உருளைப்புழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வட்டப்புழு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உருளைப்புழு
(நேமதோடா)
Nematodes
Soybean cyst nematode and egg SEM.jpg
சோயாபீன் நீர்மப்பை உருளைப்புழுவும் முட்டையும் (உருளைப்புழுக்களில் ஒரு வகை)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
துணைத்திணை: Eumetazoa
தரப்படுத்தப்படாத: Bilateria
தொகுதி: நேமதோடா
Diesing, 1861
வகுப்புகள்
 • Chromadorea
 • Enoplea
வேறு பெயர்கள்

Nematoidea Rudolphi, 1808
Nematodes Burmeister, 1837
Nemates Cobb, 1919
Nemata Cobb, 1919

உருளைப்புழு (roundworm) என்பவை நேமதோடா (phylum: nematoda) என்னும் தொகுதியைச் (phylum) சார்ந்தவைகளாகும். இந்த தொகுதியின் கீழ் வாழும் இந்த புழுக்களில் ஏறத்தாழ 80,000 சிற்றினங்கள் உள்ளன. அவற்றுள் 15000 ஒட்டுண்ணிகள் வகையைச் சார்ந்தது ஆகும். மேலும் இந்த தொகுதியின் கீழ் வாழும் கணக்கில் உள்ள மற்றும் கணக்கில் இல்லாத சிற்றினங்கள் மொத்தம் 500,000 இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உருளைப்புழுக்கள் நீளமான குழல் போன்ற உடல் அமைப்பினை கொண்டவை; இவற்றின் உடலில் செரிக்கும் பகுதிகளும் குழாய் அல்லது குழல் வடிவானவை. நீளமான உடலின் இரு முனைகளிலும் திறப்புகள் (துளைகள்) உண்டு.

வாழிடம்[தொகு]

உருளைப்புழுக்கள் எந்த வகையான வாழ் சூழலியலிலும் வாழப் பழகிகொண்டவை. பனிப் பகுதிகளிலும், சமவெளிகள், காடுகள் என அனைத்து இடங்களிலும் இவை காணப்படும். அண்டார்டிக்கா போன்று மனிதர்கள் வாழ முடியாத இடங்களில் கூட இவை வாழ்கின்றன. ஆழ் கடலில் காணப்படும் 90 விழுக்காடு உயிர்கள் உருளைப்புழு வகையை சார்ந்தவை. இதனை அவைகள் கிரிப்டோபயோசிசு (cryptobiosis) என்கிற வழிமுறை மூலம் செய்கின்றன. கிரிப்டோபயோசிசு மூலம் உருளைப்புழுக்கள் தங்களின் வளர்சிதைமாற்றத்தை (Metabolism) தற்காலிகமாக நிறுத்திக் கொள்கின்றன.

உடற்கூற்றியல்[தொகு]

