திண்ம எரிபொருள்
திண்ம எரிபொருள்(Solid fuel) என்பது ஆற்றலைப் பெறுவதற்காக எரிக்கப்படும் திட நிலையிலுள்ள பல்வேறு பொருட்களைக் குறிக்கிறது. இத்தகைய பொருட்கள் எரிதல் என்ற செயல்முறையின் மூலம் வெப்பத்தையும், ஒளியையும் தருவனவாக உள்ளன. திண்ம எரிபொருட்களை திரவ மற்றும் வாயு எரிபொருட்களிலிருந்து வேறுபடுத்த முடியும். திண்ம எரிபொருட்களுக்கான பொதுவான உதாரணங்கள் மரம், கரி, நிலக்கரி, எக்சமீன் எரிபொருள் வில்லைகள், மரத்தூள் வில்லைகள், சோளம், கோதுமை, புல்லரிசி மற்றும் இதர தானியங்களின் உமி மற்றும் தவிடு போன்றவை அவற்றில் சில. திண்ம எரிபொருட்கள் ஏவூர்திகளில் திண்ம ஏவுபொருளாக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.[1] மனித வரலாறு முழுவதிலுமே திண்ம எரிபொருளானது தீயை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.[2] தற்போதைய நாட்களில் கூட திண்ம எரிபொருளானது உலகெங்கிலும் பரந்த அளவில் பயன்பாட்டில் உள்ளது.[3][4]
திண்ம எரிபொருட்களின் வகைகள்
[தொகு]மரம்
[தொகு]மரத்திலிருந்து பெறப்படும் எரிபொருள் என்பது விறகுக்கட்டை, அடுப்புக்கரி, மரத்துண்டுத் தாள்கள், மரத்தூள் வில்லைகள், மற்றும் மரத்தூள் ஆகியவற்றைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட திண்ம எரிபொருள் அவற்றின் மூலம், அளவு, தரம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பல பகுதிகளில், மரம் தான் மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய எரிபொருளாக இருக்கிறது. பட்டுப்போன மரங்களை சேகரிப்பதற்கு சில கருவிகள் மட்டுமே தேவைப்படுகின்றன அல்லது சில சமயம் கருவிகள் ஏதும் தேவையேயில்லை. இன்று உயிர்ப்பொருட்களிலிருந்து கிடைக்கக்கூிய மரமே மிகப்பெரிய எரிபொருளாக விளங்குகிறது. மர எரிபொருளானது சமையலுக்கும், வெப்பத்தை உண்டாக்குவதற்கும், வெகு சில நேரங்களில் நீராவி இயந்திரத்திற்கும் மற்றும் மின்சக்தி உற்பத்திக்காக நீராவியால் இயங்கும் சுழலிகளைச் சுழற்றுவதற்கும் பயன்படுகிறது. மரங்கள் உலைகள் மற்றும் அடுப்புகளில் மூடப்பட்ட சூழலில் எரிக்கப்படுகின்றன. எப்படியாயிலும் மரத்தினை எரிக்கும் போது வெப்பம் மற்றும் நீராவியைத் தவிர்த்து ஏராளமான உபயோகமற்ற, தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உபபொருட்கள் கிடைக்கின்றன.
உயிரியப்பொருட்கள்
[தொகு]மரமும் கூட உயிரியப்பொருட்களின் விளைபொருளாகக் கிடைக்கும் எரிபொருளாக இருந்தாலும் கூட, இச்சொல் பெரும்பாலும் இயற்கையான தாவரங்களிலிருந்து அல்லது விலங்குகளிலிருந்து கிடைக்கக்கூடிய எரிபொருட்கள் அல்லது அவற்றை நுண்உயிரிகள் சிதைத்து தரக்கூடிய எரிபொருட்கள் ஆகியவற்றையே குறிக்கிறது. நிலக்கடலை, முந்திரி போன்றவற்றின் கூடுகள், வைக்கோல், வீணான கோதுமை போன்ற தானியக்கழிவுகள் ஆகியவையே பொதுவான உயிரிய எரிபொருட்கள் வகைப்பாட்டில் வருகின்றன.[5]
முற்றா நிலக்கரி
[தொகு]முற்றா நிலக்கரி என்பது பகுதியளவு சிதைவடைந்த தாவரப் பொருள் அல்லது திசுக்கூழ் ஆகும். இத்தகைய கரியானது நன்கு உலர்த்தப்பட்ட பிறகே எரிக்கப்பட முடியும்.
நிலக்கரி
[தொகு]நிலக்கரி என்பது தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும். இது தரைப்பரப்பின் கீழே தோண்டப்படும் சுரங்கங்கள் அல்லது குழிகள் போன்றவற்றின் வாயிலாக வெளிக்கொணரப்படுகிறது. பெரும்பாலும் கரி மற்றும் ஐதரோகார்பன்களால் ஆன நிலக்கரி கந்தகம் உட்பட்ட பல இதர வேதிப் பொருட்களையும் கொண்டிருக்கும். பன்னெடுங்காலமாகவே நிலக்கரியானது வெப்பத்தை உருவாக்கவும், மின்சாரம் தயாரிக்கவும், தொழிற்துறைப் பயன்பாடுகளிலும், உலோகங்கள் சுத்திகரிப்பிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதே போல், மனித நடவடிக்கைகளால் வெளிவிடப்படும் கார்பனீராக்சைடின் மிகப்பெரும் மூலமாகவும் நிலக்கரி எரித்தல் இருந்து வருகிறது.
கற்கரி
[தொகு]கற்கரி நிலக்கரியை விட எடை குறைந்ததும், குறைந்த மாசுக்களும், அதிக எரிதிறனும் கொண்ட இயற்கை எரிபொருளாகும்.[6] கற்கரி வகை நிலக்கரி, இயற்கையாகவே நிலத்தடியில் கிடைக்கிறது. நிலக்கரியிலிருந்து செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கற்கரியைை பெட்ரோலிய கற்கரி என்பர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Solid". www.astronautix.com. Retrieved 2017-03-09.
- ↑ "https://www.sciencedaily.com/releases/2012/04/120402162548.htm". www.sciencedaily.com. Retrieved 2017-03-09.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "Coal". www.iea.org. Archived from the original on 2017-03-12. Retrieved 2017-03-09.
- ↑ "Coal consumption statistics - Statistics Explained". ec.europa.eu (in ஆங்கிலம்). Retrieved 2017-03-09.
- ↑ "SOLID FUELS". soliftec. Retrieved 23 பெப்ரவரி 2019.
- ↑ Coke