உள்ளடக்கத்துக்குச் செல்

வண்ணப்பூச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலர்ந்த பச்சை வண்ணப்பூச்சு

வண்ணப்பூச்சு என்பது ஒரு திரவம் அல்லது ஒரு திரவமாகக்கூடிய கலவையாகும். அதை ஒரு பரப்பின் மேல் மெலிதான ஏடுகளாகப் பூசும் பொழுது அது ஒளி ஊடுருவ இயலாத வண்ணப்பூச்சு அடுக்காக ஒட்டிக்கொண்டு விடுகிறது.

வரலாறு

[தொகு]

சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்னரே காவிக்கல் உள்ளிட்ட இயற்கையில் காணப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு மஞ்சள் மற்றும் சிகப்பு நிறங்களில் காட்சி தரும் குகை ஓவியங்களை ஆதிமனிதர்கள் உருவாக்கியிருந்தனர். எகிப்தில் தேநேர்தேரா என அறியப்படும் மலைக் குகைகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டிய சுவர் ஓவியங்கள், கடந்த பல நூற்றாண்டுகளாக இயற்கையின் சீற்றத்திற்கு உள்ளாகி இருந்தும், இன்றும் வண்ணப் பூச்சின் நிறம் மங்காமல் தெளிவாகவும் வெளிச்சமாகவும் காணப்படுவது அக்காலத்து ஆதி மனிதர்களின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எகிப்தியர்கள் வண்ணங்களை தனித்தனியாக சில பசை வடிவம் கொண்ட பொருட்களுடன் கலந்து, ஒவ்வொரு வண்ணத்தையும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் தனிப்பட்ட விதத்தில் பூசினார்கள். இது ஒரு பெரிய விந்தையாகும். அவர்கள் அடிப்படையாக வெள்ளை, கருப்பு, நீலம், மஞ்சள், சிகப்பு மற்றும் பச்சை ஆகிய ஆறு வண்ணங்களை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. முதலில் வண்ணம் பூச வேண்டிய அனைத்து இடங்களையும் வெள்ளை நிற வண்ணம் கொண்டு பூசி நிரப்பினார்கள். பின்னர் கருப்பு வண்ணம் கொண்டு ஓவியங்களை வரைந்தார்கள். அதன்பின் மற்ற வண்ணங்களைப் பயன்படுத்தி நிரப்புவார்கள்.

ஆரடியா நகரில் ரோம் தோன்றும் முன்னரே வரையப்பட்ட சில மேற்கூரை ஓவியங்கள் இருந்ததாக பிளினி கூறுகிறார். பல நூற்றாண்டுகள் கழிந்தும் அதன் புதுமை மாறாமல் இயல்பாக இருப்பதைக் குறித்து பெரிய ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் வெளிப்படுத்துகிறார்.

முட்டைகளில் இருக்கும் மஞ்சள் கருவைக் கொண்டு வண்ணப் பூச்சுகள் தயாரிக்கப்பட்டதால், கலவை உலர்ந்தபின், இவ்விதமான பொருட்கள் பூசிய தளத்துடன் கெட்டியாக ஒட்டிக்கொண்டு விடும். இதற்கு தேவையான நிறமிகளை தாவரங்கள், மணல்கள், மற்றும் வெவ்வேறு மண் வகைகள் பயன்படுத்தித் தயாரித்தார்கள்.

ஆக்கக்கூறுகள்

[தொகு]

நிறமி

[தொகு]

வண்ணப்பூச்சின் நிறம், கெட்டித்தன்மை, தன்மை மற்றும் அதன் விலை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு நிறமி அதனுடன் சேர்க்கப்படுகிறது. சில ஓவியங்களில் நிறமிகளுக்குப் பதிலாக சாயப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

இயற்கை அல்லது செயற்கை நிறமிகள் என இரு வகை உண்டு. களிமண், சுண்ணாம்பு (கால்சியம் கார்பனேட்) உள்ளிட்டவை இயற்கை வகை நிறமிகள் ஆகும். நீற்றிய களிமண்கள், வெறுமிட நிரப்பி, மீள வைத்த கால்சியம் கார்பனேட் மற்றும் செயற்கை சிலிக்கா போன்றவை செயற்கை வகை நிறமிகளுள் அடங்கும்.