ஒரு ஆண் C. elegans நெமட்டோட்டின் உடலகக் கட்டமைப்பு
 • முப்படையுள்ள விலங்குகள்.
 • புரொட்டோஸ்டோம் விருத்தியைக் காண்பிப்பவை.
 • இருபக்கச் சமச்சீரான விலங்குகள்.
 • துண்டுபடல் இல்லை.
 • தலையாக்கம் உண்டு. எனினும் தலை தெளிவற்றது.
 • போலி உடற்குழி (pseudocoel) உள்ளது. அதாவது மெய்யான உடற்குழி இல்லை. போலி உடற்குழி உணவுக்கால்வாய் அகவணிக்கும் உடற்சுவருக்கும் இடைப்பட்டதாக உள்ள பாய்மம் நிரம்பிய பகுதியாகும். இது உணவுக் கால்வாயூடாக உணவைத் தள்ளுவதிலும், நீர்நிலையியல் வன்கூடாகவும் தொழிற்படுகின்றது.
 • கொலாஜினால் ஆன புறத்தோல் காணப்படும்.
 • நீள்பக்க / நெடுங்கோட்டுத் தசைகள் மாத்திரம் நான்கு கட்டுக்களாக உடற்சுவருக்கு இணைக்கப்பட்ட வகையில் உள்ளன.
 • வாழ்க்கை வட்டத்தின் எந்தவொரு நிலையிலும் இவற்றில் அசையக்கூடிய பிசிர்கள் உருவாக்கப்படுவதில்லை. சில நரம்புக் கலங்களில் மட்டும் புலன் தொழிலைச் செய்வதற்காக பிசிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 • நரம்புத் தொகுதி: நான்கு திண்ம நரம்பு நாண்கள் தொண்டையைச் சூழவுள்ள நரம்பு வளையத்திலிருந்து முதுகுப்புற, வயிற்றுப்புற, பக்கப்புறங்களில் முழு உடலின் நீளத்துக்கும் செல்லும். முதுகுப் புற நரம்பு நாண் அசைவுகளைக் கட்டுப்படுத்தவும், பக்கப்புற நரம்பு நாண் புலன் தேவைக்காகவும், வயிற்றுப்புற நரம்பு நாண் இரண்டு வகைக் கட்டுப்ப்பாட்டுக்காகவும் தொழிற்படுகின்றன. நரம்பு வளையத்திலிருந்து முற்பக்கமாக தலையிலுள்ள புலனங்கங்களுக்குப் பல சிறிய நரம்பு நாண்களும் செல்லும். நரம்புத் தொகுதியில் பல நரம்புத் திரட்டுக்களும் காணப்படுகின்றன. உடலில் பல தொடுகை வாங்கிகளும், இரசாயன உணரிகளும், சிம்பிகளும் (papillae), சிலவற்றில் கட்புள்ளிகளும் உள்ளன. இவை கணத்தாக்கங்களை மூளையாகச் செயற்படும் தொண்டைச்சுற்று நரம்பு வளையத்துக்கு அனுப்புகின்றன.
 • சமிபாட்டுத் தொகுதி: வாய், குதம் உள்ள முழுமையான உணவுக் கால்வாய் நெமற்றோட்டுக்களில் உள்ளது. உணவை உறிஞ்சும் ஆற்றலுள்ள தொண்டையும், வாயில் புறத்தோலும் பற்கள் போன்ற விசேட அமைப்புக்களும் காணப்படலாம். இரைப்பை இருப்பதில்லை. தொண்டையிலிருந்து உடலின் முழு நீளம் வரை சென்று குதத்தில் முடிவடையும் குடலே இத்தொகுதியின் பிரதான கட்டமைப்பாகும். இக்குடலில் தசைகள் இருப்பதில்லை.
 • கழிவகற்றல் எளிய கழித்தற் கான்கள் மூலம் நிகழும்.
 • பருமன்: அனேகமானவற்றின் நீளம் 0.1-2.5 mm. எனினும் சுயாதீன வாழிகளில் உயர்ந்தபட்சமாக 5cm உம், ஒட்டுண்ணிகளில் மீற்றர்களில் உயர்ந்தபட்ச நீளம் உள்ளது. அனேகமானவற்றின் தடிப்பு 5 - 100 µm வரையாகும்.

இனப்பெருக்கம்[தொகு]

ஆண் நெமற்றோட்டின் உடல் அந்தத்தில் உள்ள புணர்ச்சியங்கம். Bar = 100 µm [1]

அனேகமானவை ஓரிலிங்க விலங்குகள். (ஆண், பெண் வெவ்வேறு விலங்குகளாக இருக்கும்). இவை தெளிவான இலிங்கப் ஈருருவத் தோற்றத்தைக் (sexual dimorphism) காண்பிக்கின்றன. பொதுவாக பெண் நெமற்றோட்டு பெரிதாகவும், ஆண் நெமற்றோட்டு சிறியதாகவும் உள்ளன. பெண் விலங்கில் சூலகம், சூலகக் கான், கருப்பை ஆகிய பகுதிகளும், ஆணில் விதையும், விதைக் கானும் உள்ளது. நெமற்றொட்டுக்களில் அகக் கருக்கட்டலே நிகழ்கின்றது. இதற்காக ஆண் நெமற்றொட்டுக்களில் புணர்ச்சியங்கம் காணப்படும். இவற்றின் விந்துக்களில் சவுக்குமுளையோ, பிசிரோ இருப்பதில்லை. அமீபாப் போலி வடிவமான விந்துக்களே உருவாக்கப்படுகின்றன. அகக் கருக்கட்டலின் பின்னர் முளையமுள்ள கருக்கட்டப்பட்ட முட்டைகள் இடப்படும், இவற்றிலிருந்து சிறிய நெமற்றொட்டுக்கள் உருவாகின்றன. நெமற்றொட்டுக்களில் குடம்பி நிலைகள் சிலவற்றிலேயே உண்டு. சில ஒட்டுண்ணிகள் ஈரிலிங்கத்துக்குரியனவாக உள்ளன.

முக்கிய ஒட்டுண்ணி நெமற்றொட்டுக்கள்[தொகு]

 • கொக்கிப்புழு அல்லது கொழுக்கிப் புழு
 • பைலேரியாப் புழு- யானைக்கால் நோய்
 • Enterobius
 • Trichuris trichiura
 • Ascaris

மேற்கோள்கள்[தொகு]

 1. Lalošević, V.; Lalošević, D.; Capo, I.; Simin, V.; Galfi, A.; Traversa, D. (2013). "High infection rate of zoonotic Eucoleus aerophilus infection in foxes from Serbia.". Parasite 20: 3. doi:10.1051/parasite/2012003. பப்மெட் 23340229. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருளைப்புழு&oldid=1747291" இருந்து மீள்விக்கப்பட்டது