வர்னா இடுகாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வர்னா இடுகாடு ( Varna Necropolis ) (பல்கேரிய: Варненски некропол) (also Varna Cemetery) என்பது கி.மு. 4569–4340 காலகட்டத்திய தொல்லியல் சிறப்புவாய்ந்த ஒரு இடுகாடு ஆகும். இது வர்னா ஏரிக் கரையில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அக்காலகட்டத்தைச் சேர்ந்ததும், உலகின் பழமையான தங்கப் புதையலும், இந்தத் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

தற்போது வர்னா தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ள களிமண் தலை. இது வர்னா ஏரிக்கரையில் அகழப்பட்டது. இத்தலை பொ.ச.மு. 4500-4000 காலகட்டத்தைச் சேர்ந்தது.

கண்டுபிடிப்பும், அகழ்வும்[தொகு]

இந்த தளமானது தற்செயலாக 1972 அக்டோபரில் அகழ்வாராய்வாளர் ரோகோ மாரினோவ்னால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் மதிப்பை முதலில் உணர்ந்தவர் டால்கோபாலின் வரலாற்று அருங்காட்சியகத்தை உருவாக்கிய டிமிடார் ஜல்டர்கி ஆவார். உள்ளூர்காரர்கள்தான் அவற்றை ஆராய்வதற்காக அவரை அழைத்துவந்திருந்தனர். இந்தக் கண்டுபிடிப்பானது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை அவர் உணர்ந்தார், எனவே அவர் வர்னா வரலாற்று அருங்காட்சியகத்தை தொடர்பு கொண்டார். அரசாங்க ஆவணங்களில் கையெழுத்திட்டபின், மிஹைல் லாசாரோவ் (1972-1976) மற்றும் இவான் இவனோவ் (1972-1991) ஆகியோர் ஆராய்ச்சியை மேற்கொண்டார். இன்னும் 30% பகுதியில் அகழ்வாராய்ச்சி முடிக்கப்படவில்லை.

வர்னா அகழ்வாராய்ச்சியில் 1972 தொடங்கி இதுவரை 294 கல்லறைகள் தோண்டப்பட்டுள்ளன.[2] இதில் பல பழங்கால உலோகவியல் (தங்கம் மற்றும் செப்பு) பொருட்கள், மட்பாண்டங்கள் (சுமார் 600 துண்டுகள், தங்க வண்ணப்பூச்சுகள் பூசப்பட்டவை உட்பட), உயர்தரமான சிறு கத்திகள், சிறிய அணிகலன்கள் போன்றவை கண்டறியப்பட்டன.

வர்னா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கல்லறையில் எடுக்கப்பட்ட ஆபரணங்கள்

காலகட்டம்[தொகு]

2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு மூலம் இந்தக் கல்லறைகள் கி.மு 4569-4340 காலத்தவை என கணிக்கப்பட்டன.[2][3] மற்றும் இந்த வர்னா நாகரீகமானது செப்புக் காலத்தைச் சேர்ந்தது என அறியப்பட்டது.

இறுதிச்சடங்குகள்[தொகு]

உலகின் பழமையான தங்க நகைகள் சிலவற்றுடன் கி.மு 4,600 - 4,200 காலகட்டத்தில் வர்னாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஒரு ஆணின் கல்லறை.

இந்தக் கல்லறைகளைத் தோண்டியபோது, சில கலைப் பொருட்கள், பழைய மட்பாண்டங்கள், எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், களிமண் பொம்மைகள் போன்றவை கிடைத்தன. அங்கே தோண்டப்பட்ட எல்லா கல்லறைகளிலும் எலும்புக்கூடுகள் இல்லை. சிலவற்றில் சுட்ட மண்ணால் ஆன பொம்மைகளும், சிலவற்றில் களிமண்ணால் ஆன, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளும், சிலவற்றில் மனிதனின் முக உருவங்களும் காணப்பட்டன. இவ்வாறானவை சடங்குகளுக்காக அமைக்கப்பட்ட அடையாளக் கல்லறைகள் (வெறுங்கல்லறை) ஆகும். இவற்றில் சுமார் 3,000 தங்கத்தாலான பொருட்கள் (ஏறத்தாழ 6 கிலோ எடை) கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் குறிப்பாக 43வது கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தின் அளவானது, அன்றைய காலகட்டத்தில் உலகத்தின் பிற பகுதிகளிலிருந்த தங்கத்தைக் காட்டிலும் அதிகமானது என்று கருதப்படுகிறது. மூன்று குறியீட்டு கல்லறைகளில் சுடப்படாத களிமண்ணின் முகமூடிகள் இருந்தன.

அந்த மனிதர்கள் வர்னா ஏரியைப் பயன்படுத்தி, கருங்கடல், மத்தியதரைக்கடல் வழியாகச் செழிப்பாகக் கடல் வணிகமும் செய்திருக்கிறார்கள் என்பதைக் காட்டியது. ஒருவேளை உலோக பொருட்கள் மற்றும் உப்புச் சுரங்கங்களில் இருந்து உப்பை ஏற்றுமதி செய்திருக்கலாம்.[சான்று தேவை] கல்லறைகளில் காணப்பட்ட மத்தியதரைக்கடல் ஸ்ப்லண்டிலஸ் குண்டுகள் பழங்காலத்தில் நாணயமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

கல்லறையில் காணப்பட்ட தங்கத்தினாலான பொருள்கள்.

இதில் உள்ள 43வது கல்லறையில் அந்தப் பகுதியில் வாழ்ந்த அரசன் அல்லது தலைவனை மிகவும் மரியாதையுடன் புதைக்கப் பட்டிருக்கிறான் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்தக் கல்லறையில் உள்ள ஆண் எலும்புக்கூடைச் சுற்றி ஏகப்பட்ட தங்க ஆபரணங்கள், அந்த எலும்புக்கூட்டின் கையில் தங்கத்தாலான ஒரு செங்கோல், கோடாரி போன்ற ஓர் ஆயுதம் என்று அந்தக் கல்லறை தனியாக மிளிர்வதே அதற்கு சான்றாகும்.

அருங்காட்சியகம்[தொகு]

இங்கு அகழப்பட்ட பொருட்களை வர்னா தொல்லியல் அருங்காட்சியகம் மற்றும் சோபியாவில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] Gems and Gemstones: Timeless Natural Beauty of the Mineral World, By Lance Grande
  2. 2.0 2.1 New perspectives on the Varna cemetery (Bulgaria) பரணிடப்பட்டது 2012-05-12 at the வந்தவழி இயந்திரம், By: Higham, Tom; Chapman, John; Slavchev, Vladimir; Gaydarska, Bisserka; Honch, Noah; Yordanov, Yordan; Dimitrova, Branimira; 1 September 2007
  3. Krauß, Raiko; Schmid, Clemens; Kirschenheuter, David; Abele, Jonas; Slavchev, Vladimir; Weninger, Bernhard (2018). "Chronology and development of the Chalcolithic necropolis of Varna I". Documenta Praehistorica 44: 282. doi:10.4312/dp.44.17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்னா_இடுகாடு&oldid=3659391" இலிருந்து மீள்விக்கப்பட்டது