பார்வையிலிருந்து மறைந்திடும் நிறமிகள் கொண்ட (கெட்டியான) ஒளி ஊடுருவ இயலாத வண்ணப்பூச்சுகள் பூசுபரப்பைப் பாதிக்கும் புற ஊதா ஒளியிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. டைட்டானிய டையாக்சைடு, தலீன் நீலம், சிகப்பு இரும்பு ஆக்சைடு ஆகியவை கண்ணுக்குத் தெரியாதவகை நிறமிகளுள் அடங்கும்.

நிரப்பிகள் என்பவை நிறமியின் ஒரு தனிப்பட்ட வகையாகும். அவை வண்ணப்பூச்சின் மெல்லிய தோலை கெட்டியாக்கவும், அதன் தோற்றத்தை மெருகூட்டவும் மற்றும் வண்ணப்பூச்சின் கொள்ளளவை அதிகரிக்கவும் உதவும். நிரப்பிகள் இயல்பாக விலை குறைந்தவையாகவும் மற்றும் வினைபுரியாதவையாகவும் இருக்கும். மண், மாக்கல், சுண்ணாம்பு, களிமண் மற்றும் பல நிரப்பிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. தேய்மானத்திற்கு உட்படும் நில ஓவியங்கள் பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க, நயமான படிகக் கல் மணல் கூட நிரப்பியாக பயன்பட்டு இருக்கலாம். நிரப்பிகள் எல்லா வண்ணப்பூச்சுகளிலும் இருக்காது. இருந்தாலும், சில வண்ணப் பூச்சுகள் மிகையான அளவில் நிறமிகள், நிரப்பிகள் மற்றும் இணைப்பிகள் கொண்டிருக்கலாம்.

ஈய வண்ணப்பூச்சுகளில் உள்ள ஈய நிறமிகள் நச்சுத் தன்மை கொண்டதாகும். அமெரிக்காவின் நுகர்வோர் பொருட்கள் பாதுகாப்பு வாரியம் 1978 ஆம் ஆண்டில் குடியிருப்பு பகுதியில் ஈயம் உபயோகத்திற்குத் தடை விதித்தது. வண்ணப்பூச்சு தயாரிப்பாளர்கள் வெள்ளை ஈய நிறமிகளை குறைந்த நச்சு தன்மை வாய்ந்த டைட்டானிய டையாக்சைடு கொண்டு இடம்பெயர்த்தார்கள்.

பிணைப்பான் அல்லது ஊர்தி

[தொகு]

பிணைப்பான் என்பது வண்ணப்பூச்சின் தொலியாக அல்லது ஏடாகப் படியும் நிலையான பாகமாகும். முக்கியமாக இந்த பாகம் மட்டுமே இருந்தால் வண்ணப்பூச்சுக்கு போதுமானது. இதர பாகங்கள் பூச்சின் தொலி அல்லது ஏடிற்கு தேவைப்படும் பண்புகளைப் பொறுத்து, கீழே கொடுக்கப்பட்டது போல் சேர்க்கலாம்.

பிணைப்பான் கலவையின் பாகங்களை ஒன்றோடு ஒன்று நன்றாக ஒட்டிக்கொள்ள வைக்கும். வண்ணப்பூச்சின் மின்மினுப்பு ஆற்றல், நிலைப்புத்தன்மை, நெகிழ்வு மற்றும் வலிமை ஆகிய தன்மைகளை மேம்படுத்தும்.

பிணைப்பான்கள் என்பது இயற்கையாக அல்லது செயற்கையாக தயாரிக்கப் பெற்ற பிசின் வகைகள் ஆகும். அவற்றில் அக்கிரிலிக், பாலியூரெத்தேன், பாலியெஸ்டர், மெலாமின் பிசின் வகைகள், ஈப்பாக்சி பிசின் வகைகள் மற்றும் எண்ணெய் வகைகள் அடங்கும்.

