப்பீட்டு வணிகத்திலும் எந்தவொரு இடரையும் (risk) ஏற்கக்கூடாது.

காப்பீட்டு ஆவணம் நிலுவைத் தேதிக்குள் காப்பீட்டுத் தவணைத் தொகை செலுத்தப்படாமல் காலாவதியானால், வாகனத்தை ஆய்வு செய்யவேண்டியது கட்டாயமாகும். மேலும், ஒரு விரிவான காப்பீட்டு ஆவணத்தை 90 நாட்களுக்கு மேல் காலாவதியாக அனுமதித்தால், திரட்டப்பட்ட கோரலின்மை வெகுமதி (no-claim bonus) பலனையும் இழக்க நேரிடும்[10].

புகார்கள் மற்றும் குறைகள்[தொகு]

ஒரு நடவடிக்கை அல்லது செயலின்மை, சேவையின் தரம் / சேவையின் குறைபாடு மற்றும் / அல்லது ஏதேனும் இடைத்தரகர் அல்லது பரிகார நடவடிக்கையைப் பற்றி அதிருப்தியை வெளிப்படுத்தும் எந்தவொரு தகவல்தொடர்பும் ஒரு குறையாக வரையறுக்கப்படுகிறது. ஒவ்வொரு காப்பீட்டாளரும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கு ஒரு குறை தீர்க்கும் பொறிமுறையை உறுதி செய்ய வேண்டும், இது வணிக வளர்ச்சிக்கான மிக முக்கியமான கருவியாகும்[11][12].

1998-ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று பொதுக் குறைகளை நிவர்த்தி செய்தல் விதிகளின் கீழ் காப்பீட்டு மன்றத்தின் ஆளுகைக் குழு (Governing Body of Insurance Council - GBIC) மூலம் இந்தியாவில் காப்பீட்டு முறைகேள் அதிகாரி (Insurance Ombudsman) என்ற அமைப்பு முறை நிறுவப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை சில விதிமுறைகளை அமலுக்கு கொண்டுவந்தது. இவற்றின்படி ஒவ்வொரு காப்பீட்டாளரும் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என உறுதி செய்ய வேண்டும்.

 1. நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட குறை தீர்க்கும் கொள்கை ஆவணம் உள்ளதை உறுதிசெய்ய வேண்டும்
 2. அனைத்து புகார்களும் முகமையின் ஒருங்கிணைந்த புகார் மேலாண்மை அமைப்பு (Integrated Grievance Management System) புறையம் மூலம் உள்நுழைய வேண்டும்
 3. ஒவ்வொரு காப்பீட்டாளரும் குறை தீர்க்கும் அதிகாரியை (Grievance Redressal Officer) கொண்டிருக்க வேண்டும். அவருடைய தொடர்பு விவரங்கள் காப்பீட்டு ஆவணதாரர்களுடனான அனைத்து தகவல்தொடர்புகளிலும் வழங்கப்பட வேண்டும்
 4. முகமையால் பரிந்துரைக்கப்பட்ட குறை தீர்க்கும் வழிகாட்டுதல்களை காப்பீட்டாளர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
 5. அனைத்து வகை புகார்களையும் தொடர்ந்து அறிக்கையிடுவதும் நிலுவையில் உள்ள புகார்களை சமரசம் செய்வதும் அன்றாட நடவடிக்கையாகும்
 6. புகார்களின் வகை, சம்பந்தப்பட்ட இடைத்தரகர், எடுக்கப்பட்ட நடவடிக்கை, மூலக் காரண பகுப்பாய்வு ஆகியவை ஒவ்வொரு கூட்டத்திலும் விவாதம் மற்றும் வழிகாட்டுதலுக்காக காப்பீட்டு ஆவணதாரர்களின் நலன் பாதுகாப்புக் குழுவின் முன் வைக்கப்பட வேண்டும்.

காப்பீட்டு முறைகேள் அதிகாரி[தொகு]

பல்வேறு இடங்களில் காப்பீட்டுக் காப்பீட்டு முறைகேள் அதிகாரிகள் உள்ளனர். காப்பீட்டாளர் மீது குறைகளைக் கொண்ட எந்தவொரு நபரும், தாமாகவோ அல்லது அவரது சட்டப்பூர்வ வாரிசுகள், பரிந்துரைக்கப்பட்டவர் அல்லது ஒதுக்கப்பட்டவர் மூலமாகவோ, காப்பீட்டாளரின் கிளை அல்லது அலுவலகத்தின் பிராந்திய அதிகார வரம்பிற்குள் உள்ள காப்பீட்டு முறைகேள் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் செய்யலாம்.

காப்பீட்டு ஆவணத்தில், அல்லது காப்பீட்டாளர் தகவல்தொடர்புகளில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில், காப்பீட்டாளரின் அலுவலகம் யாருடைய பிராந்திய அதிகார வரம்பிற்கு உட்பட்டதோ, அங்குள்ள காப்பீட்டு முறைகேள் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட வேண்டும். பின்வரும் நிலைமைகளில் காப்பீட்டு முறைகேள் அதிகாரியை அணுகலாம்.

