ரூமி-1
ரூமி-1 (RHUMI-1) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மறுபயன்பாட்டு கலப்பின ஏவூர்தியாகும். இந்த ஏவூர்தி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து, 2024 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 24 ஆம் தேதியன்று காலை 7.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[1]
மூன்று கியூப் செயற்கைக் கோள்களைச் சுமந்துகொண்டு, ஒரு நகரும் ஏவுதளத்தின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்ட இந்த ஏவூர்தி, செயற்கைக் கோள்களை புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்திவிட்டு, 9.34 நிமிடங்களில் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பிவிட்டதாக இந்திய விண்வெளி மண்டல நிறுவனம் தெரிவித்துள்ளது.[2][3]
இந்திய விண்வெளி மண்டல நிறுவனம்
[தொகு]தமிழகத்தைச் சேர்ந்த தனியார் தொடக்க நிறுவனமான இசுபேசு சோன் இந்தியா என்ற இந்திய விண்வெளி மண்டல நிறுவனம் ஏவூர்தி மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏவூர்தி மற்றும் செயற்கைக்கோள்களை வடிவமைத்து அவற்றை விண்ணில் செலுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனமும் மார்ட்டின் குழுமமும் இணைந்து மயில்சாமி அண்னாதுரையின் மேற்பார்வையில் இலக்குத்திட்டம் ரூமி 2024 என்ற பெயரில் மறுபயன்பாட்டு கலப்பின ஏவூர்தி ரூமி-1 என்ற ஏவூர்தியைத் தயாரித்துள்ளன.[4] [5]இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது மறுபயன்பாட்டு கலப்பின ஏவூர்தியாகும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவூர்தியைப் பயன்படுத்தி பல முறை செயற்கைக்கோளை விண்ணில் ஏவலாம் என கூறப்படுகிறது.
ரூமி-1 ஏவூர்தி
[தொகு]ரூமி-1 ஏவூர்தி 3.50 மீட்டர் உயரம் கொண்டது. கலப்பின ஏவூர்தி என்பதால் நீர்ம, திண்ம எரிபொருட்கள் இரண்டுமே ஏவூர்தியில் பயன்படுத்தலாம். இதனால் ஏவூர்தியின் செயல்முறை அதிகரிப்பதோடு, அதை விண்ணில் ஏவுவதற்கான செலவும் குறைகிறது. பூமியில் இருந்து வானத்தில் 80 கிலோமீட்டர் தொலைவு உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஏவூர்தியின் சில பாகங்கள் தவிர முக்கிய பாகம் வான்குடை வழியாக மீன்டும் பூமிக்குத் திரும்பும். இதில் அனுப்பி வைக்கப்பட்ட செயற்கைகோள்கள் புற ஊதா கதிவீச்சு, காமா கதிர்வீச்சு, காற்றின் தரம் உள்ளிட்ட தகவல்களைச் சேகரிக்க உதவும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இந்தியாவின் முதல் 'மறுபயன்பாட்டு ராக்கெட்' - விண்வெளி சென்று மீண்டும் திரும்பியது எப்படி?", BBC News தமிழ், 2024-08-25, பார்க்கப்பட்ட நாள் 2024-08-25
- ↑ "சென்னையில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ரூமி-1 ராக்கெட் பூமிக்கு திரும்பி சாதனை!", Hindu Tamil Thisai, 2024-08-25, பார்க்கப்பட்ட நாள் 2024-08-25
- ↑ "சென்னை அருகே விண்ணில் பாய்ந்தது ரூமி ராக்கெட்!". தினமணி. https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2024/Aug/24/1st-reusable-hybrid-rocket-rhumi-1-launches. பார்த்த நாள்: 25 August 2024.
- ↑ Bureau, The Hindu (2024-08-21), "T.N.-based aero tech company to launch reusable hybrid rocket from Chennai", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-08-25
- ↑ Ramanujam, Srinivasa (2024-08-24), "Mission Rhumi 2024: Chennai students cheer as India's first reusable hybrid rocket takes off", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-08-25