பிணைப்பான்கள் உலர வைத்தல் மற்றும் பதப்படுத்துதல் இயக்க முறையைப் பொறுத்தும் வேறுபடுகிறது. உலரவைப்பது மற்றும் பதனிடுவது ஆகிய இரண்டும் வெவ்வேறு தயாரிப்பு முறைகள் என்பது குறிப்பிடத்தக்கது. உலரவைப்பது பொதுவாக கரைப்பானை அல்லது மெலிதாக்கியை ஆவியாக்குவதைக் குறிக்கிறது.[1] அதேபோல் பதனிடுவது என்பது பிணைப்பானை ரசாயனம் மூலம் பதனிடுவதைக் குறிக்கிறது. சில வகை வண்ணப்பூச்சுகளை உலர வைப்பது மட்டுமே போதுமானது.[2]

எளிதாக கரைப்பான் ஆவியாதல் மூலம் உலரத்தக்க பூச்சுகள் அரக்குப் பூச்சுகள் என அறியப்படுகின்றன. கரைப்பான் ஆவியான பின் ஒரு திடப் படலம் உருவாகிறது. இப்படலம் மீண்டும் கரைப்பானில் கரையத்தக்கது என்பதால் வேதி பாதுகாப்பு அவசியப்படும் இடங்களில் இவை ஏற்றதல்ல. பொதுவாக பதனிடும் பூச்சு வகைகளை விட கரைப்பான் வகை அரக்குப் பூச்சுகள் புற ஊதா ஒளிக்கு நல்ல எதிர்ப்புடன் செயல்பட்டாலும், அதன் அரிமானத்தடை குறைவாகும்,

லாடெக்ஸ் வண்ணப்பூச்சு பாலிமர் துகள்களை தண்ணீர் மூலம் சிதற வைப்பதாகும். லாடெக்ஸ் இரப்பருடன் இதற்கு எந்த தொடர்பும் இல்லை. இவ்வகையில் சிதறடித்து பரவலாக்குதல் குழம்பு பலபடியாக்கல் முறை மூலம் நடைபெறுகிறது. முதலில் தண்ணீர், மற்றும் பிறகு கரைப்பான், ஆவியாக வெளியேறுகின்றன. அதனால் லாடேக்சின் பிணைப்பான் பகுதிகள் நன்றாக ஊடுருவி கலந்து இணைகின்றன. பிரிக்க இயலாதவாறு வேதி மாற்றம் அடைகின்றன.

குறுக்கிணைப்பு அடிப்படையில் அமைந்த வண்ணப்பூச்சுகள் ஒரேமுறையில் பூசும் வகையில் அமைந்தவை.[2]

மெழுகு வண்ணப்பூச்சுகள் வெதுவெதுப்பாக உள்ள போது திரவமாகின்றன. குளிர்ந்த பின்னர் கெட்டியாகின்றன. பல சந்தர்ப்பங்களில், அவற்றை மறுபடியும் சூடுபடுத்தும் போது, அவை மிருதுவாகவோ, திரவமாகவோ மாறுகின்றன. சமீபத்திய சுற்றுப்புற தேவைகள் எளிதில் ஆவியாகிற பொருட்களின் உபயோகத்தைத் தடுக்கின்றன.

கரைப்பான்

[தொகு]

கரைப்பான்களின் முக்கிய பயனாவது வண்ணப்பூச்சின் பாகுநிலை மற்றும் வலிவை சரிப்படுத்துவதாகும். அது எளிதில் ஆவியாகும் தன்மையுடையதாய் இருக்கும். வண்ணப்பூச்சின் படலத்தின் பாகமாக அது ஆவதில்லை. வண்ணப்பூச்சின் பாய்வு, பயன்பாட்டுக் குணங்களையும் இது கட்டுப்படுத்துகிறது. எனவே திரவ நிலையில் வண்ணப்பூச்சின் ஸ்திரநிலையை இது பாதிக்கும். அதன் முக்கிய வேலையானது எளிதில் ஆவியாகாத பகுதிகளை சுமக்கும் சாதனமாகத் திகழும். வீட்டு உள்புற ஓவியத்தின் பளுவான எண்ணெயை சுமக்க ஒரு மெல்லிய எண்ணெய் தேவைப்படுகிறது. இந்த எளிதில் ஆவியாகிற பொருட்கள் தங்கள் குணங்களை வண்ணப்பூச்சுக்கு தற்காலிகமாகக் கொடுக்கின்றன. கரைப்பான் ஆவியானதும் எஞ்சிய பூச்சு பரப்பின் மேல் பொருந்தியிருக்கிறது. நீர் எதிர்ப்பு, எண்ணெய்ப்பசை எதிர்ப்பு அல்லது அதைப் போன்ற தன்மைகள் தேவைப்பட்டால் கரைப்பான்களில் சேர்க்கப்படுகின்றன.