 1. 1999-ஆம் ஆண்டின் இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தைத் தாண்டி, உரிமைகோரல்களைத் தீர்ப்பதில் தாமதம்
 2. காப்பீட்டு ஆவணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட அல்லது செலுத்த வேண்டிய காப்பீட்டுத் தவணைத் தொகை பற்றிய ஏதேனும் சர்ச்சை
 3. காப்பீட்டு ஆவணம் அல்லது காப்பீட்டு ஒப்பந்தத்தில் எந்த நேரத்திலும் ஆவண விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தவறாகக் குறிப்பிடுவது
 4. உரிமைகோரல் தொடர்பான தகராறு இருப்பின் காப்பீட்டு ஆவணத்தின் சட்டப்பூர்வ பொருள் விளக்கம்
 5. காப்பீட்டாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு எதிரான ஆவண சேவை தொடர்பான குறைகள்
 6. முன்மொழிபவர் சமர்ப்பித்த முன்மொழிவு படிவத்துடன் இணங்காத பொது காப்பீட்டு ஆவணம் வழங்குதல்.
 7. காப்பீட்டுத் தவணைத் தொகை பெற்ற பிறகு காப்பீட்டு ஆவணத்தை வழங்காதிருத்தல்
 8. இதர காப்பீட்டு சட்ட, விதிமுறை/வழிமுறை தொடர்பான பிரச்சினைகள்

காப்பீட்டு முறைகேள் அதிகாரி மத்தியஸ்தராக செயல்படுவார். மேலும் அவர்:

 • சர்ச்சையின் உண்மைகளின் அடிப்படையில் நியாயமான பரிந்துரையை வழங்குவார்
 • இதை நீங்கள் ஒரு முழுமையான மற்றும் இறுதி தீர்வாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்
 • காப்பீட்டு முறைகேள் அதிகாரி விதிமுறைகளுக்கு இணங்க வேண்டிய நிறுவனத்திற்கு 15 நாட்களில் பரிந்துரையை வழங்குவார்

தீர்ப்பு[தொகு]

பரிந்துரை மூலம் தீர்வு பலனளிக்கவில்லை என்றால், காப்பீட்டு முறைகேள் அதிகாரி புகார்தாரரிடமிருந்து அனைத்துத் தேவைகளையும் பெற்ற 3 மாதங்களுக்குள் ஒரு காப்பீட்டு நிறுவனத்த்தை கட்டுப்படுத்தும் தீர்ப்பை அனுப்புவார். சம்பந்தப்பட்ட காப்பீட்டாளர் தீர்ப்பு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் தீர்ப்புக்கு இணங்க வேண்டும், மேலும் அதை காப்பீட்டு முறைகேள் அதிகாரியிடம் தெரிவிக்கவும் வேண்டும். காப்பீட்டு முறைகேள் அதிகாரியின் தீர்ப்புக்கு மேல்முறையீட்டு அதிகாரம் எதுவும் இல்லை. தீர்ப்பு இறுதியானதும் காப்பீட்டாளரை கட்டுப்படுத்துவதுமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "மோட்டார் இன்சூரன்ஸ் கையேடு" [Motor Insurance Handbook]. https://irdai.gov.in/ (in ஆங்கிலம்). ஐதராபாத்து: இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை. p. 2. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2024. {{cite web}}: External link in |website= (help); Unknown parameter |archived-url= ignored (help)
 2. மோட்டார் வாகனச் சட்டம் [The Motor Vehicles Act, 1988] (pdf) (in ஆங்கிலம்). www.indiacode.nic.in. 1988. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2024.
 3. காப்பீட்டுச் சட்டம் [The Insurance Act, 1938] (pdf) (in ஆங்கிலம்). www.indiacode.nic.in. 1938. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2024.
 4. இந்திய ஒப்பந்தச் சட்டம் [The Indian Contract Act, 1872] (pdf) (in ஆங்கிலம்). www.indiacode.nic.in. 1872. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2024.
 5. சொத்து பரிமாற்ற சட்டம் [The Transfer of Property Act, 1882] (pdf) (in ஆங்கிலம்). www.indiacode.nic.in. 1882. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2024.
 6. சாலை வழி பண்டம் நகர்த்தல் சட்டம் [The Carriage by Road Act, 2007] (pdf) (in ஆங்கிலம்). www.indiacode.nic.in. 2007. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2024.
 7. சாலை போக்குவரத்து கழகங்கள் சட்டம் [The Road Transport Corporations Act, 1950] (pdf) (in ஆங்கிலம்). www.indiacode.nic.in. 1950. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2024.
 8. "மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துதல்". இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை. 2018-08-28. Archived from the original on 2024-01-22. பார்க்கப்பட்ட நாள் 2024-01-21.
 9. குமார், நிதின் (17 சூன் 2023). "உங்கள் மோட்டார் காப்பீட்டை எப்போது, எப்படி புதுப்பிப்பது - விவரங்கள் இங்கே" (in en). ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ். https://www.financialexpress.com/money/insurance-when-and-how-to-renew-your-motor-insurance-details-here-3129419/. 
 10. தவான், சுனில் (11 செப்டம்பர் 2019). "காப்பீட்டு ஆவணம் காலாவதியானதா? காலாவதியான 90 நாட்களுக்குள் புதிய ஆவணத்தை வாங்கவும், அல்லது இந்த பலனை இழக்கவும்" (in en). ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ். https://www.financialexpress.com/money/insurance-policy-lapsed-purchase-a-new-policy-within-90-days-of-expiry-or-lose-this-benefit-1702971/. 
 11. "குறை தீர்க்கும் பொறிமுறை" [Grievance Redressal Mechanism] (in ஆங்கிலம்). இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2024.
 12. "புகார்கள் மற்றும் குறைகள்" [Complaints and Grievances] (in ஆங்கிலம்). பொது காப்பீட்டு மன்றம். பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2024.