உபப் பொருட்கள்

[தொகு]

வண்ணப்பூச்சு பலவகை கலந்த சேர்ப்பான்களைப் பெற்றிருக்கும். அவை சிறிதளவில் சேர்க்கப்பட்டு பொருளின் மேல் விசேட விளைவை ஏற்படுத்தும். அவை வெளிப்புற இறுக்கத்தை மாற்ற உதவும்; ஓட்டத்தன்மைகளை செம்மையாக்கும்; முழுமையடைந்த தோற்றத்தை செம்மையாக்கும்; ஈர முனையை அதிகரிக்கும்; வர்ண நிரந்திரத்தை செம்மையாக்கும்; உறைதல் தடுப்பைக் கொடுக்கும்; பதப்படுத்துதலை அடக்கும் மற்றும் பல. மற்ற சேர்ப்பான் வகைகள் வினையூக்கி, தடிப்பாக்கி, பால்மமாக்கி, தோற்றமளிப்பான், இணைப்பான் ஆதரிப்புகள், நுண் உயிர் எதிர்ப்பி, நுண் உயிர் கொல்லி ஆகிய வகைகளில் வரலாம். ஒரு தயாரிப்பு முறையின் உள்ளடங்கிய பகுதியின் சதவீதத்தை வழக்கமாக சேர்ப்பான்கள் விசேடமாக மாற்றாது.[3]

வண்ண மாற்றப் பூச்சு

[தொகு]

நிறம் மாறும் தன்மை கொண்ட வண்ணப்பூச்சுகளை தயாரிக்க பல தொழில்நுட்ப முறைகள் உள்ளன. வெப்பமுறும்போது நெகிழ்வுறும் பொருட்களைக் கொண்டு அவை நிறம் மாறுகின்றன. ஒளிமாற்ற வண்ணப்பூச்சுகளில் யுவி வெளிச்சத்திற்கு உட்படுத்தப்படும்போது நிறமாற்றம் நிகழ்கிறது. இத்தகைய பொருட்கள் கண்கண்ணாடிகள் உருவாக்க உபயோகப்படுத்தப்படுகின்றன.

மின்மாற்ற வண்ணப்பூச்சுகள் மின்சாரம் செலுத்தப்படும் போது நிறம் மாறும். கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் தனது வாகனங்களில் மின்மாற்ற வண்ணப்பூச்சுகள் பயன்படுத்தவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இணைகாந்த இரும்பு ஆக்சைடு துகள்கள் கொண்டு இத்தொழில்நுட்பம் செயலுறுத்தப்படுகிறது. மின்காந்த புலத்தில் செயல்படும்போது இந்த இணைகாந்த துகள்களின் இடைவெளி மாற்றம் கண்டு நிறம் மற்றும் பளபளப்பு தன்மை மாறுகிறது.[4]

கலை

[தொகு]
தூரிகை மூலம் நீரினில் கலந்த வண்ணங்களை உபயோகிக்கிறார்கள்

மறுமலர்ச்சிக் காலம் முதல் எண்ணெய் வண்ணப்பூச்சு (முதன்மையாக ஆளி விதை எண்ணெய்) நுண்கலை ஓவியங்களில் பொதுவாகப் பயன்பட்டது. எண்ணெய் வண்ணப்பூச்சு இன்றும் உபயோகத்திலுள்ளது. பால் பூச்சு (கேசீன் என்று அழைக்கப்படும்) பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரபலமாய் இருந்தது. இன்றும் பயன்பாட்டில் உள்ளது. எண்ணெயுடன் முட்டையின் மஞ்சள் கரு கலந்து உருவாக்கப்படும் முட்டைப் பூச்சும் பயன்பாட்டில் உள்ளது. கௌசே என்னும் ஒளி ஊடுருவா நீர்வண்ணம் மத்திய காலங்கள் மற்றும் மறுமலர்ச்சிக் காலங்களில் கையெழுத்துப் பிரதி எழுத்துகளுக்கு ஒளியூட்ட பயன்பட்டன. கௌசே வர்த்தக ரீதியாய் இன்றும் கிடைக்கத்தக்கதாய் இருக்கிறது.

சுவரொட்டி வண்ணப்பூச்சு முதன்மையாக மாணவர்களின் மற்றும் குழந்தைகளின் படைப்புகளில் பயன்பாட்டிலுள்ளது.

தனிப்பட்ட சிப்பி ஓடுகளை ஓவியர்கள் வண்ணப்பூச்சு வைத்திடும் சிறிய கிண்ணமாக உபயோகப்படுத்துகிறார்கள்.

பயன்பாடு

[தொகு]

வண்ணப்பூச்சு திட, திரவ அல்லது வாயு நிலையில் பிரயோகிக்கப்படலாம். திடமான வண்ணப்பூச்சு அதிக வெப்பத்திற்கு சூடுபடுத்தப்பட்ட ஒரு நுண்ணிய பொடியாக பயன்படுத்தப்படுகிறது. இது பொடியை உருக்கி வெளிபரப்புடன் ஓட்ட உதவுகிறது. பொடிப் பூச்சு என்றும் இது பொதுவாக வழங்கப்படுகிறது.

வாயு அல்லது வாயு போன்ற திரவமாக பயன்படுத்தப்படுவதில் வண்ணப்பூச்சு ஒரு பொருளின் மீது தூவப்படும். வண்ணப்பூச்சு பொருளோடு ஒட்டிக்கொள்ளும். இது வழக்கமாக தூறல் வண்ணப்பூச்சு என்று கூறப்படுகிறது. இதன் அனுகூலங்கள்:

  • காற்றில் செயல்படுத்தும் தொழில்நுட்பம் என்பதால் திடப்பொருள் எதுவும் பூசும்பொருளைத் தொடாது;
  • வண்ணப்பூச்சு சீராய் இருக்கும், கூர் வரிகள் விழாது;
  • சிறு அளவில் வண்ணப்பூச்சை பரப்ப ஏதுவாகும்;
  • பிற நோக்க ரசாயனத்தையும் கலந்து தூவ முடியும்.

திரவ முறையில் வண்ணப்பூச்சு தூரிகைகள், வண்ணப்பூச்சு உருளைகள், கத்திகள், மற்ற உபகரணங்கள் அல்லது விரல்கள் போன்ற உடல் உறுப்புகள் கொண்டு வண்ணப்பூச்சுகள் நேரிடையாக உபயோகிக்கப்படுகின்றன.

தொழிற்சாலையில் பொதுவாக பயன்படுவது தூறல் பூச்சுகள். இதில் அழுத்தக் காற்று கொண்டு வண்ணப்பூச்சு துகளாக்கப்படுகிறது. இதனால் வண்ணப்பூச்சு சிறிய துளிகளாகத் திரிந்து பூசப்படவுள்ள பொருள் மீது போய்ச் சேரும்.

திரவ வண்ணப்பூச்சு பூசப்பட்ட பின்னர், "திறந்த காலம்" என்று அழைக்கப்படும் இடைவேளையில் கூடுதல் பூச்சுப் பகுதிகளோடு ("ஈர முனை"களில்) அவை கலக்கலாம். வெள்ளைச் சாராயம் கலப்பதன் மூலம் ஒரு எண்ணெயின் திறந்த காலத்தை அதிகப்படுத்த முடியும்.

சொட்டு சொட்டாக பூச்சை விடுவதன் மூலமும் அல்லது பொருளை மூழ்கவைத்து எடுப்பதன் மூலமும் கூட வண்ணப்பூச்சினை செய்ய முடியும்.

எண்ணெய் சார்ந்த வண்ணப்பூச்சுகள் உலர்ந்திருக்கும் போது நீடிக்கத்தக்கதாயும், கழுவத்தக்கதாயும் இருக்கும். வண்ணப்பூச்சு உலர அனேகமாக ஒருநாள் முழுவதும் எடுக்கும்.

நீர் சார்ந்த வண்ணப்பூச்சுகள் பாதுகாப்பானவை என்பதோடு எளிதில் சுத்தப்படுத்த ஏதுவானவையாகவும் உள்ளன.

வண்ணப்பூச்சு பாத்திரத்தை மீண்டும் இறுக மூடி நெடுங்காலம் பாதுகாப்பது என்பது கடினமாகும். சிறந்த மூடலுக்கு இது தலைகீழாக வைக்கப்படுகிறது. பூச்சு உறைந்து விடாமல் ஒரு குளிர்ந்த உலர்ந்த இடத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.

எஞ்சிய வண்ணப்பூச்சை முறையாகப் பயன்படுத்துவது என்பது ஒரு சவாலாகும். சில சமயங்களில் அது மறுசுழற்சி செய்யப்படுகிறது. பழைய வண்ணப்பூச்சு முதல் பூச்சு அல்லது இடைப்பட்ட பூச்சுக்காக பயன்படுத்தலாம்.

வண்ணப்பூச்சை கழித்திடும் அவசியம் ஏற்பட்டால், அதை உலர வைத்தல் ஒரு வழியாகும். அது கெட்டியாகும் வரை மூடியைத் திறந்து வைக்கலாம் (சிறிய அளவே செய்ய முடியும்). அல்லது அதை ஒரு வீண் பலகை மீது கொட்டலாம். பெரும் கடைகளில் பூச்சு கடினமாக்கி கொண்டிருப்பார்கள். பெரும் அளவிலான வண்ணப்பூச்சை காலி செய்ய இது உதவும். ஈரமான எண்ணெய் சார்ந்த வண்ணப்பூச்சுகள் இடர் விளைவிக்கத்தக்க கழிவுகளாய் கருதப்பட்டு பிராந்திய வரன்முறைகளின்படி அகற்றப்படுதல் வேண்டும்.[5][6]

வேறுபட்ட தயாரிப்புகள்

[தொகு]
வேறுபாடு உடைய வண்ணப்பூச்சுகளை மூடியுள்ள பாத்திரங்களில் சேர்த்து வைத்திடவேண்டும்.
  • பிரைமர் வண்ணப்பூச்சு பூசும் முன்னர் பொருட்கள் மேல் போடப்படும் ஒரு ஆயத்த பூச்சாகும். பிரைமிங் வண்ணப்பூச்சின் ஒட்டிக்கொள்ளும் தன்மையை அதிகரிக்கும். ஓவியத்தின் எளிதில் தேயாமையை அதிகரிக்கும். பூசப்படும் பொருட்களுக்கு கூடுதலான பாதுகாப்பு கொடுக்கும். இது கறையை மூடி மறைக்க மற்றும் தடுக்க பயன்படுத்தப்படும். அல்லது பூசப்படும் பொருளின் முந்தைய நிறத்தை மறைக்க உதவும்.
  • [[உள்புற அல்லது வெளிப்புற பாகங்களுக்கு பயன்படுத்தப்படும் பால் அல்லது குழம்பு போன்ற வண்ணப்பூச்சு, உள்புற அல்லது வெளிப்புற பாகங்களுக்கு பயன்படுத்தப்படும் பால் அல்லது குழம்பு போன்ற வண்ணப்பூச்சு]] ஒரு நீர் சார்ந்த வண்ணப்பூச்சாகும்.
  • வார்னீசு, செலாக் போன்றவை பூசப்படும் பொருளுக்கு நிறம் மாற்றாமல் ஒரு பாதுகாப்பு படலத்தை அளிக்கின்றன. இவை நிறமிகள் இல்லாத வண்ணப்பூச்சுகள் ஆகும்.
  • சுவரோவிய மற்றும் கலை ஓவிய வண்ணப்பூச்சின் உலரும் நேரத்தைக் குறைக்கவும் மற்றும் காணும் தன்மை அதிகரிக்கவும் கிளேஸ் என்னும் சேர்ப்பான் வண்ணப்பூச்சுடன் சேர்க்கப்படுகிறது.
  • கூரை மேற்பூச்சு என்பது ஒரு திரவம் சார்ந்த மெல்லிய படலமாகும். இது நெகிழ்வுறும் தன்மை கொண்டது என்பதால் நீட்சியுறவும் பின் சேதாரமின்றி பழைய நிலைக்குத் திரும்பவும் முடியும்.
  • விரல்வண்ணப்பூச்சு விரல்கள் கொண்டு இடும் ஒரு வகை வண்ணப்பூச்சாகும். உதாரணமாக பானைகளில் வரையப்படும் ஓவியங்களைக் கூறலாம். சிறுவர்களாலும் இது பயன்படுத்தப்படுகிறது.
  • சித்திர மைகள் வண்ணப்பூச்சுகளுக்கு ஒப்பாகும்.
  • டைட்டானியம் டையாக்சைடு வீட்டு வண்ணப்பூச்சு மற்றும் ஓவிய வண்ணப்பூச்சில் பெருமளவில் உபயோகப்படுகிறது. டைட்டானியம் வண்ணப்பூச்சு அகச்சிவப்புக் கதிர்களை நன்கு பிரதிபலிக்கும்.
  • சுவரொட்டிஎதிர் பூச்சுகள் சுவரொட்டிகளால் உருவாகும் கோடுகளையும் விகாரங்களையும் அகற்ற பயன்படுகின்றன.
  • ஏற்ற எதிர்ப்பு பூச்சுகள் உலரா பூச்சுகள் ஆகும். இவை சாதாரணமாகத் தோன்றினாலும் மிகுந்த வழுக்கல் தன்மை உடையவையாக இருக்கும். கழிவுநீர்க் குழாய்கள் போன்ற செங்குத்தான குழாய்களில் பொதுவாக இவை வெளிப்பூச்சாகப் பூசப்படும்.

அபாயங்கள்

[தொகு]

வண்ணப்பூச்சில் இருக்கும் எளிதில் ஆவியாகும் அல்லது வெடிக்கும் சேர்மங்கள் (VOC) சுற்றுச்சூழலுக்கும் வண்ணம் பூசும் வேலை செய்பவர்களுக்கும் பெரும் அபாயம் விளைவிப்பதாய் கருதப்படுகிறது. அமெரிக்காவில் சுற்றுச்சூழல் வரன்முறைகளும் நுகர்வோரிடமிருந்தான கோரிக்கைகளும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் இத்தன்மை குறைந்த அல்லது முற்றிலும் இல்லாத சேர்மங்களுடனான வண்ணப்பூச்சுகளின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த புதிய வண்ணப்பூச்சு வகைகள் சுற்றுச்சூழலுக்குக் குறைந்த தீமையிழைப்பவையாய் இருப்பதோடு செலவும் குறைந்ததாய் உள்ளன.

குறிப்புதவிகள்

[தொகு]
  1. * பெறேண்ட்சென், ஏ. எம்., & பெறேண்ட்சென், ஏ. எம். (1989). கடல் சார்ந்த ஓவியங்களின் கைந்நூல் (பாடப்புத்தகம்) . லண்டன்: கிரகாம் & ட்றோட்மன். ஐஎஸ்பிஎன் 1853332860, பக். 113.
  2. 2.0 2.1 பெறேண்ட்சென், ஏ. எம்., & பெறேண்ட்சென், ஏ. எம். (1989). கடல் சார்ந்த ஓவியங்களின் கைந்நூல் (பாடப்புத்தகம்) . லண்டன்: கிரகாம் & ட்றோட்மன். ஐஎஸ்பிஎன் 1853332860, பக். 114.
  3. "தயாரிப்பு முறைகள், அடிப்படைகள், கையாளுகை, கணிப்பு மற்றும் தரவு நிர்வாகம்" பரணிடப்பட்டது 2010-02-11 at the வந்தவழி இயந்திரம் பக். 61.
  4. "டெய்லிடெக் - நிசான் ஊர்திகளுக்கு தேவையான வண்ணத்தை மாற்றியமைத்து மேம்படுத்துகிறது". Archived from the original on 2011-07-08. பார்க்கப்பட்ட நாள் 2010-03-22.
  5. ""வண்ணப்பூச்சினை பாதுகாப்பாக உபயோகித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விநியோகித்தல்"". Archived from the original on 2007-02-24. பார்க்கப்பட்ட நாள் 2010-03-22.
  6. "வண்ணப்பூச்சின் சேமிப்பு மற்றும் விநியோக உண்மைகள்"

கூடுதல் வாசிப்பு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணப்பூச்சு&oldid=3570773" இலிருந்து மீள்விக்கப்பட்டது